திருச்செந்தூர் முருகன் கோவிலில் வரும் நவம்பர் 10-ஆம் தேதி தொடங்கும் கந்த சஷ்டி திருவிழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் வினய் நேரில் ஆய்வு செய்தார்.
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் வரவிருக்கும் கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு பக்தர்களுக்காக மேற்கொள்ளப்பட்டு வரும் விரிவான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் வினய் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூரில் ஆண்டுதோறும் கந்த சஷ்டி திருவிழா மிக விமரிசையாகக் கொண்டாடப்படும். இந்த ஆண்டிற்கான கந்த சஷ்டி திருவிழா வரும் நவம்பர் 10-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. விழாவின் சிகர நிகழ்வான சூரசம்ஹாரம் வரும் நவம்பர் 15-ஆம் தேதி மாலையில் திருக்கோவில் கடற்கரையில் நடைபெறவுள்ளது.
கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டுத் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என்பதால், பக்தர்கள் கோவில் வளாகத்தில் தங்குவதற்காகப் அமைக்கப்பட்டு வரும் தற்காலிகக் கொட்டகைகள், தற்காலிக வாகன நிறுத்தங்கள், குடிநீர் மற்றும் சுகாதார வசதிகள் உள்ளிட்ட பல்வேறு முன்னேற்பாடு பணிகளை இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் வினய் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஆய்வின் போது, தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத் உடனிருந்து பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தினார். இந்நிகழ்வில் திருக்கோவில் அறங்காவலர் குழுத் தலைவர் அருள்முருகன், இணை ஆணையர் அருணாச்சலம், துணை ஆணையர் யக்ஞ நாராயணன், உதவி ஆணையர் லோகநாதன், டி.எஸ்.பி. மகேஷ்குமார், அறங்காவலர்கள் செல்வராஜ், பிரபாகரன் உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் காவல்துறையினர் கலந்துகொண்டனர்.


