திருச்செந்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று காலை பெய்த திடீர் கனமழையால் டி.பி. ரோடு, சன்னதி தெரு உள்ளிட்ட முக்கிய சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று காலை பெய்த கனமழையால் நகரின் முக்கிய சாலைகளில் மழைநீர் வெள்ளம்போல் தேங்கி பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

திருச்செந்தூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று அதிகாலை 4 மணி முதல் 4.30 மணி வரை பரவலாகத் தொடங்கிய மழை, பின்னர் காலை 6 மணி முதல் 6.30 மணி வரை கனமழையாகக் கொட்டித் தீர்த்தது. இந்த திடீர் கனமழையின் காரணமாக திருச்செந்தூர் டி.பி. ரோடு, சன்னதி தெரு, பேருந்து நிலைய வளாகம் மற்றும் சிவன் கோவில் தெரு உள்ளிட்ட நகரின் பிரதான பகுதிகளில் மழைநீர் குளம்போல் தேங்கியுள்ளது.இதனால் அந்த வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகளும், கோவிலுக்கு வரும் பக்தர்களும், பொதுமக்களும் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். சாலையோரங்களில் தேங்கியுள்ள மழைநீரை விரைந்து அகற்றி போக்குவரத்தைச் சீர்செய்ய நகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


