செய்துங்கநல்லூரில் நேற்று இரவு ஏற்பட்ட தீ விபத்தில் 4 கடைகள் எரிந்து நாசமானது. செய்துங்கநல்லூர் 1வது வார்டு பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பெருமாள் என்ற ராஜ்(48). இவர் செய்துங்கநல்லூர் திருச்செந்தூர் மெயின் ரோடு, மேலபஜாரில் பஞ்சர் கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு அவர் கடையை மூடிவிட்டு வீட்டிற்கு சென்று விட்டார்.
அதிகாலை ஒரு மணியளவில் இவரது கடையில் இருந்து புகை வருவதை ரோந்து சென்ற போலீசார் கவனித்தனர். உடனே போலிசார் திருவைகுண்டம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தீ மளமளவென பரவி கடை மற்றும் வெளியில் கிடந்த டயர்களில் பற்றி எரிந்தது. இதனால் கடை மற்றும் இங்கிருந்த ஏர் கம்ப்ரஷர் மற்றும் டயர்கள் எரிந்து நாசமானது.
இதுபோல் பக்கத்தில் உள்ள டீக்கடை, பழக்கடை, ஜெராக்ஸ் கடை, போன்ற வற்றிலும் தீ பரவியது. தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை அணைத்தனர். இதன் சேத மதிப்பு ரூ.1 லட்சம் இருக்கும் என்று தெரிகிறது. செய்துங்கநல்லூர் இன்ஸ்பெக்டர் சோமன்ராஜன் விசாரித்து வருகிறார்.