திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரி தமிழ்த்துறை சார்பில் இதழ்களில் எழுதுவது எப்படி? என்னும் தலைப்பில் மாணவர்களுக்கான ஒருநாள் பயிற்சி பட்டறை நடந்தது.
கல்லூரி இளநிலை, முதுநிலைபட்ட மாணவர்களுக்காக நடத்தப்பட்ட இப்பயிற்சிப் பட்டறைக்கு கல்லூரி முதல்வர் சுப்பிரமணியம் தலைமை தாங்கினார். தமிழ்த்துறைத் தலைவர் கதிரேசன் வரவேற்று பேசினார். கல்லூரி செயலர் கோபாலகிருஷ்ணன் பயிற்சி பட்டறையை தொடங்கி வைத்து பேசினார். எழுத்தாளர் நெல்லை கவிநேசனும் நானும் (முத்தாலங்குறிச்சி காமராசு) மாணவர்களுக்கு பயிற்சி அளித் தோம்.
இந்த நிகழ்ச்சி எனது மனதுக்கு மிகவும் சந்தோஷத்தினை வரவழைத்தது. ஆரம்ப காலத்தில் எனது எழுத்து துறைக்காக பழைய தினகரன் நாளிதழில் கட்டுரை எழுத ஏற்பாடு செய்த நெல்லை கவிநேசன் அவர்களுடன் நான் கலந்து கொண்ட முதல் நிகழ்ச்சி, அது போலவே எனது முதல் சிறுகதை வெளியான கரிசல் காட்டு கதையில் முதுமொழி கதிரேசனும் சிறுகதை எழுதியிருந்தார். அவர் தமிழ் துறைதலைவராக பணியாற்றிய கல்லூரி பேசப்போகிறோம் என்பது மேலும் ஒரு சந்தோஷம்.
ஒரு கல்லூரியில் பயிற்சி பட்டறை நடத்துவது எப்படி என்பதை நெல்லை கவிநேசன் அய்யா பயிற்சி நடத்திய விதத்தில் இருந்து அறிந்துகொண்டேன். தான் 1976 ல் முதல் முதலில் எழுதிய படைப்புகளை மாணவர்களிடம் கொண்டு காட்டினார். அதை 42 வருடமாக பாதுகாத்து வைத்திருக்கிறாரே.. உற்சாகம் குறையாமல் அவர் எழுதிய சிறுகதை, யாரை பார்த்து எழுதினோம் எப்படி எழுதினோம் என மாணவர்களுக்கு கூறினார். அவருக்கு இதே இடத்தில் தான் எழுத்தாளர் தாமரை செந்தூர் பாண்டியனும், கருணாமணாளனும் சிறுகதை எழுதுவது எப்படி என நடத்தி காட்டினார்கள் என்று அவர் கூறினார். இன்று நான் 55 புத்தகம் எழுதி மிகப்பெரிய எழுத்தாளனாய் ஆக காரணம் இந்த அரங்குதான் என பெருமிதமாக கூறியபோது, மாணவர்கள் முகத்தில் நாங்களும் எதிர்காலத்தில் பெரிய எழுத்தாளராக மாறுவோம் என்ற தாக்கம் இருந்தது.
அதோடு மட்டுமல்லாமல் என்னை பற்றியும் அவர் மிக பிரமாண்டமாக அறிமுகம் செய்து வைத்தார். தொடர்ந்து மாலைநேர அமர்வில் மாணவர்களுக்கு துணுக்கு எழுதுவது எப்படி என ஆரம்பித்து, பயணக் கடடுரை எழுதுவது எப்படி என்பது வரை கூறிமுடித்தேன். வாழ்வில் கிடைக்காத பேரின்பம் தான். பட்டறையில் பங்கேற்ற 70 மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. பேராசிரியை எழிலி நன்றி கூறினார். இதில், பேராசிரியர்கள் ராஜேஷ், மகேஷ்வரி, ராஜசெல்வி, சுந்தரவடிவேல், தணிகாசலம், சேதுராமலிங்கம், மகேந்திரன், ரமேஷ், மாலைசூடும் பெருமாள், மருதையா பாண்டியன், பயின்றோர் கழக பொருளாளர் பகவதி பாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கடைசி வரை என்னுடன் இருந்து என்னை வழியனுப்பி வைத்த துறை தலைவர் கதிரேசன் அவர்களுக்கும். விருந்தோம்பலில் என்னை மிஞ்ச ஆளே இல்லை என மீண்டும் உணர்த்திய நெல்லை கவிநேசன் அய்யா அவர்களுக்கும் வாய்ப்பு தந்து உதவிய கல்லூரி முதல்வர் சுப்பிரமணியம், கல்லூரி செயலர் கோபாலகிருஷ்ணன் ஆகியோருக்கும் பெருமையுடன் கடைசி வரை இருந்து எங்களுக்கு ஊக்கம் கொடுத்த மாணவர்களுக்கும் நன்றி.