ஸ்ரீவைகுண்டத்தில் அனுமதியின்றி ஜல்லிக்கட்டு போட்டிக்கு பூமி பூஜை நடத்தியதாக 40 பேர் மீது போலிசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
ஸ்ரீவைகுண்டத்தில் வருகின்ற பிப்ரவரி மாதம் 25ம் தேதி மாநில அளவிலான ஜல்லிக்கட்டு நடத்த ஏறுதழுவுதல் பாதுகாப்பு இயக்கம் சார்பில் மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி கோரப்பட்டது. ஆனால் தூத்துக்குடி மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி இல்லை என மாவட்ட நிர்வாகம் தெரிவித்து விட்டது.
இதையடுத்து ஏறுதழுவுதல் பாதுகாப்பு இயக்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டு நிலுவையில் உள்ளது.
ஸ்ரீவைகுண்டத்தில் ஜல்லிக்கட்டு நடத்த இதுவரை அனுமதி கிடைக்காத நிலையில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான ஆயத்தப்பணிகளை ஏறுதழுவுதல் பாதுகாப்பு இயக்கத்தினர் நேற்று முன்தினம் தொடங்கினர்.
ஜல்லிக்கட்டு நடத்த திட்டமிடப்பட்டுள்ள இடத்தில் பூமி பூஜை நடத்தி அந்த இடத்தினை சுத்தப்படுத்தும் பணி துவங்கியது. இயக்க ஒருங்கிணைப்பாளர் ராஜா தலைமையில் நடந்த நிகழ்ச்சியில் உறுப்பினர்கள் மற்றும் பல்வேறு அமைப்பினை சேர்ந்தவர்களும் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் அனுமதியின்றி பூமி பூஜை நடத்தியதாக ராஜா உள்ளிட்ட 40 பேர் மீது ஸ்ரீவைகுண்டம் போலிசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.