
கருங்குளம் – கொங்கராயகுறிச்சி பாலத்தில் மின் விளக்கு அமைக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ளது கொங்கராயகுறிச்சி. இதை சுற்றி சுமார் 20க்கும் மேற்பட்ட குக்கிராமங்கள் உள்ளன. இவர்கள் முக்கியமான வேலைக்கும், மற்றும் பள்ளி கல்லூரிகளுக்கும் செல்ல தாமிரபரணி ஆற்றைக் கடந்து கருங்குளம் கரைக்கு தான் வர வேண்டும். ஆகவே இந்த இடத்தில் பாலம் கட்ட வேண்டும் என்று சுமார் 50 ஆண்டு காலமாக மக்கள் போராடி வந்தனர்.
இந்த பாலம் அமைக்க நபார்டு வங்கி மூலம் ஏற்பாடு செய்யப்பட்டது. 16 கோடியே 50 லட்சம் செலவில் பாலம் கட்ட கடந்த 2015 ம் ஆண்டு ஜுலை மாதம் 12 ந்தேதி அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவின் பேரில் ஸ்ரீவைகுண்டம் எம்.எ.ல்.ஏ சண்முகநாதன் மூலம் அடிக்கல் நாட்டப்பட்டது. அதன் பின் கடந்த நவம்பர் மாதம் 20 ந்தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.
இந்த பாலத்தில் மின் விளக்கு வசதி இல்லாமல் பொதுமக்கள் அவதியுற்று வந்தனர். இதுகுறித்து அதிகாரிகளிடம் புகார் அளித்து வந்தனர். தற்போது மின் விளக்கு வசதி செய்வதற்கான மின்கம்பங்கள் நடும் பணி, மின் இணைப்பு வழங்க கம்பி இழுக்கும் பணி நடந்து வருகிறது. விரைவில் மின் இணைப்பு கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து கொங்கராயகுறிச்சி சாகுல்அமீது கூறும்போது, எங்கள் கிராம மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான ஆற்றுப்பால திட்டம் கடந்த 2015 ஆம் ஆண்டு ஜுலை மாதம் 12 ந்தேதி துவங்கியது. 2017 ஆம் ஆண்டு நவம்பர் 20 ந் தேதி திறக்கப்பட்டது.
50 ஆண்டுகாலமாக மக்கள் போராடிய கருங்குளம் & கொங்கராயகுறிச்சி ஆற்றுபாலத்திட்டம் நிறைவேற்றப்பட்ட காரணத்தினால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இந்த பாலம் அமைத்த பிறகு கருங்குளம் மிகப்பெரிய சந்திப்பாக மாறி விட்டது. சுமார் 40க்கு மேற்பட்ட கிராம மக்கள் இங்கு தான் கூடுகிறார்கள். பாலத்தின் இருபுறமும் விளக்குகள் அமைத்து தரவேண்டும். கொங்கராயகுறிச்சி & ஆறாம்பண்ணையை கருங்குளத்தில் இருந்து இணைக்கும் வகையில் நெல்லை சந்திப்பில் இருந்து டவுண் பஸ் வசதி தரவேண்டும் என்பது உள்பட பல கோரிக்கையை முன் வைத்தோம். தற்போது மின் விளக்கு வசதி செய்து தந்துள்ளனர். இதற்காக நன்றியை தெரிவித்து கொள்கிறேன். தொடர்ந்து கொங்கராயகுறிச்சிக்கு இந்த பாலத்தின் வழியாக டவுண் பஸ் வசதி செய்து தரவேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்தார்.