தூத்துக்குடியில் டெங்கு கொசுப் புழுக்கள் கண்டறியப்பட்ட தனியார் பர்னிச்சர் நிறுவனத்திற்கு மாநகராட்சி அதிகாரிகள் ரூ.10,000 அபராதம் விதித்து, சுகாதாரச் சட்டத்தின் கீழ் நோட்டீஸ் வழங்கினர்.
தூத்துக்குடி மாநகராட்சி வடக்கு மண்டலத்திற்கு உட்பட்ட 1-வது வார்டு பண்டாரம்பட்டி அருகில் உள்ள பாலையாபுரம் பகுதியில் மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் இன்று (20.10.2026) காலை திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்பகுதியில் இயங்கி வரும் தனியார் பர்னிச்சர் நிறுவனம் ஒன்றில் அதிகாரிகள் ஆய்வு செய்தபோது, அங்குத் தேங்கிக் கிடந்த தண்ணீரில் டெங்கு காய்ச்சல் தொற்றுநோயைப் பரப்பக்கூடிய கொசுப் புழுக்கள் உற்பத்தியாகியிருந்தது கண்டறியப்பட்டது. மேலும், அந்நிறுவனத்தில் இருந்து சேகரிக்கப்படும் குப்பைகளைப் பொதுவெளியில் கொட்டி சுகாதாரச் சீர்கேடு ஏற்படுத்தியதும் உறுதியானது.
இதனைத் தொடர்ந்து, சுகாதாரம் பேணத் தவறிய அந்நிறுவனத்தின் உரிமையாளருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு உடனடியாக வசூலிக்கப்பட்டது. மேலும், அந்நிறுவன வளாகத்தைச் சுற்றிலும் எப்போதும் தூய்மையாக வைத்திருக்க வேண்டும் எனப் பொது சுகாதாரச் சட்டத்தின் படியும், திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2026-ன் படியும் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் நிறுவன உரிமையாளருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.


