ஸ்டார் 3.0 திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தூத்துக்குடியில் நவம்பர் 10 மற்றும் 11 ஆகிய இரு நாட்கள் முழு வேலைநிறுத்தப் போராட்டம் நடததப்படும் என்று ஆவண எழுத்தாளர்கள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
தமிழ்நாடு பத்திரப்பதிவுத் துறையில் அமல்படுத்தப்படவுள்ள ‘ஸ்டார் 3.0’ திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, தூத்துக்குடி பதிவு மாவட்டத்தில் வரும் நவம்பர் 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் இரு நாட்கள் முழு ஆவணப் பதிவு வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறவுள்ளது.
பத்திரப்பதிவுத் துறையில் ஆவண எழுதக்கூடிய பணியைத் டெண்டர் முறையின் மூலம் தனியாருக்குத் தாரை வார்ப்பதைக் கண்டித்தும், ஆவண எழுத்தாளர்கள், வழக்கறிஞர்கள், கணினி தட்டச்சர்கள் மற்றும் முத்திரைத்தாள் விற்பனையாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவும் இந்த வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப்படுகிறது.
மேலும், புதிய ஸ்டார் 3.0 திட்டமானது ஆவணப் பதிவுப் பணியாளர்களை மட்டுமன்றி பொதுமக்களையும் பெருமளவில் பாதிக்கும் என ஆவண எழுத்தாளர்கள் கூட்டமைப்பு தெரிவிக்கின்றனர். இதன் காரணமாக, வரும் 10.11.2026 மற்றும் 11.11.2026 ஆகிய இரண்டு நாட்களும் தூத்துக்குடி பதிவு மாவட்டத்திற்குட்பட்ட அனைத்துச் சார்பதிவாளர் அலுவலகங்களிலும் ஆவணப் பதிவுப் பணிகளை முழுமையாக நிறுத்துவது என்றும், அலுவலக விடுமுறை எடுப்பது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
எனவே, இப்போராட்டத்திற்கு அனைத்து ஆவண எழுத்தாளர்கள், வழக்கறிஞர்கள், கணினி தட்டச்சர்கள், முத்திரைத்தாள் விற்பனையாளர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு தூத்துக்குடி பதிவு மாவட்டப் போராட்டக் அமைப்புகள் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.


