
செய்துங்கநல்லூரில் இருசக்கர வாகனத்திற்கு மானியம் பெற கடைசி நாளான நேற்று ஏராளமான பெண்கள் குவிந்தனர்.
செய்துங்கநல்லூரில் கருங்குளம் ஒன்றிய அலுவலகம் இயங்கி வருகிறது. இங்கு கருங்குளம் ஒன்றியத்தில் உள்ள 31 பஞ்சாயத்தை சேர்ந்த பெண்களிடம் அம்மா இருசக்கரம் மானியம் வழங்கும் திட்டத்தின் கீழ் மனுக்கள் பெறப்பட்டது. இதில் 18 வயதில் இருந்து 40 வயது வரை உள்ள பெண்களிடம் மனு பெறப்பட்டது. தனியார் மற்றும் அரசு, வங்கி, மகளிர் குழு, தொண்டு நிறுவனம் போன்ற இடங்களில் பணிபுரியும் பெண்கள் இந்த மனுவை அளிக்க ஆர்வம் காட்டினர்.
இதற்கான பெண்கள் திருச்செந்தூர் ஆர்.டி.ஒ அலுவலகத்தில் பழகுனர் உரிமம் பெற்றனர். அதன் பின் கடைசி நாளான நேற்று காலை முதல் செய்துங்கநல்லூர் அலுவலகத்தில் குவிந்தனர். இவர்களிடம் மனுக்களை வட்டார வளர்ச்சி அலுவலர் வசந்தா பெற்று கொண்டார். மேலாளர் ஞானசேகர், சத்துணவு மேலாளர் சுரேஷ், பிரிவு எழுத்தர் நிஷா ஆகியோர் மனுக்களை சரி பார்த்து பெற்று கொண்டனர். இவர்களிடம் 235 மனுக்கள் பெறப்பட்டது.
இவர்களின் மனு பரிசீலிக்கப்பட்டு ஜெயலலிதா பிறந்த நாளான பிப்பிரவரி 24 ல் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு இருசக்கர மானியம் வழங்கப்படும்.