காயல்பட்டினம் நகரில் கனமழை பெய்து தண்ணீர் தேங்கிய நிலையிலும், மாவட்ட ஆட்சியரகம் வெளியிட்ட அறிக்கையில் 00.00 மி.மீ எனப் பதிவாகியுள்ளது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், காயல்பட்டினம் மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளின் மழைப்பொழிவைக் கணக்கிடுவதற்காகக் காயல்பட்டினம் தென்பாக்கம் கிராம நிர்வாக அலுவலகம் அருகில் மழைமானி அமைக்கப்பட்டுச் செயல்பட்டு வருகிறது.
பொதுவாக மழைமானி அமைக்கப்படும் இடத்தை சுற்றிலும் குறிப்பிட்ட இடைவெளி வரை கட்டிடங்களோ, மரங்களோ அல்லது அடர்ந்த செடி கொடிகளோ இருக்கக் கூடாது என்பது முதன்மை விதிமுறையாகும். ஆனால், காயல்பட்டினம் மழைமானியைச் சுற்றி ஏராளமான கட்டிடங்களும் அடர்ந்த மரங்களும் உள்ளன. இதனால் இதன் மூலம் பெறப்படும் மழைப்பொழிவு அளவீட்டின் துல்லியம் குறித்துத் தொடக்கம் முதலே கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், நேற்று (19.10.2026) மதியம் 01:30 மணியளவில் காயல்பட்டினம் நகர் முழுவதும் மிகக் கடுமையான மழை கொட்டித் தீர்த்தது. குறைந்தபட்சம் 5 மில்லி மீட்டருக்கு மேல் மழை பெய்திருக்கக் கூடும் எனக் கணக்கிடப்பட்ட நிலையில், நகரெங்கும் தாழ்வான பகுதிகளிலும் சாலை ஓரங்களிலும் மழைநீர் தேங்கியது.
ஆனால், இன்று மாவட்ட ஆட்சியரகம் வெளியிட்ட அதிகாரப்பூர்வ மழைப்பொழிவுப் பட்டியலில், காயல்பட்டினத்தில் நேற்று மழையே பெய்யவில்லை (00.00 மில்லி மீட்டர்) எனக் குறிப்பிடப்பட்டுள்ளது அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது தொடர் விடுமுறை காலம் என்பதால், மழைமானியைக் பராமரிக்கும் பொறுப்பில் உள்ள அரசு ஊழியர்கள் நேரில் சென்று கவனிக்காமல் தன்னிச்சையாகத் தவறான அளவீட்டைத் தலைமையகத்திற்கு அனுப்பினார்களா அல்லது மாவட்ட நிர்வாகமே இவ்வாறு பதிவிட்டுள்ளதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
பேரிடர் மேலாண்மை மற்றும் நிவாரணப் பணிகளுக்கு மழைப்பொழிவு அளவீடு மிகவும் முக்கியமான காரணியாக விளங்கும் நிலையில், இதுபோன்ற அலட்சியப் போக்கு பொதுமக்களின் பாதுகாப்பைப் பாதிக்கும். எனவே, மாவட்ட நிர்வாகம் உடனடியாகத் தலையிட்டு காயல்பட்டினம் மழைமானியின் செயல்பாட்டை ஆய்வு செய்ய வேண்டும் என்றும், விதிகளுக்கு உட்பட்டு அதனைச் சரியான இடத்தில் மாற்றி அமைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


