சாத்தான்குளத்தில் ஆசிரியர் வீட்டில் மற்றும் குழந்தையிடம் நகை பறித்த முன்னாள் ஊராட்சி தலைவியின் மகன் உள்ளிட்ட இருவரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.
சாத்தான்குளம் தட்டார்மேலத் தெருவைச் சேர்ந்தவர் அ. பதுவைதுரை (37). இவர் பனைவிளையில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி மெல்வின், சாத்தான்குளத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியையாக உள்ளார். இவர்கள் கடந்த மாதம் 5ஆம்தேதி வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்றிருந்தபோது அவரது வீட்டின் பூட்டை உடைத்து வீட்டின் பிரோவில் இருந்த 4பவுன் நகை மற்றும் ரூ.10 ஆயிரம் பணம் மற்றும் செல்லிடப்பேசி ஆகியவை திருடு போனது.
இதேபோல் சாத்தான்குளம் அருகே உள்ள விஜயராமபுரத்தில் பாமக மாவட்ட துணைச் செயலர் செந்தில்குமாரின் ஒன்றரை வயது மகள் அங்குள்ள அங்கன்வாடி மையம் அருகில் விளையாடி கொண்டிருந்தபோது குழந்தையின் கழுத்தில் அணிந்திருந்த ஒன்றரை பவுன் நகை திருடு போனது. இதுகுறித்து புகாரின் பேரில் சாத்தான்குளம் உதவி ஆய்வாளர்கள் ஆழ்வார், லாரன்ஸ் தலைமையிலான போலீஸார் விசாரித்து வந்தனர்.
விசாரணையில் விஜயராமபுரத்தைச் சேர்ந்த பால் வியாபாரி ச. முத்துச்செல்வன் (24), பண்டாரபுரத்தைச் சேர்ந்த யா. கிறிஸ்டோபர் (16), ரா.சித்திரை ஆகியோர் இவ்விரு திருட்டு சம்பவத்திலும் ஈடுப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் கிறிஸ்டோபர், முத்துச்செல்வன் ஆகியோரை வியாழக்கிழமை கைது செய்தனர். தலைமறைவான பண்டாரபுரம் ரா. சித்திரையை தேடி வருகின்றனர். கைதாகியுள்ள முத்துச்செல்வன், தச்சமொழி ஊராட்சியின் முன்னாள் தலைவி சண்முககனியின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.