தூத்துக்குடி – திருநெல்வேலி மார்க்கத்தில் காலை மற்றும் மாலை நேரங்களில் கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தூத்துக்குடி – திருநெல்வேலி இடையே தினசரி பயணிப்போரின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ள நிலையில், பயணிகளின் நலன் கருதி இம்மார்க்கத்தில் காலை மற்றும் மாலை நேரங்களில் கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தூத்துக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து திருநெல்வேலியில் உள்ள அரசு மற்றும் தனியார் அலுவலகங்களுக்குப் பணிக்குச் செல்வோர், பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் தினந்தோறும் ஆயிரக்கணக்கானோர் இம் மார்க்கத்தில் பயணம் செய்து வருகின்றனர்.
மேலும், உயர் மருத்துவச் சிகிச்சை மற்றும் பரிசோதனைகளுக்காகத் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்குச் செல்லும் நோயாளிகள், அவர்களது உறவினர்கள் என நூற்றுக்கணக்கானோரும் நாள்தோறும் பேருந்துகளையே பெரிதும் நம்பியுள்ளனர்.
தற்போது இயக்கப்படும் பேருந்துகளின் எண்ணிக்கை போதுமானதாக இல்லாததால், குறிப்பாகக் காலை மற்றும் மாலை வேளைகளில் பேருந்துகளில் சொல்லொணா கூட்ட நெரிசல் காணப்படுகிறது. இதனால், பேருந்துகளில் ஏற முடியாமல் பயணிகள் பேருந்து நிலையங்களிலும், நிறுத்துமிடங்களிலும் நீண்ட நேரம் காத்திருந்து சொல்லொணாச் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
இதனால், வேலைக்குச் செல்வோர் மற்றும் மாணவர்கள் குறித்த நேரத்திற்குத் தங்கள் பகுதிகளுக்குச் செல்ல முடியாமல் அவதிப்படும் நிலை தொடர்கிறது. எனவே, பொதுமக்களின் அத்தியாவசியத் தேவைக் கருதியும், மாணவர்களின் சிரமத்தைக் குறைக்கும் பொருட்டும், காலை மற்றும் மாலை நேரங்களில் தூத்துக்குடி – திருநெல்வேலி இடையே கூடுதல் பேருந்துகளை போர்க்கால அடிப்படையில் இயக்க அரசுப் போக்குவரத்துக் கழக நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


