திருச்செந்தூர் கோவில் உண்டியல் எண்ணப்பட்டதில் பக்தர்கள் காணிக்கையாகச் செலுத்திய ரூ.2.91 கோடியும், 640 கிராம் தங்கமும் பெறப்பட்டன.
அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான புகழ்பெற்ற திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்பட்டதில், பக்தர்கள் செலுத்திய காணிக்கை மூலம் ரூ. 2.91 கோடி ரொக்கமும், 640 கிராம் தங்கமும் பெறப்பட்டுள்ளன.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலுக்கு தினந்தோறும் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், பிற மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். பக்தர்கள் கோவிலில் உள்ள உண்டியல்களில் செலுத்தும் காணிக்கைகள் மாதம் தோறும் திறக்கப்பட்டு எண்ணப்பட்டு வருகின்றன.
அதன்படி, கோவில் நிர்வாக அலுவலக அரங்கில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. அறங்காவலர் குழுத் தலைவர் அருள்முருகன் தலைமை வகித்து உண்டியல் எண்ணும் பணியைப் பார்வையிட்டார்.
உண்டியல் எண்ணப்பட்டதில் பெறப்பட்ட காணிக்கைகளின் முழு விவரம்: ரொக்கப் பணம் ரூ. 2,91,05,513, தங்கம் 640 கிராம், வெள்ளி 12,228 கிராம், பித்தளை 31,050 கிராம், செம்பு: 3,940 கிராம், தகரம்: 6,800 கிராம், வெளிநாட்டு கரன்சிகள் 1,261 நோட்டுகள் இருந்தன.
இந்நிகழ்வில் இணை ஆணையர் அருணாசலம், அறங்காவலர்கள் வனிதா, செல்வராஜ், அரிஸ்டோ லோகநாதன், பிரபாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் துணை ஆணையர்கள் யக்ஞ நாராயணன், கவிதா, உதவி ஆணையர் லோகநாதன், அலுவலக கண்காணிப்பாளர் ரோகிணி, ஆய்வர் மகேஸ்வரி உள்ளிட்ட கோவில் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.


