தூத்துக்குடி சிவன் கோவில் தெப்பக்குளத்தில் ரூ.1 கோடி மதிப்பில் நடைபெற்று வந்த தடுப்புச் சுவர் கட்டும் பணிகள் அரைகுறையாக நின்றுள்ளது.
தூத்துக்குடி அருள்மிகு பாகம்பிரியாள் உடனுறை சங்கரேஸ்வரர் திருக்கோவிலுக்குச் சொந்தமான தெப்பக்குளத்தில் சீரமைப்புப் பணிகள் அரைகுறையாக நிறுத்தப்பட்டுத் தண்ணீர் நிரப்பப்பட்டு வருவதால், தடுப்புச் சுவர்கள் மீண்டும் இடிந்து விழும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகப் பக்தர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
கடந்த 2024-ஆம் ஆண்டு தெப்பக்குளத்தைச் சீரமைத்தபோது அதன் இருபக்கச் சுவர்களும் இடிந்து விழுந்தன. இதன் காரணமாகக் கடந்த ஆண்டு தெப்ப உற்சவம் நடைபெறவில்லை. இதனைத் தொடர்ந்து, “தெப்பக்குளம் பழமை மாறாமல் சீரமைக்கப்படும்” என மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி அறிவித்தார்.
அதன்படி, மாநகராட்சிப் பொது நிதியிலிருந்து சுமார் ரூ.1 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுத் தடுப்புச் சுவர் எழுப்பும் பணிகள் நடைபெற்று வந்தன. இருப்பினும், தடுப்புச் சுவர் கட்டும் பணிகள் 50 சதவீதம் மட்டுமே முடிவடைந்த நிலையில், பணிகள் முழுமையடையாமல் பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளன.
பணிகள் முழுமை பெறாத நிலையில், தெப்பக்குளத்தில் தற்போது 75 சதவீதம் வரை தண்ணீர் நிரப்பப்பட்டுள்ளது. அந்தத் தண்ணீர் தற்போது பச்சை நிறமாக மாறித் துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால் புதிதாகக் கட்டப்பட்ட தடுப்புச் சுவர்களும் மீண்டும் இடிந்து விழும் ஆபத்தான நிலை உருவாகியுள்ளது.
தற்போது மழைக்காலம் என்பதால் மழைநீரும் குளத்தில் தேங்கும் சூழல் நிலவுகிறது. எனவே, உடனடியாகத் தண்ணீரை நிரப்புவதை நிறுத்திவிட்டு, குளத்தில் உள்ள கழிவுநீரை முழுமையாக வெளியேற்ற வேண்டும்; தடுப்புச் சுவர்களை முழுமையாகக் கட்டி முடித்து, குளத்தின் அடியில் பளிங்குக் கற்கள் பதித்த பிறகே மீண்டும் தண்ணீரை நிரப்ப மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் தீவிர கோரிக்கை விடுத்துள்ளனர்.


