25. தூக்குதண்டனை கைதிகள் தப்பிப்பார்களா–?
முன்கதைச் சுருக்கம்
சுதந்திரப் போராட்டம் நடந்துக் கொண்டிருக்கிறது. காந்தியடிகள் ‘செய் அல்லது செத்துமடி’ எனப் போராட்டம் நடத்துகிறார். உப்புச் சத்தியாகிரகமும் நடந்துகொண்டிருக்கிறது. இந்த வேளையில், குலசேகரப்பட்டினம் உப்பள மேலாளர் லோன் துரையை நமது ஊர்க்காரர்கள் 27 பேர் இணைந்து கொலை செய்து விடுகிறார்கள். மிகப்பரபரப்பான இந்தசம்பவம் நம்மை ஆளும் பிரிட்டிஷ் அரங்சாங்கத்தினையே மிரட்டி விட்டது. இதனால் அரண்டு போனார்கள் பிரிட்டிஷ் காரர்கள். இதற்கிடையில் கொலையாளிகளை போலீசார் கைது செய்து விடுகிறார்கள். அவர்களை மீட்கப் பல்வேறு முயற்சிகள் நடைபெறுகின்றன. காங்கிரஸ் காரர்கள் ஒவ்வொரு முயற்சி செய்து வருகிறார்கள். அதில் முக்கிய பங்கு வகித்து படுக்கப்பத்து மேகநாதன் தனி முயற்சி எடுத்துச் செயல்படுகிறான். போராட்ட காரர்களை காப்பாற்ற வேண்டும் என சென்னைக்கு இரயில் ஏறி விடுகிறான். ராஜாஜியை பார்த்தால் இந்த பிரச்சனை தீரும் என அவன் நம்பினான். எனவே ராஜாஜியை பார்க்கச்செல்கிறான். அங்கே ஒரு அழகான பெண்ணை சந்திக்கிறான். இனி…
பெரும்பாலுமே வீரபாகுவுக்கு ஒரு மனக்குறை உண்டு.
1942- இல் தூத்துக்குடியில் உப்பு சத்தியாகிரகம் நடந்த போது, தான் சிறைக்குச் செல்லவில்லையே என்ற எண்ணம் வீரபாகு அவர்களிடம் இருந்தது.
அப்படி போய் இருந்தால் நல்லது நடந்து இருக்குமா?. சிறைக்கு சென்றவர்கள் குடும்பத்தினை பாதுகாக்க வாய்ப்பு கிடைத்திருக்குமா?.
இப்போது கூட தூக்கு தண்டனை கைதிகளாக இருந்த காசிராஜன், ராஜகோபாலுக்கு வழக்கு நடத்த பணம் தேவை படுகிறது. 26 ஆயிரம் ரூபாய் உடனே புரட்டவேண்டும். வீரபாகுபிள்ளை தான் புரட்டி கொடுத்தார். இவர் சிறையில் இருந்தால் இதுபோன்ற வேலைகள் நடக்குமா என்ன?
பல சம்பவங்கள் அவர் மனதில் தோன்றி மறைந்தது. சிறைவாசத்தில் இருந்த போது மாநிலத்திலுள்ள பல பெரியவர்கள் பழக்கமிருந்தது. ஆனாலும் நமது ஜில்லாவில் நடந்த சம்பவத்துக்கு மாநிலம் பூராவும் இருபதினாயிரம் ரூபாய் வசூலிக்க முடியுமா? என்ற தயக்கமும் இருந்தது. ஆனாலும் அந்த பிரச்சனையை தீர்க்க முயற்சி செய்து நடவடிக்கையில் ஈடுபட்டார்.
அதுபோலத்தான் கிட்டய்யரும். குலசேகரபட்டினம் கொலை வழக்கில் தொடர்ந்து மேல் கோர்டில் வழக்கு நடத்த பணம் தேவைப்பட்டது.
குலசேகரப்பட்டினம் கொலை வழக்கை சம்பந்தப்பட்டவர்கள் பிரச்சனையாகவோ அல்லது நெல்லை மாவட்டப் பிரசினையாகவோ கருதக்கூடாது. “வெள்ளையனே வெளியேறு’ என்ற பொதுஜன இயக்கத்தின் ஒரு பகுதியாகக் கருதவேண்டும் என்று கிட்டய்யர் கருதினார்.
இந்த நேரத்தில் வடநாட்டிலும் இது போல ஒரு சம்பவம் நடந்து கொண்டிருந்தது. “சிமூர், அஷ்டி” யில் நடைபெற்ற கொலை சம்பந்தமாகத் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்ட வாலிபர்கள் இருந்தனர். அவர்களுக்காக காந்திஜி வைசிராயிடம் கருணை மனு கொடுத்தார். அவர்களின் தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க கடிதப்போக்குவரத்து நடத்திக்கொண்டிருந்தார். அதே போல் காந்திஜி குலசேகரபட்டினம் கொலைவழக்கில் சம்பந்தப்பட்டவர்களும் செய்வாரா?
செய்ய வேண்டும். காந்திஜி இவர்களை காப்பாற்ற வழி முறை செய்ய வேண்டும்.


