தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள சாத்தான்குளம், பேய்க்குளம், கோமநேரி, புத்தன்தருவை சுற்று வட்டாரப்பகுதியில் மணிமுத்தாறு பாசன குளங்கள் உள்ளன. மணிமுத்தாறு அணையின் 3 வது 4 வது ரீச் மூலமாக இங்குள்ள சுமார் 30க்கு மேற்பட்ட குளங்கள் பாசன வசதி பெற்று வருகிறது.
இந்த பகுதியில் உள்ள மக்கள் அனைவருமே மணிமுத்தாறு நீரையை விவசாயத்திற்காக நம்பியுள்ளனர். தற்போது மணிமுத்தாறு அணையில் 96 அடி தண்ணீர் உள்ளது.
80 அடிக்கு மேல் தண்ணீர் இருந்தால் மணிமுத்தாறு 1, 2, 3, 4 வது ரீச்சிக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்பது அரசு விதி. கடந்த டிசம்பர் மாதம் 20ந்தேதி இந்த கால்வாயில் தண்ணீர் திறக்கப்படும் என முதல்வர் அறிவித்ததையடுத்து மணிமுத்தாறில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதை நம்பி விவசாயிகள் அனைவரும் நெல் சாகுபடி செய்தனர். ஆனால் தண்ணீர் திறந்தும் 3வது 4வது பகுதிக்கு போதிய தண்ணீர் வந்து சேரவில்லை. தற்போது மணிமுத்தாறு தண்ணீரை நம்பி சாகுபடி செய்த நெல் பயிர்கள் 20 நாட்களில் அறுவடை செய்ய வேண்டும். ஆனால் போதிய தண்ணீர் இல்லாததால் பல ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள் அனைத்தும் கருகி விட்டன. கருகிய பயிர்களை ஆடு மாடுகள் மேயும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. நிலத்தடி நீர் குறைந்துகொண்டே வருகிறது. தண்ணீர் பஞ்சம் ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால் விவசாயிகள் மனமுடைந்து வாழ்வா சாவா என்கிற நிலையில் உள்ளனர். இதே நிலை இன்னும் சிறிது காலம் நீடித்தால் விவசாயிகள் தங்கள் சொந்த கிராமத்தை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். எனவே தமிழக அரசு, மாவட்ட நிர்வாகம் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் உடனடியாக மணிமுத்தாறு 3வது மற்றும் 4வது ரீச் குளங்களுக்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.