மதுரை உயர் நீதிமன்றத்தில் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு 2017-ல் ஆதிச்சநல்லூர் குறித்து வழக்கு தொடர்ந்திருந்தார். ஆதிச்சநல்லூரில் 2004-ல் நடந்த அகழாய்வு அறிக்கை வேண்டும், ஆதிச்சநல்லூரில் அருங்காட்சியகம் அமைக்க வேண்டும், ஆதிச்சநல்லூர், சிவகளை, கொற்கையில் அகழாய்வு நடைபெற வேண்டும் என அந்த வழக்கில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வழக்கில் வழக்கறிஞர் டாக்டர் அழகுமணி ஆஜராகி வழக்கை நடத்தி வந்தார். இந்த வழக்கு மூலம் பொருநை அருங்காட்சியகத்தினை மாநில அரசும், ஆதிச்சநல்லூர் சைட் மியூசியத்தினை மத்திய அரசும் அமைத்தன. மாநில அரசின் பொருநை அருங்காட்சியகம் மிகச்சிறப்பாக இயங்கி வருகிறது. ஆனால், ஆதிச்சநல்லூரில் உள்ள மாதிரி சைட் மியூசியமும், புதிதாக அமையவுள்ள சைட் மியூசியமும் போதிய பாதுகாப்பின்றி மழைத்தண்ணீரால் சேதமடைந்தன.
இதற்கிடையில், வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதியரசர்கள், “இந்த வழக்கில் ஆதிச்சநல்லூர், சிவகளை, கொற்கையில் அகழாய்வு நடந்து, பொருநை மியூசியத்தினை மாநில அரசு உருவாக்கியுள்ளது. எனவே, இந்த வழக்கு முடித்து வைக்கப்படுகிறது. மத்திய தொல்லியல் துறையினர் தொடர்ந்து பணி செய்யவில்லையென்றால் மற்றொரு வழக்கு தொடரலாம்” எனக் கூறி வழக்கை முடித்து வைத்தனர்.
2020-ஆம் ஆண்டு பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட உலகத் தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கப்படவில்லை. 2026 பட்ஜெட்டில் ஆதிச்சநல்லூருக்கு கலாச்சார மையம் அமைப்பதாக அறிவித்தார்கள். 6 மாதங்கள் ஆகியும் அதன் ஆரம்பகட்டப் பணி நடைபெறவில்லை. ஆதிச்சநல்லூரில் மிகப்பிரமாண்டமாக அமையும் என எதிர்பார்க்கப்பட்ட ‘ராயல் சைட்’ (Royal Site) மீது போடப்பட்ட தற்காலிகக் கூரை பழுதடைந்துவிட்டது. கடந்த மழைக்காலத்தில் இருந்தே பணம் ஒதுக்கியும் இந்த இடத்தைப் பாதுகாக்கத் தவறிவிட்டார்கள்.

இந்த நிலையில், கடந்த வாரம் பெய்த மழையில் சைட் உள்ளே மழைத்தண்ணீர் புகுந்து இந்த இடங்கள் வீணாகிவிட்டன. இதனால், பொதுநல ஆர்வலர்கள் தொடர்ந்து பத்திரிகைகளில் குரல் கொடுத்து வந்தனர். இதன் காரணமாக, தொல்லியல் துறையினர் வேலையை வேகமாகத் தொடங்கினர். இங்கு இரும்புப் பாளங்கள் வரவழைக்கப்பட்டு, செட் போடும் பணி துவங்கியது.
இதற்கிடையில், ஆதிச்சநல்லூருக்கு வழக்கு தொடர்ந்த எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசுவும், அவரது வழக்கறிஞரான டாக்டர் அழகுமணியும் ஆதிச்சநல்லூரில் பாதிக்கப்பட்ட அருங்காட்சியகத்திற்கு வந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.


