அகில இந்திய வானொலி நெல்லை அறிவிப்பாளர் சகோதரி சந்திரபுஷ்பம் பிரபு அவர்கள் ஒரு நாள் அலைபேசியின் என்னை அழைத்தார். ‘ஸார் உங்களுக்கு ஒரு விருது கொடுக்க போறாங்க.. உங்க போட்டோ தாருங்கள்’ என்றார்கள். நானும் கொடுத்து விட்டேன். ஏன் என்றால் நல்ல நபர்களைதான் அவர்கள் எப்போதுமே எனக்கு அடையாளம் காட்டுவார்கள் என்பது எனக்கு நன்றாக தெரியும்.
இதற்கிடையில் 10.12.2017 அன்று ‘நெல்லை விஜயா கார்டனில் நடைபெறும் நிகழ்ச்சியில் உங்களுக்கு விருது . போய் வாங்கி வாருங்கள்’ என்றார்கள்.
‘என்ன மேடம் அழைப்பு இல்லை. ஒன்றும் இல்லை தீடீரென்று சொன்னால் எப்படி’ என்று தயங்கினேன். ‘நீங்க போங்க ஸார். அவங்க நல்லவங்க.. உங்களை நிச்சயம் கௌரவம் செய்வாங்க’ என்றார்கள். எனக்கு தயக்கம் தான்.
ஏன் என்றால் விருது என்றாலே எனக்கொரு பயம். பல நேரங்களில் நான் ஓதுங்கியே இருப்பேன்.
ஆனாலும் மேடம் சொன்னா சரியாத்தான் இருக்கும் என நினைத்து, நான் எனது தம்பி சுடலைமணி செல்வன், சகோதரி சந்திரபுஷ்பம் அவர்களின் கணவர் கருங்குளம் உதவி வட்டார வளர்ச்சி அலுவலர் மகேந்திரபிரபு ஆகியோர் அங்கு சென்றோம்.
இதற்கிடையில் தீடீரென்று எனது நண்பர் செங்கோட்டை நூலகர் ராமசாமி போன் செய்தார். ‘எங்கள் பகுதியில் இருந்து நெல்லை நூலகர் முத்து கிருஷ்ணன் அவர்கள் மூலமாக நான்கு நூலகர்களை இந்த விருதுக்கு தேர்ந்து எடுத்து இருக்கிறார்கள். நாங்களும் வருகிறோம்’ என்றார்.
எனக்கு மிக ஆர்வமானது.. என்ன விருது?. எப்படி விருது?. யாருக்கு விருது.?. எதனால் விருது? கொஞ்சம் குழப்பம் தான்.
கார்டனுக்கு வந்த உடனே அங்கே மிகப்பெரிய கூட்டம். அங்கு கட்டப்பட்ட விளம்பர பலகை மூலம் தெரிந்து கொண்டேன். திருநெல்வேலி லைன்ஸ் கிளப் கிரின் சிட்டி, மற்றும் டீம் ட்டிரஸ்ட் நடத்தும் விருது வழங்கும் விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் தான் விருது வழங்குகிறார்கள்.
தமிழ்நாட்டில் பல்வேறு பகுதியில் இருந்து சுமார் 250 பேருக்கு தனித்தனியாக பல்வேறு விருதுகள் வழங்கும் அறிவிப்பை பார்த்தேன்.
இப்போது எனக்கு மிகவும் தயக்கமாக இருந்தது.
ஏன் என்றால் 5 பேருக்கு விருது கொடுப்பது என்றாலே மிகக் கடினம் ஆனால் 250 பேர். அவர்களை எப்படி தேர்ந்தெடுத்தார்கள். அவர்களை எப்படி கூட்டினார்கள். அதுவும் தமிழகம் முழுவதும் இருந்து. எனக்கு ஆர்வம் மிக கூடியது.
