தூத்துக்குடி மாவட்டத்தில் புதிதாக இணைக்கப்பட்ட பஞ்சாயத்துகளுக்கு புதிய தனி அலுவலர்கள் இன்று நியமிக்கப்பட்டு இன்று பொறுப்பேற்றுக் கொண்டனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் ஏற்கனவே உள்ள 403 பஞ்சாயத்துகள் மற்றும் புதிதாக இணைக்கப்பட்ட 12 பஞ்சாயத்துகள் உட்பட மொத்தம் 415 ஊராட்சிகளுக்கும் நியமிக்கப்பட்ட தனி அலுவலர்கள் இன்று (அக்டோபர் 20) முறைப்படி பொறுப்பேற்றுக் கொண்டனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 403 பஞ்சாயத்துத் தலைவர்களின் பதவிக் காலம் கடந்த 05.01.2025 அன்றுடன் முடிவடைந்த நிலையில், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தனி அலுவலர்களாக நியமிக்கப்பட்டுப் பஞ்சாயத்துப் பணிகளைக் கவனித்து வந்தனர்.
இந்நிலையில், சில ஆண்டுகளுக்கு முன்பு தென்காசி மாவட்டத்திலிருந்து கோவில்பட்டி ஒன்றியத்தில் இணைக்கப்பட்ட 12 பஞ்சாயத்துகளில் பணியாற்றி வந்த தலைவர்களின் பதவிக் காலம் இன்றுடன் (20.10.2026) நிறைவடைந்தது.
தமிழகம் முழுவதும் பஞ்சாயத்துத் தலைவர்களின் பதவிக் காலம் இன்றுடன் நிறைவடைவதை ஒட்டி, தமிழக அரசு நேற்று புதிய உத்தரவு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், இதுவரை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தனி அலுவலர்களாகச் செயல்பட்டு வந்த நிலையில், அதில் தற்போது மாற்றம் செய்யப்பட்டு, இனி ‘துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள்’ தனி அலுவலர்களாகச் செயல்பட்டுப் பஞ்சாயத்து நிர்வாகப் பொறுப்புகளைக் கவனிப்பார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, தூத்துக்குடி மாவட்டத்தில் ஏற்கனவே உள்ள 403 பஞ்சாயத்துகள் மற்றும் புதிதாக இணைக்கப்பட்ட 12 பஞ்சாயத்துகள் உட்பட மொத்தம் 415 பஞ்சாயத்து அலுவலகங்களுக்கும், அந்தந்த ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இன்று முதல் தனி அலுவலர்களாகப் பொறுப்புகளைக் கவனிப்பார்கள் என்று தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, நியமிக்கப்பட்ட துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அனைவரும் இன்று தங்களது ஊராட்சிக்கு உட்பட்ட பஞ்சாயத்து அலுவலகங்களில் தனி அலுவலர்களாக முறைப்படி பதவி ஏற்றுக்கொண்டனர்.


