
ஆளும்கட்சி அரசியல் பிரமுகர்களின் சிபாரிகளை தூக்கி எறிந்துவிட்டு தலையாரி பணியிடங்களை தகுதியின் அடிப்படையில் நிரப்பிய ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் அதிரடியாக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளது ஸ்ரீவை தாலுகா மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணியின் கரையோரத்தில் ஆன்மிக சிறப்புபெற்ற நகரமாக அமைந்துள்ள ஸ்ரீவைகுண்டம் தாலுகாவின் தலைநகரமாக இருந்து வருகிறது. ஸ்ரீவைகுண்டம் தாசில்தாராக தாமஸ்பயஸ் அருள் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் பணி நியமனம் செய்யப்பட்டார். தாசில்தாராக பொறுப்பேற்ற தாமஸ்பயஸ் அருள் தாலுகா அலுவலகத்தில் மக்களுக்கான பணிகளை விரைவுபடுத்தினார்.
தாலுகா அலுவலகத்திற்கு நாள்தோறும் தங்களின் பல்வேறு தேவைகளுக்காக மனு கொடுக்க வரும் பொதுமக்கள் அதிகதொகை செலுத்தி மனு எழுதுவதை தடுக்க ரூ.10கட்டணத்தில் மனு எழுதிகொடுக்கும் திட்டத்தை துவங்கினார். அதோடு மிகவும் ஏழ்மையான மக்களுக்கு இலவசமாக மனு எழுதிக்கொடுக்கவும் வழிவகை செய்தார். இதன்மூலமாக அவர் பொதுமக்கள் மனதில் நம்பிக்கை மிக்கவராக இடம் பிடித்தார்.
அதனைத்தொடர்ந்து, ஸ்ரீவைகுண்டம் தாலுகாவில் பலவருட காலமாக தூர் வாரப்படாமல் தூர்ந்துபோய் கிடந்த குளங்களையும், குளங்களில் செய்யப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளையும் அகற்ற முன்வந்தார். அதோடு தூத்துக்குடி மாவட்டத்தின் எல்லையான கலியாவூரில் இருந்து கடைசிப்பகுதியான சேர்ந்தபூமங்களம் வரையிலும் சீமைகருவேலமரங்கள், வேலிக்காத்தான்& நாணல்செடிகளின் ஆக்கிரமிப்பில் சிக்குண்டு கிடந்த தாமிரபரணியை தூய்மைப்படுத்திடவும் திட்டம் வகுத்து செயல்படுத்தினார்.
தாசில்தார் தாமஸ்பயஸ் அருளுக்கு அப்போது இருந்த மாவட்ட கலெக்டர் வெங்கடேஷ், மாவட்ட வருவாய் அலுவலர் டாக்டர்.வீரப்பன், முந்தைய சப்&கலெக்டர் தீபக்ஜேக்கப் ஆகியோர் மிகவும் பக்கபலமாக இருந்தனர். இதனைத்தொடர்ந்து தாசில்தார் தாமஸ்பயஸ் அருள் அண்ணா பல்கலைக்கழகம், விவசாய சங்கங்கள், விவசாய பிரதிநிதிகள், சமூகஆர்வலர்கள், தனியார் அமைப்புகளின் பங்களிப்புடன் குளங்களையும், பாசன வாய்க்கால்களையும் தூர் வாரி சீரமைக்கும் பணிகளை துவங்கி மேற்கொண்டார்.
தாலுகாவில் மண்மேடாகி கிடந்த பாசனக்குளங்களில் இருந்து விவசாயிகள் தங்களுக்கு தேவையான மண் எடுக்கும் திட்டத்தையும் விரைவுபடுத்தினார். அதோடு குளங்களில் செய்யப்பட்டு இருந்த ஆக்கிரமிப்புகளையும் அதிரடியாக அகற்றினார். கிராம உதயம் மற்றும் தூத்துக்குடியிலுள்ள பிரபல வணிக நிறுவனங்கள், ஸ்ரீவைகுண்டம் வியாபாரிகள் சங்கத்தினரின் பங்களிப்புடன் தாமிரபரணியை தூய்மைப்படுத்தும் பணியை அவ்வப்போது மேற்கொண்டு வந்தார்.
ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டின் மேல்பகுதியில் இருந்து பிச்சனார்தோப்பு வரையிலும் தாமிரபரணி ஆற்றின் உள்ளே கரையோரங்களில் அடர்ந்து வளர்ந்து கிடந்த சீமைகருவேல மரங்களை முற்றிலுமாக அகற்றி மரக்கன்றுகளை நட்டார். அணையின் கீழ்பகுதியில் பலவருட காலமாக புதர் மண்டி கிடந்த பகுதிகளை எல்லாம் சீரமைத்தார். இதுபோன்று ஏரல் ஆற்றுப்பாலம் பகுதியிலும் தாமிரபரணி ஆற்றில் வளர்ந்து கிடந்த சீமைகருவேல மரங்களை முழுமையாக அகற்றினார்.
ஸ்ரீவைகுண்டம் அணையின் கீழ்பகுதியில் இருந்து புதிய பாலத்திற்கு இடைப்பட்ட பகுதியில் வளர்ந்து கிடந்த சீமைகருவேல மரங்களை வனத்துறையின் அனுமதி பெற்று முழுமையாக அகற்றினார். அணையின் கீழ்பகுதிக்கு பொதுமக்கள் வந்து பொழுதை கழித்து செல்லும் வகையில் மைதானம் போல சீரமைத்து கொடுத்தார். இதன்மூலமாக 15வருடங்களுக்கு பிறகு ஸ்ரீவைகுண்டம் சுற்றுவட்டார கிராமமக்கள் தாமிரபரணி ஆற்றின் உள்ளே கடந்த ஜனவரி மாதம் காணும் பொங்கலை மகிழ்வுடன் கொண்டாடி மகிழ்ந்தது குறிப்பிடத்தக்கதாகும்.
தாமிரபரணி ஆற்றுப்படுகைகளில் மணல்கொள்ளை நடைபெறாமல் தடுத்திடும் பணிகளையும் தாசில்தார் தாமஸ்பயஸ் அருள் காவல்துறையினரின் உதவியுடன் திறம்பட மேற்கொண்டு வந்தார். ஸ்ரீவைகுண்டம் டி.எஸ்.பி., சகாயஜோஸ், இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் உள்ளிட்ட காவல்துறையினர் மற்றும் வருவாய்த்துறையினர் தாசில்தாரின் பணிக்கு மிகவும் உறுதுணையாகவும் இருந்து வந்தனர்.
ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டை பொறுத்தவரை ஆற்றில் தண்ணீர் அதிகமாக வரும் நேரங்களில் எல்லாம் அமலைச்செடிகள் வந்து தேங்கி விடுவது உண்டு. இந்த அமலைச்செடிகளை அகற்றவேண்டியது பொதுப்பணித்துறையினரின் பணியாகும். ஆனாலும், இந்த செடிகள் அனைத்தும் ஆற்றில் மழைவெள்ளம் வரும் வரை அங்கேயே தேங்கி கிடப்பது வாடிக்கையானதாகும். இதனை பொதுப்பணித்துறையினர் ஒருபோதும் அகற்றுவதே இல்லை.
இதனையறிந்த தாசில்தார் தாமஸ்பயஸ் அருள் அணைக்கட்டில் தேங்கும் அமலைச்செடிகளை தனியார்களின் பங்களிப்புடன் தாமே முன்வந்து அவ்வப்போது அகற்றி பொதுமக்கள் மத்தியில் மிகுந்த நன்மதிப்பை பெற்றார். அதோடு தாலுகா அலுவலகங்களில் தேங்கி கிடக்கும் அனைத்துப்பணிகளையும் துரிதப்படுத்தி விரைந்து முடித்திட வழிவகை செய்தார். ஜமாபந்தியில் பொதுமக்கள் கொடுக்கும் மனுக்களில் 100க்கு 95சதவீத மனுக்களுக்கு உடனடியாக நிரத்தரமான தீர்வு கிடைக்கவும் வழிவகை செய்தார்.
