அடிப்படை உரிமைகள், கடமைகள், போட்டித் தேர்வுக்கான தன்னம்பிக்கை மற்றும் சமூக வலைத்தளங்களை எச்சரிக்கையுடன் கையாள்வது குறித்து விளாத்திகுளம் மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் மங்கையர்க்கரசி மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்
இந்திய அரசியலமைப்பு தினத்தை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் உள்ள TAF ஐஏஎஸ் அகாடமியில் மாணவ, மாணவிகளுக்கான சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் விளாத்திகுளம் மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் மங்கையர்க்கரசி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, இந்திய அரசியலமைப்பின் முக்கியத்துவம், அடிப்படை உரிமைகள், கடமைகள் மற்றும் போட்டித் தேர்வுகளை எதிர்கொள்வது குறித்து மாணவ, மாணவிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: “மாணவர்கள் தங்களது இலக்கை நிர்ணயித்து, அதனை அடைவதற்கான முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபட வேண்டும். போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவதற்குக் கடின உழைப்பு, முறையான திட்டமிடல், நேர மேலாண்மை மற்றும் தன்னம்பிக்கை ஆகியவை மிகவும் அவசியம். தோல்விகளைக் கண்டு துவண்டுவிடாமல், அவற்றை வெற்றிக்கான படிக்கட்டுகளாகக் கருதித் தொடர்ந்து முயற்சி செய்ய வேண்டும்.
மேலும், இந்திய அரசியலமைப்பு வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளை அறிந்து செயல்படுவதுடன், ஒவ்வொரு குடிமகனும் கடைப்பிடிக்க வேண்டிய அடிப்படை கடமைகளைச் சமூகப் பொறுப்புணர்வுடன் நிறைவேற்றுவதும் ஒவ்வொரு மாணவரின் முக்கியப் பொறுப்பாகும்.
“வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தும்போது மாணவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். நேரில் அறிமுகமானவர்கள் மற்றும் அறிமுகமில்லாதவர்களுடன் சமூக வலைத்தளங்களில் பழகும்போது, அவர்களின் உண்மையான அடையாளத்தை அறியாமல் நம்பி ஏமாறக் கூடாது.
சமூக வலைத்தளங்கள் மூலம் தவறான தொடர்புகள் ஏற்பட்டு, தவறான பாதைக்குச் செல்லும் சூழல் உருவாகாமல் மாணவர்கள் தங்களைத் தாங்களே பாதுகாத்துக் கொள்ள வேண்டும். மேலும், பெற்றோரின் அறிவுரைகளை மதித்து நடந்து, படிப்பில் கவனம் செலுத்தி நல்ல மதிப்பெண்கள் பெற்றுப் பெற்றோருக்குப் பெருமை சேர்க்க வேண்டும்” என அறிவுரை வழங்கினார்.