வடக்கே “சீமூர், அஷ்டி” வழக்கும், தெற்கே குலசேகரப்பட்டினம் வழக்கும் ஒரே மாதிரி சூழ்நிலைதான் உள்ளது. 1942-இல் “வெள்ளையனே வெளியேறு”, “செய் அல்லது செத்துமடி” என்று தொண்டர்களுக்கு விடுத்த அறைகூவலை சரியாகப் புரிந்து கொள்ளாமல் வேகத்தில் உணர்ச்சி வசப்பட்டு நடந்த சம்பவங்கள் இவை இரண்டும். செயலில் ஈடுபட்டவர்கள் வாலிபர்கள். எனவே கருணையுடன் கவனிக்கப்பட வேண்டிய பிரச்சனை. இதை யெல்லாம் விவரமாக நீண்டதோர் கடிதம் எழுதி காந்திஜி அவர்கள் குலசேகரப்பட்டினம் கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட வாலிபர்களைக் கப்பாற்ற முயற்சிக்க வேண்டும் என்று கிட்டய்யர் கோரியிருந்தார்.
கிட்டய்யர் கோரிக்கையை நிச்சயம் காந்திஜி கேட்பார் என்ற நம்பிக்கை இருந்தது.
அதே நேரத்தில் அவசரமான உள்ளூரில் ராஜாஜியையும் பார்க்க வேண்டும்.
ஆம். ராஜாஜியை நேரில் கண்டு எப்படியாவது இந்த வாலிபர்கள் உயிரைக் காப்பாற்ற வேண்டும். பிரிவி கவுன்சிலில் ராஜாஜியை ஆஜராக செய்யவேண்டும். அதற்காக ராஜாஜியை பார்க்க சென்றார்.
அந்த வேளையில் அங்கே மேகநாதன் இருந்தான். அந்த அலுவலகத்தில் ராஜாஜிக்கு தேவையான வேலைகளை செய்து கொண்டிருந்தான்.
கிட்டய்யரை பார்த்தவுடன் ஒடியே வந்தான். “என்ன சாமி எப்படியிருக்கிய”.
“நன்னா இருக்கேன்வோய்”
“நன்கு அவனை உற்றுக்கவனித்தார் கிட்டயர்”.
“இங்க என்னவோய் செய்து கிட்டு இருக்கே”.
“அய்யாவுக்கு ஒத்தசையாக இருக்கேன்”.
“நல்ல பயடே. எங்க வந்தாலும் ஒட்டிகிடுதே. நல்ல பய”.
“அய்யா. இதுவும் நம்ம வீடு தான். சுதந்திரத்தை தேடிக்கிட்டு இருக்கிற வீடு”.
“நல்லா பேசுத”.
சிரித்தார் கிட்டய்யர். அப்போது ராஜாஜி வந்தார்.
வந்து அமர்ந்தார். “என்ன கிட்டய்யர்”.
“இல்லே குலசை கொலை வழக்கில தூக்கு மேடையை தொட்டுக்கிட்டு நிக்கானுவ நம்ம பயலுவ. அவனுவள காப்பாத்தணும்”.
“ம். அதான் மேகநாதன் இரண்டு நாளைக்கு முன்னாலே வந்துட்டான். அவனும் இதைத்தான் சொல்லுதான்”.
“ஆமாம். நானும் அதைத்தான் சொல்லுதேன்”.
“1942 இயக்கமே துவக்கியிருக்கக் கூடாது. யுத்த கால நெருக்கடியாகையால் இயக்கத்தை அரசாங்கம் எப்படியாவது நசுக்கி விடும். அம்மாதிரி அரசாங்கம் கெடுபிடி நடவடிக்கை எடுக்கும் பொழுது இயக்கம் பலாத்காரத்தில்தான் போய் முடியும்” ராஜாஜி.
“இந்த கருத்தை தான் காந்திஜி உங்க கிட்ட கேட்கலையே”

“ம் இந்தக் கருத்தை காந்திஜிக்கு நேரடியாகத் எடுத்து சென்று வாதாடினேன். அவர் கேட்கலை”
“இதனால் காந்திஜி மேலே ராஜாஜிக்கு கோபம் தான். இவர் செய் அல்ல செத்து மடி என சொன்னார். இளைஞர்கள் அதை தவறுதால நினைச்சிக்கிட்டு வெள்ளையனை கொலை செய்துட்டானுவ”.
“பாவம் இளைஞர்கள்” ராஜாஜி இந்த வாலிபர்கள் மேல் அனுதாபம் இருந்த போதிலும் உடனடியாகத் தலையிட சற்றுத் தயங்கினார்.
சிறிது நேரம் அமர்ந்து பேசி பார்த்தார் கிட்டய்யர். ஆனால் ராஜாஜி கேட்பதாக தெரியவில்லை.
என்ன செய்வது. சரி வேறு வழியில் தான் முயற்சி செய்ய வேண்டும். என்ன செய்யலாம் யோசனையுடன் வெளியே கிளம்பினார் கிட்டய்யர்.
மேகநாதன் ஒடியே வந்தான்.
“என்ன அய்யா. அவரை திருப்பி அனுப்பிட்டிங்க”.
ராஜாஜி சிரித்தார்.
“போகட்டும் பார்த்துக்கொள்ளலாம்”.
“என்னய்யா இப்படி சொல்றீங்க. அப்படின்னா காசிராஜன் ராஜகோபலோட நிலை என்னாகும்”.
“கவலை படாதே எல்லாமே நல்லது நடக்கும்”.
******
மகாத்மா காந்தி கிட்டய்யர் எழுதிய கடிதத்தினை படித்து விட்டார். அதன் ஒரு நகலை ராஜாஜிக்கும் அனுப்பியும் விட்டார். வீட்டுக்கு வந்து பார்த்த போது, “நீ ராஜாஜியை போய்ப் பார்” என்று கிட்டய்யருக்கு பதிலும் எழுதி விட்டார்.