இப்படியாக தாலுகாவிலுள்ள மக்களுக்கான பணியில் தாசில்தார் தாமஸ்பயஸ் அருள் தொடர்ந்து எந்தவிதமான எதிர்பார்ப்புகளுக்கும் இடம் கொடுக்காத வகையில் மிகவும் சிறப்பாக பணியாற்றி வந்தார். அதோடு ஸ்ரீவைகுண்டம் தாமிரபரணி ஆற்றின் கரையோரத்தில் பலவருட காலமாக அடிப்படை வசதி இல்லாமல் இருந்துவரும் அரசு மருத்துவமனைக்கு சொந்தமான பிரேத பரிசோதனை மையத்தை வேறு இடத்திற்கு மாற்றி புதிய கட்டிடம் கட்டிக்கொடுக்கவும் முன்வந்தார்.
அந்த இடத்தையும், அதற்கு அருகே அரசுக்கு சொந்தமான காலியிடத்தையும் சீரமைத்து அதில் பொதுமக்களுக்கான பொழுதுபோக்கு பூங்கா அமைத்திட முன்வந்தார். இதற்கான ஏற்பாடுகளை தாசில்தார் அதிவேகமாக மேற்கொண்டு வந்தார். நடைபயிற்சிக்கான நடைபாதை, சிறுவர்களுக்கான விளையாட்டு சாதனங்களுடன் பொழுதுபோக்கு பூங்கா அமைப்பதற்கான ஏற்பாடுகள் தடபுடலாக நடந்து வந்தது. இந்நிலையில் சிலர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இருந்தபோதும் வியாபாரிகள் சங்கத்தினரின் ஆதரவுடன் எதிர்ப்புகளை மீறி இதற்கான பணிகள் தொய்வின்றி நடைபெற்றும் வந்தது.
சுற்றுலா நகரமான ஸ்ரீவைகுண்டம் தாமிரபரணி ஆற்றில் படகு குழாம் அமைக்கவும், ஆதிச்சநல்லூர் தகவல் மையத்தை திறக்கவும் தாசில்தார் தாமஸ்பயஸ் அருள் ஏற்பாடுகளை செய்து வந்தார். விவசாயிகள் பயன்பெற நெல்கொள்முதல் நிலையம் கொண்டு வந்தார். நவதிருப்பதி பெருமாள் கோவில்களில் அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கவும் சம்மந்தப்பட்ட டவுன் பஞ்சாயத்து, கிராம பஞ்சாயத்துக்கள் மூலமாக ஏற்பாடுகளை செய்துவந்தார். இப்படியாக, ஸ்ரீவைகுண்டம் நகரம் வளர்ச்சி காணும் வகையிலான பல்வேறு வளர்ச்சிப்பணிகளை தாசில்தார் தாமஸ்பயஸ் அருள் தாமே முன்வந்து அதீத அக்கறை எடுத்து மேற்கொண்டு வந்தார்.
இந்நிலையில், ஸ்ரீவைகுண்டம் தாலுகாவில் காலியாக இருந்த 24தலையாரி பணியிடங்களை நிரப்பும் பொறுப்பு தாசில்தார் தாமஸ்பயஸ் அருளுக்கு வந்தது. இந்த பணியிடங்களை நிரப்பும் பொறுப்பு தான் அவரை வேறு ஊருக்கு பணியிடமாறுதல் செய்து அனுப்புவதற்கு முக்கிய காரணமாகி விட்டது.
தலையாரி பணியிடங்கள் அனைத்தும் எந்தவிதமான சிபாரிசுகளுக்கும் இடமின்றி முற்றிலும் தகுதியின் அடிப்படையில் நிரப்பபடும் என்று தாசில்தார் தாமஸ்பயஸ் அருள் அறிவித்தார். இதன்படி கடந்த 14ம் தேதி தலையாரி பணியிடங்களுக்கான நேர்காணல் கலெக்டர் சந்தீப் நந்தூரி உத்தரவின்பேரில், சப்&கலெக்டர் பிரசாந்த் மேற்பார்வையில் நடைபெற்றது.
