400 ஆண்டுகள் பழமை வாய்ந்த விளாத்திகுளம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் புரட்டாசி மாதத் தேய்பிறைப் பிரதோஷத்தை முன்னிட்டுச் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில், புரட்டாசி மாதத் தேய்பிறைப் பிரதோஷத்தை முன்னிட்டுச் சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் ரிஷப வாகன வீதியுலாவும் கோலாகலமாக நடைபெற்றது.
சுமார் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த விளாத்திகுளம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில், புரட்டாசி மாதத் தேய்பிறைப் பிரதோஷப் வழிபாட்டை முன்னிட்டு நந்திகேஸ்வரர் மற்றும் மூலவர் மீனாட்சி சுந்தரேஸ்வரருக்குப் பால், தயிர், மஞ்சள், இளநீர், பன்னீர், சந்தனம் மற்றும் திருநீறு உள்ளிட்ட பல்வேறு வகையான நன்னீராட்டு அபிஷேகங்கள் சிறப்பாகச் செய்யப்பட்டன.
அதனைத் தொடர்ந்து, செவ்வரளி, மல்லிகைப் பூக்கள் மற்றும் வில்வ இலைகளால் தொடுக்கப்பட்ட வண்ணப் பலவகை மலர் மாலைகள் அணிவிக்கப்பட்டுச் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பிரதோஷ நன்னாளில், ரிஷப வாகனத்தில் சந்திரசேகரர் – உமா மகேஸ்வரி சமேதராக எழுந்தருளி பக்தர்களுக்குக் காட்சி அளித்து அருள்பாலித்தனர்.
அதனைத் தொடர்ந்து, ‘சிவ சிவ’ என்ற பக்தர்களின் ஆன்மிக அரகர முழக்கத்துடன் நந்திகேஸ்வரர் மற்றும் ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரருக்கு பஞ்சமுக தீபாராதனை காட்டப்பட்டது. இச் சிறப்புப் வழிபாட்டில் விளாத்திகுளம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல்வேறு கிராமப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.