அப்படியென்றால் ஏன் என்னை திருப்பி அனுப்புகிறார் ராஜாஜி.
ராஜாஜிக்கும், காந்திஜிக்கும் 1942 இயக்கத்தில் தீவிர கருத்து வேறுபாடு இருந்தபோதிலும், தான் கேட்டுக் கொண்டால் ராஜாஜி நிச்சயம் தன் விருப்பத்தை நிறைவேற்றி வைப்பார் என்பதில் காந்திஜிக்கு அவ்வளவு நம்பிக்கை இருந்தது.
****
மறுநாள் ராஜாஜியைப் போய் கிட்டய்யர் பார்த்தார்.
கிட்டய்யர் எதுவுமே பேசவில்லை. ராஜாஜி பேசட்டும் என காத்து இருந்தார். நேற்று என்னை திருப்பி அனுப்பி விட்டார். இருக்கட்டும். ஆனாலும் எனக்கு கடிதம் வந்தது போலவே அவருக்கும் நேற்று கடிதம் வந்திருக்கும் என்ன பேசுகிறார் பார்ப்போம் என இருந்து விட்டார்.
ராஜாஜித்தான் பேசினார். “குலசேகரப்பட்டிணம் கேஸைப் பற்றி நீ காந்திஜிக்கு கடிதம் எழுதியிருந்தாயா” .
“ம். ஏன் எழுதக்கூடாதா?”
“எழுததலாம். என்ன எழுதியிருந்தாய்”.
“வடக்கே சீமூர் அஷ்டி வாலிபர்களுக்காக காந்திஜி தலையிடலாம் என்றால், ஏன் குலசேகரப்பட்டிணம் வாலிபர்களுக்காக ஏன் உதவி செய்யக் கூடாது என்று நினைத்து எழுதினேன்” என்றார் கிட்டய்யர்.
இருவரின் வாதத்தினையும் அருகில் இருந்து பார்த்த மேகநாதனுக்கோ கஷ்டமாக போய் விட்டது.

இரண்டு பேரும் இணைந்து வேலை செய்ய வேண்டும். ஆனால் இரண்டு பேரும் எதிர் எதிர் பேசிக் கொண்டிருக்கிறார்கள். என்ன நடக்கப்போகிறதோ- என நினைத்தான்.
ராஜாஜி சிரித்துக் கொண்டார், “அந்த வழக்கில் நான் என்ன செய்ய வேண்டும்” என்று கேட்டார்.
இருவருக்கும் மகிழ்ச்சி. ராஜாஜி மனம் மாறி உதவ முடிவு செய்து விட்டார். நிச்சயம் வெற்றி கிடைத்து விடும்.
கிட்டய்யர் கூறினார். “பிரிவி கவுன்சிலில் அப்பீல் செய்து தூக்குத் தண்டனையை நிறுத்தி வைக்கவேண்டும்”.
யோசித்தார் ராஜாஜி. “பிரிவு கவுன்சிலில் போனவுடன் அப்பீல் நடந்து விடுமா? என்ன?”
“சரி வேறு என்ன செய்யவேண்டும்”.
“பிரிவி கவுன்சிலில் அப்பீல் செய்வதற்க்குப் பணம் வேண்டும். நீங்கள் கடிதங்கள் கொடுத்தால், நான் சென்னையிலுள்ள பிரமுகர்களைப் பார்த்து பணம் வசூலித்துத் தருகிறேன்”. கிட்டய்யர் ஆர்வத்துடன் பேசினார்.
“அப்புறம் நான் என்ன செய்யவேண்டும்”.
பிரிவி கவுன்சிலில் ஆஜராகுவதற்கு நல்ல வக்கீலுக்கும் நீங்கள் கடிதம் எழுத வேண்டும்” என்று கூறினேன்.
“பிரிவி கவுன்சில் அப்பீல் தயார் செய்வதற்கு உன் நண்பர்கள் யாராவது வக்கீலாக இருந்தால் தயார் செய்து வக்காலத்து டைப் அடித்துக் கொண்டு வா. மற்றது நான் பார்த்துக் கொள்கிறேன்” என்றார் ராஜாஜி.
மேகநாதனுக்கோ உற்சாகம் வந்து விட்டது. இரண்டு பேரையும் தூக்கு தண்டனையை விட்டு நிச்சயம் காப்பாற்றி விடலாம்.
கிட்டய்யரும் மேகநாதனும் வெளியே வந்தார்கள். ராஜாஜி சரி என ஒத்துக்கொண்டார். அப்படியென்றால் உடனே நாம் அடுத்த கட்டமாக வேலை செய்யவேண்டும்.
“எந்த வக்கீலை பிடிக்கலாம்”.
என்னுடன் ஜெயிலில் இருந்த நண்பர் வெங்கட்ராமனை பார்ப்போம். ( இவர்தான் பிற்காலத்தில் தமிழக தொழில் மந்திரியாகவும் , ஐக்கியநாடு சபையில் பணியாற்றியவர்).
இருவரும் கிளம்பினார்கள். வெங்கட்ராமனை பார்த்தார்கள்.
