சாத்தான்குளம் பேரூராட்சியில் குடிநீர் இணைப்பு தற்போது வழங்க அனுமதியில்லையெனவும், தவறான தகவலை நம்பி வைப்புத்தொகை யாரும் செலுத்த வேண்டாம் எனவும் பேரூராட்சி செயல் அலுவலர் தெரிவித்தார்.
இப்பேரூராட்சியில் வீடுகளுக்கு புதிய குடிநீர் இணைப்பு வழங்கப்பட உள்ளது எனவும், அதற்காக வங்கியில் ரூ.110-க்கு வரைவோலை எடுத்து வந்து முன்பதிவு செய்து கொள்ளலாம் எனவும் கட்செவி அஞ்சல் மூலமாக செய்தி பரவியது. இதையடுத்து ஏராளமானோர் வங்கியில் வரைவோலை எடுத்து பேரூராட்சியில் செலுத்தினர். இந்நிலையில் செயல் அலுவலர் நாகராஜன் செய்தியாளர்களிடம் கூறியது: பேரூராட்சியில் வீடுகளுக்கு புதிதாக குடிநீர் இணைப்பு வழங்கும் எந்தத் திட்டமும் பரிசீலனையில் இல்லை. பேரூராட்சி மூலம் குடிநீர் இணைப்பு வழங்கினால் முறைப்படி அறிவிப்பு செய்தபின்தான் செயல்படுத்தப்படும். எனவே பொதுமக்கள் தவறான தகவல்களை நம்பவேண்டாம் என்றார் அவர்.