அப்போது தான் டீம் டிரஸ்ட் நிறுவனர் திருமலை முருகன் அவர்களை பார்த்தேன் மிகச்சுறுசுறுப்பாக இயங்கி கொண்டிருந்தார். அனைவர்களையும் அழைத்து பேசிக்கொண்டிருந்தார்.
மேடையிலும் வி.ஐ.பி கூட்டம். பள்ளி மாணவ மாணவிகளுக்கு பரிசு கொடுத்தார்கள். என்னை எட்டாவது நபராக விருது வழங்க மேலே அழைத்தார்கள்.
எனக்கு ‘சிறந்த சமூக நல சிந்தனையாளர் விருது’ . சமூக நல அக்கறையோடு பல்வேறு சமுதாயப் பணிகளை சிறப்பாக செய்து வரும் தூத்துக்குடி மாவட்ட எழுத்தாளர் முத்ததாலங்குறிச்சி காமராசு அவர்களுக்கு சமூக நல சிந்தனையைப் பாராட்டி இந்த விருது வழங்கப்படுகிறது என்று அறிவித்த போது நான் புல்லரித்து போய்விட்டேன். திருநெல்வேலி மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு ஆய்வாளர் சார்பு நீதிபதி ராமலிங்கம் தலைமையில் விருது வழங்கப்பட்டது. பாளை மத்திய சிறைச்சாலை கண்காணிப்பாளர் செந்தாமரைக் கண்ணன், அரிமா மாவட்டம் முதல் துணை ஆளுனர் பிரகாஷ், இரண்டாம் துணை ஆளுநர் முருகன், திருப்பூர் முன்னாள் மாவட்ட ஆளுநர் ஆறுமுக மணி, முன்னாள் மாவடட ஆளுநர் சுதந்திர லெட்சுமி ஆகியோர் கொண்ட குழுவினர் அங்கிருந்தார்கள்.
விருது கிடைக்கும் வரை எனக்கு என்ன விருது என்றே தெரியாமல் விருது பெற்றேன். அதுவே மிகப்பெரிய ஆனந்தம் தான். விருதுக்காக பிரேம் செய்யப்பட்ட பட்டயம், சந்தன மாலை என அனைவருக்குமே வழங்கினார்கள். விருது வழங்கியவர்களை பாராட்டியே தீரவேண்டும்.
மேடையில் டாக்டர் பிரமேசந்திரன், சகோதரி சந்திரபுஷ்பம் பிரபு, செங்கோட்டை நூலகர் ராமசாமி ஆகிய மூன்று பேரை தவிர மற்ற சாதனையாளர்களை நான் இதுவரை பார்த்தது இல்லை. ஒரே இடத்தில் 250 சாதனையாளர்களை பார்த்த சந்தோஷம் எனக்கு புது ஊக்கத்தினை கொடுத்தது.
இந்த வாய்ப்பை நல்கிய டீம் டிரஸ்ட் நிறுவனம் திருமலை முருகன், செயலாளர் செல்வகுமார், பொருளாளர் மன்மதன், சேர்மன் முருகப்பெருமாள் உள்பட அனைவருக்கும் நன்றி.
முடிவில் அருமையான விருந்து உபசரிப்பு.
இதுபோன்று யாரையும், எதையும் எதிர்பார்க்காமல் விருது வழங்கி பாராட்டும் உங்களை போன்ற அன்பர்கள் இருக்கும் வரை சாதனையாளர்கள் தொடர்ந்து தங்கள் பயணத்தினை மேற்கொள்வார்கள். உங்களை மறக்கவும் மாட்டார்கள்.
அருமையான வாய்ப்பை நல்கிய சகோதரி சந்திரபுஷ்பம் பிரபு அவர்களுக்கு மிக்க நன்றி. தொடர்ந்து இதுபோன்ற விருது வழங்க நீண்டஆயுளை டீம் டரஸ்ட் நிறுவனர் திருமலை முருகன் அவர்கள் மற்றும் குழுவினர்களுக்கு எல்லாம் வல்ல இறைவன் தரவேண்டும் என வேண்டுகிறேன்.