கிட்டய்யரை பார்த்தவுடன் சந்தோசமாக வரவேற்றார். வழக்கை பற்றி நன்றாக கேட்டார். வெங்கட்ராமன் மூலமாக பிரிவி கவுன்சிலுக்கு அப்பீல் தயார் செய்தனர். ஆனால் பணம் தேவைப்பட்டது. என்னசெய்யலாம். யோசனையோடு இருவரும் கிளம்பினார்கள்.
****
மேகநாதனை ராஜாஜி கூப்பிட்டார். “கோமதி கூட போய் காய்கறி வாங்கிட்டு வா”.
“கோமதி”.
“ஆ. அந்த அழகு தேவதை. இந்த வீட்டில் இருக்கும் எனது அன்புக்குரியவள்”.
“அவளுடன் நான் மார்க்கெட் போகப்போகிறேன்”.
இருவரும் கிளம்பினார்கள்.
“கோமதி பையை தாருங்கள் நான் வைத்துக்கொள்கிறேன்”.
“ம். எனக்கு கை இருக்கு நான் வைத்துக்கொள்கிறேன்”.
“அய்யா என்னை துணைக்கு அனுப்பியுள்ளார்”.
“ஓ. என்னை காக்காவா தூக்கிட்டு போக போவுது. எனக்கு துணைக்கு ஆள் எல்லாம் வேண்டாம்”.
இருவருக்கும் சண்டை வந்து கொண்டே இருக்கிறது. ஆனால் என்னவோ இரண்டு பேரும் பேசிக்கொண்டே இருக்க தோணுகிறது.
மேகநாதன் நினைத்தான். “இந்த அழகு தேவதை எனக்கு மானாட்டியாக வாய்க்க மாட்டாளோ”.
“அவளோ பிரமாணப்பெண். நாமோ தெற்கே உள்ள தேரிக்காட்டில் உள்ளவன். இந்த இருவருக்கும் ஏணி வைத்தாலும் எட்டாது”.
“ஏன் எட்டாது. அவளை எனக்கு பிடித்திருக்கிறது. ஆனால் என்னை அவளுக்கு பிடிக்குமா?”
“ஏன் பிடிக்காது”.
“முட்டாப்பயலே நீ. கனவு கண்டு கொண்டிருக்கிறாய்”. 1 நிமிட கனவு.
அதற்குள் முன்னால் சென்ற அவளை காணவில்லை. கோட்டை விட்டு விட்டாய். அவள் சிட்டாய் பறந்து விட்டாள்.
ஆம். அவன் முன்னாள் சென்று கொண்டிருந்த கோமதியை காணவில்லை. அந்த மார்க்கெட் கூட்டத்துக்குள் எங்கேயோ ஒளிந்து கொண்டாள்.
தேடினான். தேடினான். மார்க்கெட் முழுவதும் ஓடிப்போய் தேடினான். ஒவ்வொரு இடமாக தேடினாள். எங்கும் அவளை காணவில்லை.
“அவள் குழந்தையா என்ன? அவளை தேடுகிறாய். எங்கேயும் போக மாட்டாள். வருவாள்”. அவன் மனம் சொன்னது.
“அய்யா. நடந்து பேகும் போதே. அவளை கோட்டை விடுகிறோமா. மற்ற வேளையில் கேட்கவே வேண்டாம். நிச்சயம் நம்மை விட்டு விட்டு தப்பித்து விடுவாள்”.
“அட என்ன நினைப்பு இது. அவள் யாரோ நான் யாரோ. நான் ஏன் அவளை துரத்த வேண்டும்”.
சிறிது நேரம் கழித்தது.
பெரிய பையுடன் வந்தாள்.
“இந்தா இதை தூக்கிக்கோ” என்றாள்.
சுமக்க முடியாமல் அதை தூக்கிக்கொண்டு நடந்தான். அவள் இப்போது இவன் பின்தொடர்ந்தாள். அட திருமணம் முடிக்கும் முன்பே பெரிய சுமையை ஏற்றி விட்டாள்.
பேச வேண்டும். இவளிடம் நிறைய பேச வேண்டும்.
காதல் சொல்ல வேண்டும். அவள் நமக்கு கிடைப்பாளா? பல யோசனை மேகநாதனுக்கு வந்து விட்டது.
சே. என்ன செய்வது. இந்த காதல் வந்து விட்டதே. இதனால் வந்த வேலையை கோட்டை விட்டு விட கூடாது. இரண்டு பேர் தூக்கு கயிறை முத்தமிட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர்களை காப்பாற்ற வேண்டும்.
இருவரும் நடந்தேவீடு வந்து சேர்ந்தார்கள்.
இவன் வீட்டு சமையல் அறையில் கொண்டு போய் அனைத்தையும் வைத்து விட்டான்.
பின்னால் கோமதியை தேடினான். அவளை காணவில்லை. என்ன இந்த பெண் அடிக்கடி காணாமல் போய் விடுகிறாள்.
வெளியே வந்தான்.
அலுவலகத்தில் தாத்தா இருந்தார்.

அவரிடம் கோமதியை பற்றிக்கேட்க வேண்டும்.
யோசித்தப்படியே அவர் முன்னால் அமர்ந்தான்.
“டேய் மேகநாதா மார்க்கெட் போனீயா-”.
“ம்”.
“கோமதிக்கு ஒத்தாசயா இருந்தியா?”
“ம். கழுதை மாதிரி பொதி சுமந்தேன்”.
சிரித்தார் தாத்தா.
“பொதி சுமக்க ஏத்த கழுதை தான் நல்ல சும”. என்று சொல்லி விட்டு சிரித்தார்.
