தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த நாசரேன் துரை என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், “தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் தாலுகா கந்தசாமிபுரம் கிராமத்தில் உள்ள நாலாயிரமுடையார்குளம் மற்றும் நாதன்குளம் ஆகிய குளங்களில் சட்டவிரோதமாக மணல் அள்ளப்படுகிறது.

இதனால் அப்பகுதியின் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதோடு அரசுக்கு பெரும் வருவாய் இழப்பும் ஏற்படுகிறது. எனவே, அக் குளங்களில் மணல் அள்ளத் தடை விதிக்க வேண்டும்” எனக் கோரியிருந்தார்.

இவ்வழக்கு நீதிபதிகள் சிவி கார்த்திகேயன் மற்றும் சக்திவேல் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது திருச்செந்தூர் தாலுகா தாசில்தார் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்ததாவது:

திருச்செந்தூர் தாலுகாவில் உள்ள குளங்களில் இருந்து வண்டல் மண்ணை அகற்றுவதற்கு விதிகளுக்கு உட்பட்டு விவசாயிகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது. இணையதளத்தில் பட்டா மற்றும் அடங்கல் விவரங்களைக் குறிப்பிட்டு விண்ணப்பிக்கும் விவசாயிகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறது.

அகற்ற்றப்படும் வண்டல் மண் உரிய விவசாய நிலத்திற்குத்தான் கொண்டு செல்லப்படுகிறதா என்பதை வேளாண்மைத் துறை அதிகாரிகளும் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர். குளங்களில் வண்டல் மண் அகற்றுவது கரைகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்தாது; மாறாகக் குளங்களின் நீர் பிடிப்புச் சேமிப்புத் திறனை அதிகரிக்கும்.

திருச்செந்தூர் தாலுகாவில் செங்கல் சூளைகள் எதுவும் இல்லாததால், அங்கிருந்து மண் செங்கல் தயாரிப்பிற்குப் பயன்படவில்லை. மேலும், மனுவில் குறிப்பிட்ட நாலாயிரமுடையார் குளம் மற்றும் நாதன்குளம் ஆகியவற்றில் தண்ணீர் தேங்கியிருப்பதாலும், நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருந்ததாலும் இக் குளங்களில் வண்டல் மண் எடுக்க இதுவரை யாருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை.

தாசில்தாரின் அறிக்கையைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், எதிர்காலத்திலும் நாலாயிரமுடையார் குளம் மற்றும் நாதன்குளம் ஆகியவை முறையாகப் பராமரிக்கப்படுவதையும், போதிய நீர் இருப்பு இருப்பதை அதிகாரிகள் உறுதி செய்வதையும், பொதுநலன் கருதி சூழலியல் சமநிலை பேணப்படுவதையும் உறுதி செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர்.

மேலும், நீர்நிலைகளைப் பாதுகாப்பாகப் பராமரித்து வரும் சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகளுக்கும் தங்களுடைய பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொண்ட நீதிபதிகள், இந்த வழக்கை முடித்து வைத்தனர்.