தூத்துக்குடி மாவட்ட லஞ்ச ஒழிப்பு காவல்துறை சார்பில் நடைபெற்ற லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியில் 300-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவிகள் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி மாவட்ட லஞ்ச ஒழிப்பு காவல்துறை, தூத்துக்குடி போக்குவரத்து காவல்துறை மற்றும் தூத்துக்குடி சுப்பையா வித்யாலயம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில், லஞ்சத்திற்கு எதிராகப் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலான விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது.
சுப்பையா வித்யாலயம் பள்ளி முன்பிருந்து தொடங்கிய இப்பேரணிக்குப் போக்குவரத்து காவல் ஆய்வாளர் சுனைமுருகன் தலைமை தாங்கினார். லஞ்ச ஒழிப்பு காவல் ஆய்வாளர் அன்னலட்சுமி பேரணியைக் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
பள்ளி வளாகத்தில் இருந்து புறப்பட்ட பேரணியானது, முக்கிய வீதிகளான காய்கறி மார்க்கெட், பழைய பேருந்து நிலையம், குருஸ் பெர்னாந்து சிலை மற்றும் வி.இ. ரோடு வழியாகச் சென்று மீண்டும் பள்ளியை வந்தடைந்தது.
இப்பேரணியில் 300-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவிகள் கலந்துகொண்டு, லஞ்சம் கொடுப்பதையும் வாங்குவதையும் தவிர்க்க வலியுறுத்தியும், நேர்மையான நிர்வாகத்தை வலியுறுத்தியும் லஞ்சத்திற்கு எதிரான விழிப்புணர்வு முழக்கங்களை எழுப்பியவாறு சென்றனர்.