இந்த நேர்காணலுக்கு முன்பாகவே சிலர் தாங்கள் ஆளும்கட்சி அமைச்சர் மற்றும் தொகுதியின் எம்.எல்.ஏ.,விடம் சிபாரிசு கடிதம் பெற்று விட்டோம், வேலை எங்களுக்குத்தான் என்று வெளிப்படையாகவே பேசி வந்தனர். இதுபோக அரசுத்துறையை சேர்ந்தவர்கள் சிலரும் நாங்கள் சொல்பவருக்குத்தான் வேலை என்றும் உறுதியாக கூறிவந்தனர்.
இந்நிலையில், 14ம் தேதி காலை 8மணிக்கு துவங்கிய நேர்காணல் இரவு 8மணி வரையிலும் நடைபெற்றது. அதன்பிறகு நேர்காணலில் வழங்கப்பட்ட மதிப்பெண்கள் அடிப்படையில், 24தலையாரி பணியிடங்களும் நிரப்பபட்டது. இதில் மணக்கரை, வடவல்லநாடு, வல்லகுளம் ஆகிய மூன்று கிராமங்களுக்கான பணியிடம் மட்டும் தவிர்க்க முடியாத சில காரணங்களால் நிரப்பபடாமல் நிறுத்தி வைக்கப்பட்து.
மீதமுள்ள 21பணியிடங்களும் அதிகாலை மூன்று மணி வரை, ஆளும்கட்சி அரசியல் பிரமுகர்களின் சிபாரிகளுக்கு இடமின்றி நேர்காணலில் கொடுக்கப்பட்ட மதிப்பெண்கள் அடிப்படையிலும், தகுதியின் அடிப்படையிலும் தாசில்தார் தாமஸ்பயஸ் அருள் மூலமாக நிரப்பட்டது. பணி பெற்றவர்களுக்கான பணி நியமனக் கடிதம் அந்தந்தப்பகுதி வருவாய் ஆய்வாளர்கள் மூலமாக 15ம் தேதி காலையில் உரியவர்களிடம் நேரில் சென்றும் கொடுக்கப்பட்டது.
ஆளும்கட்சியின் அரசியல் பிரமுகர்கள் மற்றும் அரசுத்துறை உயர்அதிகாரிகளின் சிபாரிகளுக்கு அப்பாற்பட்டு தலையாரி பணியிடங்கள் நிரப்பட்டது தாசில்தார் தாமஸ்பயஸ் அருளின் பணிக்கே வேட்டு வைத்துவிட்டது. ஆம், ஆளும் கட்சி அரசியல்பிரமுகர்களின் சிபாரிகளை எல்லாம் தூக்கி எறிந்துவிட்டு தலையாரி பணியிடங்களை நேர்மையாக நிரப்பிய தாசில்தார் தாமஸ்பயஸ் அருள் ஓட்டப்பிடாரம் சமூக பாதுகாப்பு நலத்திட்ட தாசில்தாராக அதிரடியாக இடம் மாற்றம் செய்யப்பட்டார்.
இதற்காகத்தான் பணியிடமாற்றம் என்பது தெரியாமல் இருப்பதற்காக இவரோடு சேர்ந்து மாவட்டத்தில் ஏழு தாசில்தார்களும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இருந்தாலும் ஸ்ரீவைகுண்டம் தாசில்தாரை பணியிட மாறுதல் செய்வதற்கு ஆளும்கட்சி அரசியல் பிரமுகர்கள் உட்பட சிலரும் பல்வேறு வகையில் முயற்சிகளை தொடர்ந்து மேற்கொண்டு வந்தனர் என்பது தான் முழுக்கமுழுக்க காரணமாகும்.
