கிள்ளிகுளம் வேளாண்மைக் கல்லூரி நாட்டுநலப் பணித்திட்ட அமைப்பின் சார்பில் வல்லநாட்டில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வுப் பேரணி அண்மையில் நடைபெற்றது.
பேரணியை முறப்பநாடு காவல் உதவி ஆய்வாளர் வேல்ராஜ் கொடியசைத்து தொடங்கிவைத்தார். “தலைக்கவசம் உயிர்க்கவசம்”, “தலைக்கவசம் அணிவீர், உயிரிழப்பைத் தடுப்பீர்”, “சாலையில் அலைபேசி, ஆபத்தாகும் நீ யோசி”, “மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டாதீர்”, “மித வேகம் மிக நன்று” என்ற விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி பேரணியாக சென்ற மாணவர், மாணவிகள் பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினர். தொடர்ந்து, நாட்டுநலப்பணித் திட்ட அலுவலர்கள் ராஜாபாபு, ஷோபா ஆகியோர் தலைமையில் சாலைப் பாதுகாப்பு மற்றும் சாலை விதிகளை கடைப்பிடிப்பது தொடர்பான உறுதிமொழியை மாணவர், மாணவிகள் ஏற்றுக் கொண்டனர்.