சரி. கோமதியை பற்றிக்கேட்போம் என நினைத்தான்.
ஆனால் ஏதோ ஒன்று அவனை தடுத்து விட்டது.
********
மறு நாள் அதிகாலை.
அந்த தினசரி பத்திரிக்கையை திறந்தான்.
ராஜாஜி இளம் வாலிபர்களின் உயிரைக் காப்பாற்ற, பிரிவி கவுன்சில் அப்பீல் செய்ய பண உதவி செய்யுமாறு பத்திரிகை மூலம் வேண்டுகோள் விடுத்தார்கள்.
சந்தோசமாக இருந்தது. வேலையை ஆரம்பித்து விட்டார்கள். நிச்சயம் வெற்றி பெற்று விடலாம்.
ராஜாஜி வீட்டுக்கு கிட்டய்யர் வந்தார். அதில் கோர்ட் சம்பந்தப்பட்ட கட்டு ஒன்று இருந்தது.
ரூ.12,000க்கு லெட்டர் ஆப் கிரிடிட் வாங்கியிருந்தார். அதையும் அப்பீலையும் சேர்த்தார். லண்டனில் இந்தியாவுக்கு அனுதாபமாக இருந்த பிரபல வழக்கறிஞருக்கு அந்த கட்டை அனுப்ப வேண்டும்.
ராஜாஜி வேண்டிய உதவிகளை செய்தார். அனைத்து கடிதங்களையும் படித்து சரிப்பார்த்து கையெழுத்து போட்டார். கிட்டய்யர், அந்த கடிதங்களையெல்லாம் சேர்த்து அதை லண்டனுக்கு அனுப்பி வைத்தார்.
இந்த வழக்கில் இரண்டு பேரும் தற்காலிகமாக காப்பாற்றப்பட வேண்டும் என்றால் அப்பீல் தாக்கல் செய்யப்பட வேண்டும். அப்படி தாக்கல் செய்தால் தற்காலிகமாக இருவரும் தூக்குத்தண்டனையில் இருந்து காப்பாற்றப்படுவார்கள். ஒரு வேளை தள்ளுபடியாகி விட்டால் இருவருக்கும் தூக்கு தண்டனை உறுதியாகி விடும். அதன் பிறகு இருவரையும் யாரும் காப்பாற்ற இயலாது.
எனவே அனைவரும் லண்டனில் இருந்து வரும் கடிதத்தினை எதிர்நோக்கியிருந்தார்கள்.
ஒருநாள். காலை மேகநாதன் வீட்டின் முன்னால் நின்று கொண்டிருந்தான். அப்போது போஸ்ட் மேன் ஒரு கடிதத்தினை கொண்டு கொடுத்தார்.
அது லண்டன் கடிதம்.
மேகநாதன். உற்சாகமாக வீட்டுக்குள் ஒடினான். அந்த கடித்தத்தினை ராஜாஜியிடம் கொடுத்தான்.
அவர் மகிழ்ச்சியோடு அதை பிரித்துப்பார்த்தார்.
பிரிவி கவுன்சிலில் அப்பீல் தாக்கல் செய்து தேதியும் கிடைத்துவிட்டது. வாலிபர்கள் காசிராஜன், ராஜகோபாலன் உயிர் தற்காலிகமாய் காப்பாற்றப்பட்டனர்.
அனைவரும் சந்தோசப்பட்டனர். ஆனால் இந்த சந்தோசம் நிரந்தரமானது அல்ல. விடுதலையடைய வேண்டுமே.
காசிராஜன் ராஜகோபால் மீது சுமத்தப்பட்ட குற்றத்துக்கு சாட்சிகள் இருந்தன. எனவே தப்பிக்க இயலாது. ஆனாலும் எப்படியாவது அவர்கள் இருவரை காப்பாற்ற வேண்டும் என்று முடிவு செய்தார் ராஜாஜி.
*******
கோமதி தோட்டத்தில் தண்ணீர் பாய்த்துக் கொண்டிருந்தாள். அவள் பின்னால் பூனை போல போய் நின்றான் மேகநாதன்.
“என்ன?”
“ஒண்ணுமில்லை”.
“ஒண்ணுமில்லைன்னா உனக்கு இங்க என்ன வேலை”.
“இல்லை. பூ பறிக்க வந்தேன்”.
“ஓஹோ. எந்த பூவை பறிக்கபோகிறாயோ”.
“இந்த ப் பூவைத்தான்”.
கோமதியை நோக்கி கைகாட்டினான். அவள் முறைக்கவே. அவள் அருகில் இருந்து ரோஜாவை காட்டினான்.
புரிந்தது அவளுக்கு புரிந்தது. இவன் ஏதோ சொல்ல நினைக்கிறான். அவன் நினைக்கும் நினைப்புக்கு இவள் வளைந்து கொடுக்க முடியுமா?. முடியாதே.
இவளின் குடும்ப சூழ்நிலை அப்படி. இவளோ ராஜாஜி அவர்கள் பாதுகாப்பில் இருக்கிறாள். அவரை மீறி எதுவுமே செய்ய இயலாது. அப்படியென்றால் இவன் நினைப்புக்கு நாம ஈடுகொடுக்க முடியாது. எனவே அவனை தனது நினைவில் இருந்தே தள்ளி வைத்தாள்.
ஆனாலும் அவன் செய்யும் சின்ன விஜயங்கள் இவளை வசிக்கரித்தான் செய்தது.
*******
சில மாதங்களுக்குப் பிறகு ராஜாஜி கிட்டய்யரை கூப்பிட்டார்.
