ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் திருக்கோயிலில் சித்திரைத் திருவிழா கருடசேவை நடைபெற்றது.
நவதிருப்பதிகளில் 9ஆவது தலமாக ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் கோயில் உள்ளது. இக்கோயிலில் மூலவர் சுவாமி ஆதிநாதன், தாயார்கள் ஆதிநாயகி, குருகூர் நாயகி, உற்சவர் சுவாமி ஸ்ரீபொலிந்துநின்ற பிரான், தாயார்கள் ஸ்ரீபூமாதேவி-நீளாதேவி, ஆதிநாயகி, குருகூர் நாயகி, சமேதராக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர். இக்கோயிலில் நிகழாண்டு சித்திரைத் திருவிழா 18ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாள்களில் தினமும் சுவாமி பொலிந்துநின்ற பிரான் பரங்கி நாற்காலி, சிம்ம வாகனம், அனுமந்த வாகனம், யானை வாகனம், இந்திர விமான வாகனம், குதிரை வாகனம், புன்னை மர வாகனம், வெட்டிவேர் சப்பரம் உள்ளிட்ட வாகனங்களில் எழுந்தருளி வீதிஉலா நடைபெறுகிறது.
ஏப். 22ஆம் தேதி 5ஆம் திருவிழாவை முன்னிட்டு, காலை 5 மணிக்கு விஸ்வரூபம், 6 மணிக்கு திருமஞ்சனம், 7 மணிக்கு நித்தியல் கோஷ்டி, காலை 11.30 மணிக்கு வாகன மண்டபத்தில் சிறப்பு திருமஞ்சனம், பிற்பகல் 12.30 மணிக்கு நாலாயிர திவ்யபிரபந்த கோஷ்டி சாத்து முறை நடைபெற்றது.
இரவு 7.30 மணிக்கு சுவாமி பொலிந்துநின்றபிரான் கருட வாகனத்திலும், சுவாமி நம்மாழ்வார் ஹம்ச வாகனத்திலும் எழந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். பின்னர் மாட வீதி மற்றும் ரதவீதிகளை சுற்றி வீதிஉலா நடைபெற்றது. ஏப். 26ஆம் தேதி புதிய தேரின் தேரோட்டமும், 27ஆம் தேதி தீர்த்தவாரியும் நடைபெறுகின்றன.
கருட சேவையில் நிர்வாக அதிகாரி விஸ்வநாத், எம்பெருமானார் பேரருளாள ராமானுஜ ஜீயர், ஆழ்வார் கைங்கர்ய சபா வரதராஜன், காரிமாறன் கலைக்காப்பகத்தினர், முன்னாள் அறங்காவலர் குழுத்தலைவர் ராஜப்பா வெங்கடாச்சாரி, முன்னாள் பேரூராட்சித் தலைவர் ஆதிநாதன், அதிமுக நகரச் செயலர் செந்தில் ராஜ்குமார் உள்பட பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
ஏற்பாடுகளை கோயில் செயல்அலுவலர் விஸ்வநாத், ஆதிநாதர் ஆழ்வார் கைங்கர்ய சபா தலைவர் வரதராஜன் மற்றும் பக்தர்கள் செய்துவருகின்றனர்.