தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை, மாவட்ட தொழில் மையம் மற்றும் தமிழ்நாடு புத்தொழில் நிறுவனம் ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்த சிறப்பு தொழிற்கடன் முகாம் நடைபெற்றது.

இம்முகாமிற்கு மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் முன்னிலை வகித்தார். விழாவில் தமிழக குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் பெ. மதன் ராஜா கலந்துகொண்டு, 75 பயனாளிகளுக்கு ரூ.1.71 கோடி மானியத்துடன் ரூ.46.56 கோடி திட்ட மதிப்பிலான கடன் ஆணைகளை வழங்கிப் பேசியதாவது:

“தூத்துக்குடி மாவட்டத்தில் 2026-27-ஆம் நிதியாண்டில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு ரூ.6,482.19 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. செப்டம்பர் 30-ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் 14,291 தொழில் நிறுவனங்களுக்கு வங்கிகள் மூலம் ரூ.4,494.33 கோடி கடன் ஒப்பளிப்பு வழங்கப்பட்டது. இது ஆண்டு இலக்கில் 69.33 சதவீதமாகும்.

நடப்பு நிதியாண்டுக்கான கடன் இலக்கை விரைவில் எட்டும் நோக்கில் மாதந்தோறும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் கடன் வசதியாக்கல் முகாம் நடத்தப்படுகிறது. அக்டோபர் மாதத்திற்கான முகாமில் ரூ.125 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில், ரூ.165.77 கோடி கடன் வழங்கப்பட்டது” என்றார்.

நிகழ்ச்சியில் அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம் உட்பட பல்வேறு திட்டங்களின் கீழ் மொத்தம் 75 பயனாளிகளுக்குக் கடன் ஆணைகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் மாவட்ட தொழில் மையப் பொது மேலாளர் ஸ்வர்ணலதா, உதவி ஆட்சியர் (பயிற்சி) பாட்டீல் கிருஷ்ணா பபுருவான், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி முதுநிலை மேலாளர் ஜெயந்த் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.