தமிழகம் முழுவதும் மிதமான மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நெல்லை தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த இரு தினங்களாக மிதமான மழையும், நீர்ப்பிடிப்பு பகுதிகளான மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழையும் பெய்து வருகிறது. இதனால் நெல்லை மாவட்டத்தில் உள்ள சேர்வலாறு, பாபநாசம், மணிமுத்தாறு, குண்டாறு உள்பட 6 அணைகள் வேகமாக நிரம்பி வருகிறது. பாபநாசம் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது இதனால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளதால் தாமிரபரணி ஆற்றின் கரையோரம் இருக்கும் கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இந்நிலையில் பாபநாசம் அணையில் இருந்து தாமிரபரணி ஆற்றில் திறக்கப்பட்ட தண்ணீர் இன்று மாலை தூத்துக்குடி மாவட்ட எல்லையான மருதூர் அணைக்கட்டை வந்தடைந்தது. அந்த அணைக்கட்டில் மருதூர் மேலக்கால் மற்றும் கீழக்கால் வழியாக தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. தற்போது 5000 ஆயிரம் கன அடி நீர் மருதூர் அணையை தாண்டி வந்து விழுகிறது. இந்நிலையில் மேலும் 10000 ஆயிரம் கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. நாளை அதிகாலை இந்த நீர் ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டுப்பகுதியை வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
====


