‘Tutycorp’ செயலி தொழில்நுட்பக் கோளாறு காரணமாகச் செயல்படவில்லை என்ற செய்தி முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது என மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தூத்துக்குடி மாநகராட்சியில் பொதுமக்கள் புகார் தெரிவிக்கும் ‘Tutycorp’ செயலி தொழில்நுட்பக் கோளாறு காரணமாகச் செயல்படவில்லை என்ற செய்தி முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது என மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது..
தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் தங்கள் அடிப்படைப் பிரச்சினைகள் குறித்துப் புகார் தெரிவிக்கும் மாநகராட்சி செயலி (Tutycorp) தொழில்நுட்பக் கோளாறு காரணமாகச் செயல்படவில்லை என்றும், புகார்களைப் பதிவு செய்ய முடியவில்லை என்றும் நாளிதழ்களில் செய்தி வெளியாகியிருந்தது. இச்செய்திக்குத் தூத்துக்குடி மாநகராட்சி நிர்வாகம் மறுப்புத் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
தொழில்நுட்பக் குழுவின் ஆய்வு: செய்தி வெளியானதைத் தொடர்ந்து, ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மைய தொழில்நுட்பக் குழுவினர் பல்வேறு கைபேசிகளில் Tutycorp செயலியை முழுமையாகப் பரிசோதனை செய்தனர். இதில் செயலியின் மென்பொருள் கட்டமைப்பில் எவ்விதத் தொழில்நுட்பக் கோளாறும் இல்லை என்பதும், இணைய நுழைவாயில் மற்றும் சேவையகங்கள் எந்தவிதத் தடையுமின்றிச் சீராகச் செயல்பட்டு வருவதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும், செயலியின் மேம்படுத்தப்பட்ட புதிய பதிப்பும் மீண்டும் பதிவேற்றம் செய்யப்பட்டுச் செயல்பாடு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. செயலி செயல்படவில்லை என்ற தகவலுக்கு மாறாக, பொதுமக்கள் கைபேசி செயலி மற்றும் பிற வழிகளில் தொடர்ந்து தங்கள் புகார்களைப் பதிவு செய்து வருவதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது:
கடந்த 3 மாதங்களில் (13.08.2026 முதல் 12.11.2026 வரை): மொத்தம் 3,631 புகார்கள் பெறப்பட்டு, அவற்றில் 3,071 புகார்களுக்குத் தீர்வு காணப்பட்டு முடிக்கப்பட்டுள்ளன. நடப்பு நவம்பர் மாதத்தில் (01.11.2026 முதல் 12.11.2026 வரை): மொத்தம் 528 புகார்கள் பெறப்பட்டு, அவற்றில் 431 புகார்களுக்கு உடனுக்குடன் தீர்வு காணப்பட்டுள்ளன.
தனிப்பட்ட சில பயனர்களுக்குப் புகார் பதிவு செய்வதில் சிரமம் ஏற்பட்டிருந்தால், அது செயலியின் கோளாறால் அல்லாமல் சம்பந்தப்பட்ட பயனர்களின் கைபேசி இணைய இணைப்பு குறைபாடுகளால் ஏற்பட்டிருக்கக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் தங்கள் புகார்களை Play Store-ல் “Tutycorp” செயலி, மாநகராட்சி இணையதளம்: thoothukudicorporation.org, வாட்ஸ்-அப் புகார் எண்: 7397731065, கட்டணமில்லா தொலைபேசி எண்: 1800-2030401 மூலம் புகார்களைப் பதிவு செய்யலாம் என்று மாநகராட்சி நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.


