
ஆதிச்சநல்லூர் அகழாய்வு பொருட்களின் வயதை அறிவதில் மத்திய அரசு ஆர்வம் செலுத்தவில்லை என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
செய்துங்கநல்லூரைச் சேர்ந்த எழுத்தாளர் காமராஜ் என்ற முத்தாலங்குறிச்சி காமராஜ், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனுவைத் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், தாரணி அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய தொல்லியல் துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஓய்வு பெற்ற தொல்லியல்துறை கண்காணிப்பாளர் சத்தியமூர்த்திக்கு தேவையான வசதிகள் செய்துதரப்பட்டு உள்ளதாகவும், தேவைப்படும் வசதிகளை செய்துதரவும் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார். அப்போது கார்பன் சோதனைக்கு அனுப்பவது குறித்து கேள்வியெழுப்பிய நீதிபதிகள், அதிக ஆழத்தில் எடுக்கப்பட்ட பொருட்களை கார்பன் சோதனைக்கு அனுப்பினாலேயே எவ்வளவு காலம் பழமையானது என்பதை சரியாக வரையறுக்க இயலும் என தெரிவித்தனர்.
தொடர்ந்து, ஆதிச்சநல்லூர் அகழாய்வு பொருட்களின் வயதை அறிவதில் மத்திய அரசும் ஆர்வம் செலுத்தவில்லை. மாநில அரசும் ஆர்வம் செலுத்தவில்லை என வருத்தம் தெரிவித்தனர். பின்னர் கார்பன் பரிசோதனைக்கு டெல்லிக்கு அனுப்பினாலும், அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்திற்கும் அனுப்பினால் எவ்வளவு காலம் பழமையானது என்பதை வரையறுத்து உறுதி செய்து கொள்ளலாம் என தெரிவித்து வழக்கு விசாரணையை பிப்ரவரி 20 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.