வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி வலுப்பெற்றுள்ளதைத் தொடர்ந்து, தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் 1-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
வடக்கு அந்தமான் பகுதியில் நிலவிய குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி தற்போது மேலும் வலுப்பெற்று, காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. இது அடுத்த 12 மணி நேரத்தில் ‘ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக’ மேலும் வலுவடைந்து, அடுத்த 3 நாட்களில் வடகிழக்கு வங்கக்கடல் மற்றும் வங்கதேச கடற்கரையை நோக்கி நகரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
இத் தாழ்வு மண்டலத்தின் காரணமாக, ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழையும், மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்றும் வீசக்கூடும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.
வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கையைத் தொடர்ந்து, கடல் பகுதியில் புயல் காற்று உருவாக வாய்ப்பிருப்பதை துறைமுக அதிகாரிகளுக்கு உணர்த்தும் வகையில், தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் 1-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.


