நடிகர் தனுஷ் நடித்த ‘மரியான்’ படத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசைஅமைத்து பாடிய பாடல் ‘ஆயிரம் சூரியன் சுட்டாலும்…. நெஞ்சே எழு’. இந்த பாடலை எழுதியவர் கவிஞர் குட்டி ரேவதி. இதே படத்தில் ‘எங்க போன ராஜா’ பாடலும் இவர் எழுதியதே. பல படங்களில் இணை இயக்குனராக பணியாற்றிய இவர் தற்போது தனியாக திரைப்படம் இயக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். இவரது கணவர் காஞ்சனை ஆர். ஆர். சீனிவாசன் அவர்கள். நெல்லை சீமை காரர். சிறந்த ஆராய்ச்சியாளர். ஆய்வாளர். நெல்லையை அனு அனுவாக ரசிப்பவர். பல கல்வெட்டுஆய்வாளர்களுடன் பயணம் செய்தவர். தற்போது ஆதிச்சநல்லூரை பற்றி மிக சரியான ஆவணப்படத்தினை இயக்கி கொண்டிருக்கிறார்.
இவர் அதற்காக ஈடுபடும் முயற்சி மிகச்சிறப்பானதாகும். குறிப்பாக 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு பழமையான நாகரீகம், 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்புள்ள நாகரீகம், 3500 வருடங்களுக்கு முன்பு ஆதிச்சநல்லூர் நாகரீகம், 2500 வருடங்களுக்கு முன்பு கொற்கை துறைமுகம் என பல தரப்பட்ட வரலாற்றுகளை மிகச்சரியாக தொகுத்து வருகிறார். இந்த ஆவணப்படத்தில் நான் வசிக்கும் செய்துங்கநல்லூரில் கிடைத்த நுண்கற்கால ஆயுதங்கள் குறித்தும், சாயர் புரத்தில் கிடைத்த ஆயுதங்கள் குறித்தும் பதிவு செய்துள்ளார்.
இந்த படத்தின் படப்பிடிப்பிற்காக இவர்கள் இருவரும் அடிக்கடி நெல்லை சீமைக்கு வந்து சென்றார்கள். அப்போதெல்லாம் என்னை சந்திப்பது வழக்கம். சில வேளைகளில் நானும் அவர்களோடு பயணித்து உள்ளேன். கடந்த வாரமும் இதுபோலவே இருவரும் வந்திருந்திருந்தனர். இந்த ஆவணப்படத்தில் தாமிரபரணியை பற்றி சில காட்சிகள் சேர்க்க வேண்டும் என்பது அவர்களின் ஆவல்.
அவர்களை மருதூர் அணைக்கு அழைத்து சென்றேன். நீண்டு நெடு நெடுவென நின்ற மருதூர் அணையையும், அதில் தேங்கி நிற்கும் தாமிரபரணி தண்ணீரையும், தாண்டி விழும் மறுகாலையும் மிக நேர்த்தியாக படம் பிடித்தனர். சிவில் எஞ்சினியரிங் படிக்கும் எனது மகள் ஆனந்த சொர்ண துர்க்காவும் இந்த அணையை பார்த்து அனந்தம் அடைந்தார்.
அணையின் நேர்த்தியையும், தாமிரபரணிக்கு போக்கு காட்டி கட்டப்பட்ட தொழில் நுட்பத்தினையும் கண்டு வியந்தார். ‘ நமது ஊரின் அருகில் உள்ள இந்த அணையை என்னிடம் காட்ட வில்லையே’ என என்னிடம் கோபித்துக்கொண்டார்.
அனைவரும் சேர்த்து புகைப்படம் எடுத்துக்கொண்டோம். இரண்டு மிகப்பெரிய ஆய்வாளர்களோடு எனது மகள் நின்றது எனக்கு மிகவும் பெருமிதத்தினை ஏற்படுத்தியது.
விரைவில் வெளியாக உள்ளது தாமிரபரணி ஆவணப்படும்.
ஏற்கனவே மாஞ்சோலை எஸ்டேட் குறித்து ஆவணப்படம் தயாரித்தவர், காஞ்சனை ஆர். ஆர். சீனிவாசன். எனவே அவர் மிகவும் மெனக்கெட்டு தயார் செய்த ஆதிச்சநல்லூர் ஆவணபடமும் வெற்றி பெற வாழ்த்துகிறேன். சகோதரி குட்டி ரேவதி அவர்களும் அடுத்த திரைப்படம் இயக்கவும் எல்லா வல்ல இறைவனை பிராத்தனை செய்கிறேன்.