திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு, மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் துறை அதிகாரிகளுடன் நேரில் சென்று விரிவான களஆய்வு மேற்கொண்டார்.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் கந்த சஷ்டி திருவிழா தொடங்கவுள்ள நிலையில், அதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் திரு. விஷு மகாஜன், அவர்கள் இன்று (05.11.2026) துறை அதிகாரிகளுடன் நேரில் களஆய்வு மேற்கொண்டார்.
பக்தர்களின் வருகை மற்றும் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு பின்வரும் முக்கியப் பகுதிகளில் ஆட்சியர் ஆய்வுகளை மேற்கொண்டார். வீரபாண்டியபட்டணம் ஜெ.ஜெ நகர், திருநெல்வேலி ரோடு (வியாபாரிகள் சங்கம் பகுதி), செந்தில் ஆண்டவர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகம் மற்றும் ஐடியல் பார்க் ஆகிய இடங்களில் அமைக்கப்படும் தற்காலிக வாகன நிறுத்துமிடங்களில் அடிப்படை வசதிகளை ஆய்வு செய்தார்.
கோவில் வளாகத்தில் விரதம் இருக்கும் பக்தர்களுக்காக அமைக்கப்பட்டுள்ள நிரந்தர மற்றும் தற்காலிக தங்கும் கூடங்கள், குடிநீர் மற்றும் கழிப்பறை வசதிகளைப் பார்வையிட்டார். அரசு மருத்துவமனையில் பக்தர்களுக்குத் தேவையான மருத்துவ உபகரணங்கள், படுக்கை வசதிகள் மற்றும் கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள முதலுதவி மையங்களையும் நேரில் ஆய்வு செய்தார்.
சூரசம்ஹாரம் நடைபெறும் கடற்கரைப் பகுதி மற்றும் கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு மையத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு மற்றும் முன்னேற்பாடுகளைக் கேட்டறிந்தார்.
களஆய்வைத் தொடர்ந்து, திருக்கோவில் அலுவலகக் கூட்டரங்கில் அனைத்துத் துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது. விழாவிற்கு வரும் லட்சக்கணக்கான பக்தர்களுக்கு எந்தவித சிரமமும் இன்றிப் பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகளைச் சிறப்பாகச் செய்து முடிக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
இந்நிகழ்வில் திருக்கோவில் இணை ஆணையர் அருணாச்சலம், திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியர் கௌதம், உதவி ஆட்சியர் (பயிற்சி) பாட்டீல் கிருஷ்ணா பபுருவான், நகராட்சி ஆணையாளர் ஈழவேந்தன், வட்டாட்சியர் தங்கசாமி உள்ளிட்ட அரசுத் துறை அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.


