தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் ஒரு பழமையான ஊர். இந்த ஊருக்கு அருகே தாமிரபரணி ஆற்று ஓரத்தில் ஒரு பெருமாள் கோயில் உள்ளது. இந்தக் கோயில் முன்பு ஒரு கருங்கல் துண்டு கிடந்தது. அந்தக் கல் துண்டு அதிட்டானம் பகுதியில் உள்ள முப்பட்டக் குமுதக வர்க்கத்தைச் சார்ந்தது. இதனில் இரண்டு பக்கங்களில் வட்டெழுத்து கல்வெடுகள் இருந்தது. முப்பட்ட குமுதகம் உறுப்புகள் கோயில்கள் மற்றும் கோயில் சார்ந்த மண்டபங்களில்தான் காணப்படும்.
இதனை ஆத்தூரில் வசிக்கும் இராசசேகர் பாண்டியன் மற்றும் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் தொல்லியல் துறை தலைவர் (பொறுப்பு) பேராசிரியர் சுதாகரும் இணைந்து கண்டுபிடித்தனர். பின்னர் பேராசிரியர் சுதாகர் இந்தக் கல்வெட்டைப் படி எடுத்தார்.
அடுத்து மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தொல்லியல் துறை உதவிப் பேராசிரியர்களான முருகன் மற்றும் மதிவாணன் இதனைப் படித்தனர்.
இந்தக் கல்வெட்டின் முதல் பக்கத்தில் மூன்று வரிகளும் இதற்குக் கீழே உள்ள அடுத்த பக்கத்தில் நான்கு வரிகளும் இருந்தன. இதில் உள்ள எழுந்துக்கள் அனைத்தும் வட்டெழுத்து வகையைச் சார்ந்தது.
இந்தக் கல்வெட்டு “ஸ்வஸ்தி ஶ்ரீ திருமகள் போலப் பெருநில” எனத் தொடங்குகிறது. இதனிலிருந்து இந்தக் கல்வெட்டு சுமார் 950 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த சோழ மன்னன் இராசராசனின் புகழைப் பாடுகிறது எனத் தொல்லியல் பேராசிரியர்கள் கூறினார்கள்.
மேலும் இந்தக் கல்வெட்டைத் தொடர்ந்து படிக்கும்போது “மிதுன ஞாயிற்று நிலம் குடந்தமும் இரண்டு பரும் கண்ணமும் லத்து சாம் நாட்சன் வைகுந்தனான நாராயண வேன் இந்தன் எல்லை தென் எல்லைக் காட்டு மரம் அரைசோடு” என்ற வரிகள் உள்ளன. இந்தக் கல்வெட்டு மாதம், கிழமையுடன் நிலத்தின் எல்லையைக் கூறி வைகுந்த நாராயணன் என்பவருக்கு நிலம் தானம் வழங்கியதை விளக்குகிறது.
“ஒரு பெரிய கல்வெட்டின் பல பகுதிகளில் ஒன்றுதான் இந்தக் கல்வெட்டு
என்பதால் முற்றுப் பெறாத தகவலையே இது தருகிறது. அதனால் இந்தக் கல்வெட்டு எந்தக் கோயிலைச் சார்ந்தது?” எனக் கண்டறிய முடியவில்லை. மேலும் தானம் வழங்கிய எல்லைகளைப் பற்றித் தகவல்களையும் முழுவதுமாகத் தெரிந்து கொள்ள முடியவில்லை.
புகழ் பெற்ற சோழ மாமன்னன் இராச இராசன் புகழ்பாடும் இந்தக் கல்வெட்டை இப்போது மக்கள் சிதறு தேங்காய் உடைக்க பயன்படுத்தி வருகின்றனர் என்பது வருத்தமான தகவல். 950 ஆண்டுகளுக்கு முற்பட்ட வரலாற்று சான்றுகளைத் தாங்கியுள்ள இந்தக் கல்வெட்டு பாதுகாக்கப்பட்ட வேண்டும்.
மேலும் சுமார் இதே காலத்தைச் சார்ந்த பழமையான சோழ மன்னர்களின் கல்வெட்டு ஆத்தூரில் உள்ள சோமநாதர் கோயிலும் காணப்படுகின்றன.
இந்தக் கல்வெட்டுக்களின் உதவியால் மன்னன் இராச இராசனின் ஆட்சியில் பாண்டிய நாட்டின் தெற்குக் கோடியில் உள்ள ஆத்தூர் வரையிலான பகுதி சோழர்கள் ஆட்சியின் கீழ் இருந்துள்ளது எனக் கண்டறிய உதவுகின்றன.
இந்தக் கல்வெட்டு கண்டெடுக்கப்பட்ட இடத்திலிருந்து தெற்கே சுமார் 500 மீட்டர் தொலைவில் சோமநாதர் கோயில் உள்ளது. இந்த இடத்திலிருந்து வடக்கே 400 மீட்டர் தொலைவில் ஆற்றுக்குள் உடைந்த கற்தூண்களும் மற்றும் உடைந்த கட்டங்களும் இரண்டு ஆண்டுகளுக்கு முன் கண்டுபிடிக்கப் பட்டது குறிப்பிட்ட தக்கது.
பொதுவாகக் கட்டடங்களைக் கருங்கல்லில் அடித்தளமிட்டு அதன் மேல் செங்கல்லால் கட்டுவார்கள். ஆனால் இந்தக் கல்வெட்டு கண்டறியப்பட்ட பெருமாள் கோயிலின் அடித்தளத்திலிருந்து சுமார் மூன்று அடிக்குச் செங்கலால் கட்டப்பட்டுள்ளது. அதன்மேல் செதுக்கப்பட்ட கருங்கல் துண்டுகளால் இந்தக் கோயில் கட்டப்பட்டுள்ளது.
இதனைப் பார்க்கும்போது இந்தக் கோயில் மறுசீரமைப்பிற்கு உட்படுத்தப் பட்டிருக்கும் எனக் கணிக்க முடிகிறது. மேலும் இந்தக் கல்வெட்டு அடங்கிய முப்பட்ட குமுதகம் உறுப்பு இந்தப் பெருமாள் கோயிலைச் சார்ந்ததல்ல.
மேலும் ஆத்தூர் சோமநாதர் கோயிலின் 1000 ஆண்டுகளுக்கு முற்ப்பட்டப் பகுதி முழுமையாகவே உள்ளது. இதனால் இந்தக் கல்வெட்டு அடங்கிய முப்பட்ட குமுதகம் சோமநாதர் கோயிலில் இருந்த ஒன்றுதான் எனக்கூற முடியாது.
இந்தக் கல்வெட்டு இருந்தது கோயிலா அல்லது மண்டபமா? எனவும் தெரியவில்லை.
இந்தக் கல்வெட்டின் பிற பகுதிகளும் இது இருந்த கட்டமும் கண்டறியப் பட்டால் மேலும் பல சுவையான வரலாறு வெளிப்படும் எனப் தொல்லியல் துறை பேராசிரியர்கள் தெரிவித்தனர்.
இந்தக் கண்டுபிடிப்பில் பணியாற்றிய அனைவரையும் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சந்திரசேகர் பாராட்டினார்.


