ஸ்ரீவைகுண்டம் அணையின் வடகாலில் தண்ணீர் திறக்க வலியுறுத்தி, பாஜக விவசாய அணி சார்பில் ஜூலை 3ம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீவைகுண்டம் அணையில் இருந்து பிரியும் வடகால் மூலம் பாசன வசதி பெறும் சுமார் 10 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமான விளைநிலங்களில் வாழை பயிரிடப்பட்டுள்ளது. போதிய தண்ணீர் இன்றி வாழைப் பயிர்கள் கருகி வரும் நிலையில், தாமிரவருணி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. கடந்த சில நாள்களுக்கு முன்பு அணையிலிருந்து திறக்கப்பட்ட தண்ணீர் திருநெல்வேலி எல்லையை தாண்டி வராததால் தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
இந்நிலையில், ஸ்ரீவைகுண்டம் அணையின் வடகால் வாய்க்காலில் கூடுதலாக தண்ணீர் திறக்க வலியுறுத்தி வருகிற ஜூலை 3ஆம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என பாஜக விவசாய அணி அறிவித்துள்ளது. இதுகுறித்து மாவட்ட விவசாய அணி பொதுச் செயலர் ராஜேந்திரன் தலைமையிலான நிர்வாகிகள் வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் காவல் நிலையத்தில் நேற்றுமனு அளித்தனர்.