கிட்டய்யரும் வந்தார்.
“என்னய்யா”.
“சரி காசிராஜன், ராஜகோபால் வழக்கில் ஏதாவது ஒரு முடிவு எடுக்கவேண்டும் என்றால் யார் பொறுப்பு” என்றார்.
“ராஜகோபாலனுடைய சிறிய தகப்பனார் இருக்கிறார். அவர் சொல்கிற முடிவை எல்லோரும் ஏற்றுக்கொள்வார்கள்” என்றார் கிட்டய்யர்.
ராஜாஜி யோசித்தார்.
“என்னய்யா யோசிக்கிறீங்க”.
“நான் சொல்வது ஒரு சிக்கலான விஷயம். ஆழ்ந்து யோசனை செய்து தைரியத்துடன் முடிவுக்கு வரவேண்டும்”.
இப்போது மேகநாதனும் வந்து விட்டான். அவர் பேசுவதை இருவரும் கவனித்தனர். ராஜாஜி தொடர்ந்தார் “பிரிவி கவுன்சிலில் நமக்குச் சாதகமான தீர்ப்பு வந்தால் நல்லது. ஒருக்கால் கீழ் 2 கோர்ட்டிலும் செய்த முடிவை மாற்றுவானேன் என்று நினைத்து ஊர்ஜிதம் செய்துவிட்டால் பின் நமக்கு விமோசனமே இல்லை”.
மேகநாதன் அதிர்ந்து விட்டான்.
“அப்படியென்றால் தூக்குத்தண்டனை ரத்து ஆகாதா?”
“வாய்பு இருக்கிறது. ஒரு வேளை தூக்குத் தண்டனை ரத்து ஆகலாம். அதற்கும் வாய்ப்பு இருக்கிறது. வைஸ்ராயிடம் கருணை மனு கொடுத்து தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றிக்கொள்ளலாம்”.
“அதற்கு வாய்ப்பு இருக்கிறதா?”

“இருக்கிறது. அப்படி நாம் ஆயுள் தண்டனையாக குறைத்து விட்டோம் என்றால், கூடிய சீக்கிரம் நாடு விடுதலை அடைந்தவுடன், இவர்களுக்கும் விடுதலை கிடைத்து விடும்”.
மூவருக்கும் சந்தோசமாக இருந்தது. “ஆனால் கருணை மனு பரிசீலனை செய்யும் பொழுது பிரிவி கவுன்சில் தீர்ப்பு முடியட்டுமே என்று சொல்லித் தட்டிக் கழித்து விடுவார்கள். பிரிவி கவுன்சில் தீர்ப்பு நமக்கு விரோதமாகப் போய் விட்டால் பின்னால் கருணை மனுவுக்கு இடமே இருக்காது”.
மனதுக்கு கஷ்டமாக இருந்தது. இருவரையும் தூக்குத் தண்டனையில் இருந்து காப்பாற்ற இயலுமா? என்ற எண்ணம் தோன்றியது.
ராஜாஜி தொடர்ந்தார். “எனக்கு ஒரு யோசனை பிறக்கிறது”.
“என்ன யோசனை”.
“பிரிவி கவுன்சில் அப்பீலை வாபஸ் வாங்கிக்கொண்டு கருணை மனுவை பரிசீலிக்கும்படி வற்புறுத்த வேண்டும் என நினைக்கிறேன்”.
“அப்பீலை வாபஸ் வாங்கிக் கொண்டு கருணை மனுவை வாதாடும் போது முடியாது என்று மறுத்துவிட்டால் வேறு வழி இல்லாமல் போய்விடும்”.
“ம் இரண்டு பக்கமும் ஆபத்து இருக்கிறது. எது நல்லது என்று நாம் தைரியத் துடன் முடிவுசெய்ய வேண்டும். ஆகையால் யோசித்துச் சொல்” என்றார் ராஜாஜி.
மேகநாதனும் கிட்டய்யரும் கனத்த மனதுடன் வெளியே வந்தார்கள். தோட்டத்தில் போடப்பட்ட பெஞ்சில் அமர்ந்து ஆலோசித்தார்கள்.
“நாம் இரண்டு பேரும் முடிவு எடுக்க முடியாது. ராஜகோபால் குடும்பத்திடம் இதைப்பற்றி பேசவேண்டும்”.
“சரி. அப்படியென்றால் உடனே ராஜகோபாலின் சிறிய தந்தையை தந்தி அடித்து வரச்சொல்லு”.
“சரி அய்யா”.
இருவரும் கிளம்பினார். மேகநாதனோ அருகில் உள்ள தந்தி அலுவலகத்துக்கு சென்று தந்தி அடித்தான்.
மறுநாளே அவர் ஊரில் இருந்து கிளம்பி விட்டார் ராஜகோபாலின் சிறிய தந்தை.
*********
கோமதி பூஜை பொருளுடன் பூஜை அறைக்குள் சென்றாள்.
“ஏதாவது உதவி வேணுமா?”
மேகநாதன் கூறவும் அவனை முறைத்துப்பார்த்தாள்.
“உன் வேலை எதுவுண்டோ அதை செய்”.
“அதைத்தான் செய்கிறேன். உனக்கு என்ன உதவி வேண்டுமோ அதை செய்ய சொல்லியிருக்கிறார்கள்”.
“அடடே. என்ன உதவி கேட்டாலும் செய்வீயா?”.
“நிச்சயம் செய்வேன்”.
