ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் திருக்கோயிலில் மாசித்திருவிழாத் தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. திங்கள்கிழமை, செவ்வாய்க்கிழமை இரவில் தெப்ப உற்சவம் நடைபெறுகிறது.
தாமிரவருணி நதிக்கரையோரங்களில் அமைந்துள்ள நவதிருப்பதி கோயில்களில் ஒன்பதாவது திருப்பதியாக ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் மாசித்திருவிழா பிப்.24 ஆம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவிழா நாள்களில் தினமும் சுவாமி நம்மாழ்வார் பரங்கி நாற்காலிலி, ஆளும் பல்லக்கு, புன்னைமர வாகனம் மற்றும் திருப்புளி வாகனத்தில் மாடவீதி மற்றும் ரதவீதிகளில் வீதி உலா வருதல் நடைபெற்றது. பிப்.28ஆம் தேதி 5ஆம் திருநாளை முன்னிட்டு நடைபெற்ற கருடசேவையில் கருடவாகனத்தில் பொலிலிந்துநின்ற பிரானும், ஹம்சவாகனத்தில் நம்மாழ்வாரும் எழுந்தருளி ரதவீதிகளில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். 9ஆம் திருவிழாவை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை காலை 4 விஸ்வரூபம், காலை 5 திருமஞ்சணம், காலை 5.45 மணிக்கு நித்தியல் கோஷ்டி நடைபெற்றது. காலை 6 மணிக்கு சுவாமி நம்மாழ்வார் திருத்தேரில் எழுந்திருளிய பின்னர் தீபாராதனை நடைபெற்றது. காலை 8.45 மணிக்கு தேரோட்டம் நடைபெற்றது. 10 ஆம் திருவிழாவை முன்னிட்டு திங்கள்கிழமையும், 11ஆம் திருவிழாவை முன்னிட்டு செவ்வாய்க்கிழமையும் இரவில் தெப்ப உற்சவம் நடைபெறுகிறது.
தேரோட்டத்தில் கோயில் நிர்வாக அதிகாரி விஸ்வநாத், தக்கார் அஜீத், முன்னாள் அறங்காவலர் குழுத்தலைவர் ராஜப்பாவெங்கடாச்சாரி உள்பட திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.