பேய்க்குளம் பகுதியில் பல ஆண்டுகளாக சீரமைக்காமல் தூர்ந்து கிடக்கும் மணிமுத்தாறு கால்வாயை சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
மணிமுத்தாறு 3, 4வது ரீச் கால்வாய்களை நம்பி 160 குளங்கள் உள்ளன. இதில் சாத்தான்குளம் தாலுகா பகுதியில் 84 குளங்கள் உள்ளன. இவற்றில் இறுதி குளங்களுக்கு தண்ணீர் கொண்டுவரும் பேய்க்குளம் பகுதியில் மணிமுத்தாறு கால்வாய் பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் பழுதடைந்து. ஆக்கிரமிக்கப்பட்டு காணப்படுகிறது. தண்ணீர் செல்ல முடியாத அளவுக்கு பல இடங்களில் மேடு தட்டியும், குப்பைகள் தட்டப்பட்டு ஆக்கிரமிக்கப்பட்டும் உள்ளது. மேலும், பல இடங்களில் கால்வாய் உடைப்பெடுத்துள்ளது. உடை மரங்களும் நிறைந்துள்ளது. கால்வாயில் உள்ள மடைகள் அனைத்தும் மதகுகள் இல்லாமல் குளத்திற்கு செல்ல வேண்டிய தண்ணீர் வீணாகி தரிசுக்கு செல்கிறது.
கால்வாயை பொதுப்பணித்துறை அதிகாரிகள் பார்வையிட, சீரமைக்க கால்வாய் கரையோரத்தில் இருந்த சாலை தற்போது முழுவதும் துண்டிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக கால்வாயில் உள்ள அடைப்புகள் மற்றும் உடைப்பினை சரி செய்ய அலுவலர்கள் செல்ல கூட முடியாத நிலை உள்ளது. பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளாததால் பாசனத்திற்குட்பட்ட குளங்கள் அனைத்தும் தூர்வாரப்படாத காரணத்தினாலும் பெரும் பாலான குளங்களில் அதிகளவில் தண்ணீரை சேமிக்கமுடியாத நிலை காணப்படுகிறது. சில குளங்கள் மிகப்பெரும்பகுதி ஆக்கிரமிக்கப்பட்டு குட்டை போல் உள்ளது. ஆக்கிரமிப்பு காரணமாக நீர் வழித்தடங்கள் அடைபட்டு குளங்களுக்கு நீர்வரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.
கால்வாயில் ஏற்பட்டுள்ள அடைப்புகள், உடைப்புகளினால் மணிமுத்தாறு அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் குளங்களுக்கு முறையாக செல்ல முடியாதவாறு உள்ளது. இதே நிலை தொடர்ந்தால் மணிமுத்தாறு கால்வாய் இருந்ததற்கான அடையாளமே இல்லாமல் போய் விடும் என்று விவசாயிகள் அஞ்சுகின்றனர்.
எனவே, அதிகாரிகள் பார்வையிட்டு ஆக்கிரமிப்புகளை அகற்றி, உடைந்து போன கால்வாய், மதகுகளை சீரமைத்து குளங்களையும் தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.