“பின்னால் தோட்டத்தில் ஒரு கிணறு இருக்கிறதே. அந்த கிணற்றில் விழுந்து விடுவாயா?”
“ம். விழுந்து விடுவேன்”.
“ம். போ. விழு. நான் நிம்மதியாய் இருப்பேன்”.
இவள் சொல்லிவிட்டு பூஜைக்கு தேவையான பூஜை படத்துக்கு போட்டுக்கொண்டிருந்தாள்.
தண்ணீருக்குள் யாரோ விழுவது போல சத்தம் கேட்டது.
ஆகா. சொன்ன படி செய்து விட்டானோ.
பின்னால் ஓடிப்போய் கிணற்றை பார்த்தாள்.
உள்ளே மேகநாதன் தத்தளித்துக்கொண்டிருந்தான்.
*******
ரயிலில் சென்னை வரும் போதே ராஜ கோபலின் சிறிய தந்தைக்கு என்ன முடிவு எடுக்கப்போகிறார்களோ தெரியவில்லையே என இருந்தது.
“நீ சீக்கிரம் வா. வழக்கு குறித்து முடிவு எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்கள். என்னவாக இருக்கும்”.
இவர் சிந்தனை பலவாறாக இருந்தது. பிரிவி கவுன்சிலில் இருவர் தூக்குத் தண்டனையும் நிறுத்தி வைக்கப்பட்டிக்குமா?. அல்லது-? வேறு பிரச்சனை ஏதாவது இருக்குமா? பலவாறாக இருந்தது. இரவு முழுவதும் இவருக்கு தூக்கம் வரவில்லை. எப்போது சென்னை செல்வோம். எப்போது இது குறித்து பேசுவோம் என பல கவலை இருந்தது.
*****
கிணற்றுக்குள் தவித்துக்கொண்டிருந்தான் மேகநாதன்.
கோமதி தவித்தே போய்விட்டாள்.
“ஏய் உனக்கு நீச்சல் தெரியமா?”
சிறிய கிணறுதான் அருகில் படியேறி வர கல் இருந்தது. ஆனாலும் இவன் தத்தளித்து போய் உள்ளே உள்ள கல்லை பிடித்துக்கொண்டான். ஆனால் ஏற முடியவில்லை.
“ஏன் இப்படி செஞ்சே. உயிர் போயிட்டா என்ன செய்வே”.
“நீ தானே குதிக்க சொன்னே”.
“அதுக்காக இப்படி அறிவில்லாத வேலை செய்வீயா?”
“நீ என்ன சொன்னாலும் செய்வேன்”.
“இது உன் உயிர் பிரச்சனை”.
“என் உயிரே நீ தானே”.
கோமதிக்கு எரிச்சலாய் இருந்தது. அதே வேளையில் இவன் செய்யும் குறும்புத்தனம் பிடித்திருந்தது. தனது சேலை முந்தானையை எடுத்து அதன் ஒரு பகுதியை கிணற்றுக்குள் போட்டாள். பெரிய ஆழமான கிணறு இல்லை. எனவே அவளின் முந்தானை சேலையை பிடித்துக்கொண்டு மேலே ஏறி வந்தான் மேகநாதன்.
அவன்மேலே வந்தபோது அவனை இழுத்துப்பிடிக்க, மேலே வந்த அவன் அவள் மேலே விழ. அங்கே வண்டுகள் ரீங்காரம் அடித்தது.
எங்கோ ஓரிடத்தில் இருந்து காதல் புறா காவியம் பாடியது.
மிக அருகில் முகத்தோடு முகமாக இருவரும் இருந்தார்கள்.
“என் மேலே உனக்கு இவ்வளவு ஆசையா”.
“ம். நீ தான் என் உயிர்”.
“நான் உன் உயிரை வாங்க நினைத்து விட்டேனே”.
“இருவரிடன் உடலும் ஒவரோடு ஒருவராக ஒட்டி விட்டது”.
மேகநாதன், கோமதியை கட்டி பிடித்தான். அவள் மறுப்பு எதுவும் சொல்லவில்லை.
****
ராஜகோபாலின் சிறிய தகப் பனாருடன் ராஜாஜி வீட்டுக்கு வந்தார் கிட்டய்யர்.
ஹாலில் அமர்ந்து இருந்தார்கள்.
மேகநாதன் ஆணை பிறப்பித்தான்.
“கோமதி எல்லோருக்கும் குடிக்க டீ கொண்டு வாங்க”.
கோமதி டீ கொண்டு கொடுத்தாள்.
சிறிது நேரத்தில் ராஜாஜி வந்தார்.
“என்ன முடிவு செய்துள்ளீர்கள்”.
“கலந்து ஆலோசித்தோம். உங்கள் யோசனைக்கு விட்டுவிடுவோம் என்று முடிவு செய்து விட்டோம். ஆண்டவன் உள்ளம் போல் நடக்கட்டும்”
“நல்லா யோசித்துக்கொள்ளுங்கள். பிரிவி கவுன்சிலுக்கு போய் நாம் வாபஸ் வாங்கி விட்டால் அதன் பிறகு திரும்ப பிரிவி கவுன்சிலுக்கு போக முடியாது”.
அனைவரும் அமைதியாக இருந்தார்கள்.
“கருணை மனுவை நிராகரித்து விட்டால் தூக்குத்தண்டனை உறுதி செய்யப்பட்டு விடும்”.