தாசில்தார் தாமஸ்பயஸ் அருளின் பணியிடமாறுதல் உத்தரவு ஸ்ரீவைகுண்டம் நகர மக்கள், விவசாயிகள், வியாபாரிகள் சங்கத்தினர் உள்ளிட்ட அனைவரது மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதோடு நேர்மையாக பணிபுரிந்துவரும் அரசுத்துறை அதிகாரிகள் மத்தியில் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
தாசில்தார் தாமஸ்பயஸ் அருள் பணியிடமாற்றத்தை அறிந்த சமூகஆர்வலர்கள், வியாபாரிகள் சங்கத்தினர், மக்கள் நலச்சங்கத்தினர், முக்கிய பிரமுகர்கள், காவல்துறையினர் உள்ளிட்ட பலரும் நேரில் வந்து சந்தித்தும் சென்றனர். இதுவரை ஸ்ரீவைகுண்டம் தாலுகாவில் எத்தனை பேரோ தாசில்தாராக பணியாற்றினாலும் தனது திறம்பட்ட மக்கள் பணியாலும், நீர்நிலைகளை சீரமைக்கும் பணிகளாலும் தாசில்தார் தாமஸ்பயஸ் அருள் தாலுகாவிலுள்ள பொதுமக்கள், விவசாயிகள், வணிகர்கள், சமூகஆர்வலர்கள் மத்தியில் என்றும் மறக்கமுடியாத மனிதராக நீங்காத இடம் பிடித்துவிட்டார்.
முதல் முறையாக ஸ்ரீவைகுண்டத்தில் உணவுத்திருவிழா
தமிழ் புத்தாண்டான சித்திரை முதல் நாள் ஸ்ரீவைகுண்டம் அணையின் கீழ்பகுதியில் உணவுத்திருவிழா தாசில்தார் தாமஸ்பயஸ் அருள் தலைமையில் மிகவும் சிறப்பாக நடத்தப்பட்டது. இந்த உணவுத்திருவிழாவில், மாவட்ட வருவாய் ஆய்வாளர் டாக்டர்.வீரப்பன், சப்&கலெக்டர் பிரசாந்த் மற்றும் அரசுத்துறை உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.
ஸ்ரீவைகுண்டத்தில் முதன்முறையாக நடைபெற்ற இந்த உணவுத்திருவிழாவினை காண்பதற்கு பல்லாயிரக்கணக்கான மக்கள் குடும்பத்தினருடன் திரண்டு வந்தனர். நாய் கண்காட்சி, பள்ளி மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள், சிலம்பாட்டம் எனப்பல்வேறு வகையான பொழுதுபோக்குகளுடன் உணவுத்திருவிழா தூத்துக்குடிக்கு நிகராக முத்திரை பதிக்கும் வகையில் சிறப்பாக நடைபெற்றது குறிப்பிடத்தக்கதாகும்.
ஸ்ரீவைகுண்டத்தில் மீண்டும் வாரச்சந்தை..!
ஸ்ரீவைகுண்டத்தில் கடந்த 20வருடங்களுக்கு முன்பு வரை வாரச்சந்தை சிறப்பாக நடைபெற்று வந்தது. பல்வேறு காரணங்களால் முடங்கிப்போன வாரச்சந்தை மீண்டும் செயல்படுவதற்கு தாசில்தார் தாமஸ்பயஸ் அருள் பெரும் முயற்சி மேற்கொண்டார். டவுன் பஞ்சாயத்து நிர்வாகத்தினருடன் இணைந்து பழுதடைந்து கிடந்த வாரச்சந்தை கட்டிடங்களை எல்லாம் முழுமையாக சீரமைத்தார்.
அப்போதைய கலெக்டர் வெங்கடேஷ் உத்தரவின்பேரில் வாரச்சந்தையை மீண்டும் துவங்குவதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் தடபுடலாக நடைபெற்று வந்தது. இந்நிலையில், தூத்துக்குடியில் நிகழ்ந்த திடீர் கலவரத்தால் கலெக்டர் வெங்கடேஷ் பணிமாறுதல் செய்யப்பட இதனை துவங்குவதில் திடீர் சிக்கல் எழுந்தது. இந்நிலையில் தற்போது தாசில்தார் தாமஸ்பயஸ் அருளும் பணியிடமாறுதல் செய்யப்பட்டுள்ளதால் ஸ்ரீவைகுண்டத்தில் மீண்டும் வாரச்சந்தை வருமா? இல்லை வராதா? என்ற கேள்வி பொதுமக்கள் மனதில் பலமாக எழுந்துள்ளது.