இணையவழி விற்பனைத் தளங்களில் பொருட்களை வாங்கும் நுகர்வோரிடம் பல்வேறு வகையான கூடுதல் கட்டணங்கள் வசூலிக்கப்படுதாக எம்பவர் இந்தியா நுகர்வோர் அமைப்பின் செயல் இயக்குநர் ஆ.சங்கர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “பொருளின் விலையுடன் கூடுதலாக வசூலிக்கப்படும் ஒவ்வொரு கட்டணத்திற்கும் அதன் பெயர், தொகை மற்றும் வசூலிப்பதற்கான காரணம் ஆகியவற்றைத் தெளிவாகத் தெரிவிக்க வேண்டும். ஆர்டரை உறுதிப்படுத்துவதற்கு முன்பே பொருளின் விலை, விநியோகக் கட்டணம், பணம் செலுத்தும் முறைக்கான கட்டணம், வரிகள் உள்ளிட்ட அனைத்தையும் தனித்தனியாகக் குறிப்பிட்டு, நுகர்வோர் செலுத்த வேண்டிய இறுதித் தொகையைத் தெளிவாகக் காட்ட வேண்டும். கட்டண விவரங்கள் மறைக்கப்படுவதோ அல்லது ஆர்டரின் இறுதிக் கட்டத்தில் மட்டுமே தெரியவருவதோ முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும்.

பணம் செலுத்தும் முறையைப் பொறுத்து விதிக்கப்படும் கட்டண வேறுபாடுகள், கூடுதல் கட்டணங்களுக்கான அடிப்படைகள் மற்றும் கட்டண மாற்றங்களுக்கான காரணங்கள் பொதுமக்களுக்குப் புரியும் வகையில் வெளியிடப்பட வேண்டும். மேலும், ஆர்டர் ரசீது மற்றும் விலைப்பட்டியலிலும் அனைத்துக் கட்டணங்களும் தனித்தனியாக இடம்பெறுவதை உறுதி செய்ய வேண்டும்.

மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையத்தின் ஆய்வு: ஒவ்வொரு பரிவர்த்தனையிலும் வசூலிக்கப்படும் சிறிய தொகைகள்கூட கோடிக்கணக்கான ஆர்டர்களின் அடிப்படையில் பெரும் தொகையாக மாறக்கூடும். இதனால் நுகர்வோருக்கு ஏற்படும் ஒட்டுமொத்த பொருளாதாரத் தாக்கத்தை மதிப்பிடுவதுடன், கூடுதல் கட்டணங்கள் சட்ட விதிகளுக்கு உட்பட்டு வசூலிக்கப்படுகின்றனவா என்பதையும் மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் ஆய்வு செய்ய வேண்டும்; விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

“நுகர்வோர் எவ்வளவு தொகை செலுத்துகிறார்கள் என்பது மட்டுமல்ல; எதற்காகச் செலுத்துகிறார்கள் என்பதும் அவர்களுக்குத் தெளிவாகத் தெரிய வேண்டும். இணையவழி விற்பனைத் தளங்களில் அனைத்து கூடுதல் கட்டணங்களையும் முன்கூட்டியே வெளிப்படையாக அறிவிப்பதைக் கட்டாயப்படுத்தி, நுகர்வோரின் பணத்தையும் உரிமைகளையும் பாதுகாக்க மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.