கருங்குளம் பகுதியில் அறுவடைக்கு காத்து நிற்கும் பயிர்கள். ஒரு புறம் மழை. மறு புறம் விலை குறைப்பு என அதிர்ச்சியில் விவசாயிகள் தவித்து வருகின்றனர். நியாயமான விலை கிடைக்க வசவப்புரத்தில் அரசு கொல் முதல் நிலையம் அமைக்க கோரிக்கை விடப்பட்டுள்ளது.
கருங்குளம் பகுதியில் தாமிரபரணி நதியில் இருந்து மருதூர் அணைக்கட்டு மூலமாக பிசான பருவம் நடந்து முடிந்துள்ளது. முத்தாலங்குறிச்சி, குட்டைகால், கொள்ளீர்குளம், நாட்டார்குளம், செய்துங்கநல்லூர், தூதுகுழி, கருங்குளம், பெட்டைகுளம், கிருஷ்ணன் குளம், வீரளபேரிகுளம், கால்வாய் குளம், வெள்ளூர்குளம், தென்கரைகுளம், நொச்சிகுளம், முதலைமொழிகுளம், தேமாங்குளம், வெள்ளரிக்காய் ஊரணி குளம், புதுக்குளம் உள்பட குளங்களின் மூலம் நெல் பயிரிட்டு, அறுவடைக்கு தயாராக உள்ளது. சுமார் 20 ஆயிரம் ஏக்கர் பாசன பரப்பில் உள்ள பயிர்கள் நன்கு விளைந்து உள்ளது. விவசாயிகள் எதிர் பார்த்ததை விட நல்ல மகசூல் அடைந்துள்ளது. அறுவடை இயந்திரங்களை வயலுக்குள் இறங்கி அறுவடை செய்ய விவசாயிகள் தயாரான போது நேற்று காலை 10 மணியளிவில் தீடீர் மழை பெய்தது. இதனால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர். மழையால் நெல் பயிர்கள் சாய்ந்து விட்டன. இனி இரண்டு நாளுக்குள் அறுவடை செய்யாவிடில் பயிர் முளைத்து பயனற்று போய்விடும். அதோடு மட்டுமல்லாமல் தற்போது 2400 வரை நெல்கொள் முதல் செய்த வியாபாரிகள் நெல் பயிருக்க 2000 என குறைத்து விட்டனர். இதனால் விவசாயிகள் மேலும் அதிர்ச்சி அடைந்து விட்டனர்.
இது குறித்து ஆழிகுடியை சேர்ந்த விவசாயி துரைப்பாண்டியன் கூறும்போது, ஏற்கனவே கார், முன்கார், பிசானம் என மூன்று சாகுபடியை எங்கள் பகுதி விவசாயிகள் செய்து வருகிறோம். தொடர்ந்து போதிய மழை இல்லாத காரணத்தினால் பிசான சாகுபடி மட்டுமே செய்யும் அவல நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறோம். இந்த சாகுபடியை கூட தை மாதத்துக்கு அறுவடை செய்ய வேண்டிய பயிரை மாசி கடைசியில் அறுவடை செய்கிறோம். கருங்குளம் பகுதியில் சுமார் 20 ஆயிரம் ஏக்கர் பகுதியிலும் ஒரே நேரத்தில் அறுவடைக்கு வந்த காரணத்தினால் அறுவடை இயந்திர தட்டுபாடு இருந்தது. பல இடங்களிலும் இருந்தும் புரோக்கர்கள் மூலம் இயந்திரங்கள் ஏற்பாடு செய்த நேரத்தில் நேற்று மழை பெய்துவிட்டது. இதனால் பயிர்கள் மடிந்து விட்டன. அதோடு மட்டுமல்லாமல் விவசாயிகளுக்கு கொள் முதல் விலையை வியாபாரிகள் 500 ரூபாய் குறைந்து விட்டனர். இதனால் மிகவும் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சுமார் 5 வருடங்களுக்கு முன்பு வசவப்பபுரத்தில் அரசு கொள்முதல் அமைத்து இருந்தது. அதுபோலவே மீண்டும் அமைத்து விவசாயிகளின் நெல்லை நல்ல விலைக்கு வாங்க வேண்டும் என்று அவர் கூறினார்.
தொடர்ந்து விவசாயிகளுக்கு ஏற்படும் பிரச்சனையை போக்க வசவப்பபுரத்தில் நெல் அரசு கொள்முதல் அங்காடி அமைக்கவேண்டும், மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்பது விவசாயிகளின் கோரிக்கையாகும்.