பெருமாளுக்கு மிகவும் உகந்த புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமைகள் வைணவத் திருத்தலங்களில் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகக் கொண்டாடப்படுகின்றன. புரட்டாசி 2-வது சனிக்கிழமையை முன்னிட்டு தூத்துக்குடி வைகுண்டபதி பெருமாள் கோவிலில் இன்று அதிகாலை 4.30 மணியளவில் நடை திறக்கப்பட்டு, கோபூஜையும் அதனைத் தொடர்ந்து விஸ்வரூப தரிசனமும் நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து, பெருமாளுக்குச் சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றன. இதேபோன்று, ஸ்ரீ சீனிவாச பெருமாள் அலங்காரத்திலும் பெருமாள் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பக்தர்கள் பெருந்திரளாக வந்து சீனிவாச பெருமாளுக்கும், ஆஞ்சநேயருக்கும் துளசி மற்றும் வெற்றிலை மாலைகளைச் சாத்தித் தீவிர வழிபாடு நடத்தினர்.

அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் அனைவருக்கும் பால் பாயாசம், அரவணை உள்ளிட்ட பிரசாதங்கள் வழங்கப்பட்டன. விழா ஏற்பாடுகளை அறங்காவலர் குழுத் தலைவர் செந்தில்குமார் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.