உண்மைத்தான் இக்கட்டான சூழ்நிலை. என்ன செய்யப்போகிறோம் என்றே தெரியவில்லை. ஆனாலும் மூவரும் ஒரு முடிவுக்கு வந்தனர்.
ராஜாஜியிடம், “உங்கள் விருப்பப்படி பிரிவிகவுன்சில் அப்பீலை வாபஸ் பெற்று கருணை மனுவை வற்புறுத்துங்கள்” என்றனர்.
காலங்கள் கடந்தது.
ராஜாஜி பிரிவி கவுன்சில் அப்பீலை வாபஸ் வாங்கினார். ஜில்லாக் கோர்ட்டுத் தீர்ப்பையும், சாட்சியங்களையும் வரி வரியாக வாசித்துக் கருணை மனுவைத் தயார் செய்தார். அதை வைஸ்ராயுக்கு அனுப்பினார். அதோடு மட்டுமல்லாமல் இந்த வழக்கை எடுத்துக்கூற தனக்கு அவகாசம் கொடுக்க வேண்டுமென்று ஒரு மனுவும் அனுப்பினார்கள்.
கிணற்று மீது கயிறு கட்டி நடப்பது போன்ற ஒரு பயணம். மிகவும் மோசமான பயணம். இதில் கரணம் தப்பினால் மரணம் என்பது போலவே இருந்தது.
ஆம். கொலையாளியை காப்பாற்ற இயலுமா என்பது முக்கியமான விசயமாகவே இருந்தது. ஆனாலும் போராட்டத்தில் இறங்கினார்கள்.
*******
ஒரு மாதம் கழித்தது.
ஒரு குறிப்பிட்ட நாளில் கருணை மனுவை விளக்கும்படி ராஜாஜிக்கு மத்திய சர்க்கார் உள்துறை மெம்பர் சர். பேஸில் பிளாக்கெட் கடிதம் அனுப்பினார்.
சர். பேஸில் பிளாக்கெட் இந்தியா சுதந்திரம் அடைவதற்கும், 1942 இயக்கத்திற்கும் பரம எதிரி. காந்திஜியிடம் கோபம் உள்ளவர். ஆகவே கருணைமனு என்ன ஆகுமோ என்று அனைவருக்கும் கவலை.
ராஜாஜி வழக்கு சம்பந்தமான ரிக்கார்டுகள் அத்தனையும் எடுத்துக்கொண்டு டில்லிக்குச் சென்று கறுப்பு கோட்டும், டர்பனும் அணிந்துகொண்டு பழைய வக்கீலாக மாறி தன் வாதத்தை 21 மணிநேரம் எடுத்துக் கூறினார்.
கருணைவேண்டும் என்று மாத்திரம் வாதாடாமல், தூக்குத் தண்டனை கொடுப்பது நியாயமில்லை என்று சாட்சியங்களில் உள்ள நுட்பங்களைக்கொண்டும், சட்டங்களைக் கொண்டும் விளக்கினார்.
1920க்கு முன் சேலத்திலும் பின்னால் சென்னையிலும் செயல்பட்ட பிரபல கிரிமினல் லாயராக மாறி வாதாடினார். பல பேர் தாக்கும்போது வெவ்வேறு ஆயுதங் களைக் கொண்டு புண்படுத்தியதில் எந்தக் காயத்தினால் லோன்துரை இறந்தார் என்று கூற முடியாது. ஆகையினால் இம்மாதிரி சூழ்நிலையில் தூக்குத் தண்டனை கொடுப்பது அநீதம், சட்ட விரோதம் என்று ஆணித்தரமாக கூறினார்.
மேலும் ராஜகோபால் இரண்டு கைகளிலும் ஆயுதம் வைத்திருந்ததாகவும், காசிராஜன் வேல்கம்பு கையில் வைத்திருந்ததாகவும் சாட்சியங்கள் கூறுகின்றன. ஆகையால் இருவரும் லோன் துரையைத் துப்பாக்கியால் சுட்டிருக்க முடியாது. லோன்துரை துப்பாக்கிக்குண்டு பாய்ந்து இறந்ததாக டாக்டர் சாட்சியங்கள் கூறுவதால் லோன் துரை கொலைக்கு இவர்கள் இருவரும் பொறுப்பாளிகள் அல்ல.

இவ்வாறு பல சாட்சியங்களில் உள்ள முரண்பாடுகளை எடுத்துக்காட்டி காசிராஜன், ராஜகோபாலனுக்குத் தூக்குத் தண்டனை கொடுப்பது பிரிட்டிஸ் ஜீரிஸ் புருடன்ஸ்க்கு விரோதம் என்று ராஜாஜி வாதாடினார்கள்.
கொஞ்சமும் அனுதாபம் இல்லாத சர்பேஸில் பிளாக்கெட்டை ராஜாஜி யுடைய மதிநுட்பமும் வாதத்திறமையும் நிலை குலைய செய்தது.
அவர் யோசித்தார்.
அவர் யோசிக்கும் போதே, ராஜாஜியின் கை ஓங்கியது போலவே இருந்தது.
ஆனாலும் அவர் ஆங்கிலேயே துரை.
ஒரு ஆங்கிலேய லோன் துரையை கொன்றவர்களை எப்படி தப்பிக்க விடுவார்.
ராஜாஜி வாதம் வென்றதா?
அல்லது அந்த ஆங்கிலேய துரையின் கோபம் வென்றதா?
( குலசேகரபட்டினம் கொலை வழக்கு தொடரும்)


