பா.சிவந்தி ஆதித்தனார் பிறந்த நாளை முன்னிட்டு வீரபாண்டியன்பட்டினத்தில் அமைந்துள்ள மணிமண்டபத்தில் உள்ள முழுவுருவசிலைக்கு தமிழ்நாடு அரசு சார்பில் மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்
பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் 91வது பிறந்த நாளை முன்னிட்டு இன்று (24.09.2026) தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வீரபாண்டியன்பட்டினத்தில் அமைந்துள்ள மணிமண்டபத்தில் உள்ள முழுவுருவசிலைக்கு தமிழ்நாடு அரசு சார்பில் மாவட்ட ஆட்சித்தலைவர் விஷு மகாஜன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி தெரிவித்ததாவது:-
பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் அவர்களின் 91வது பிறந்த நாள் விழாவினை கொண்டாடுகின்ற வகையில், இன்றையதினம் அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன். ‘இருந்தாலும், மறைந்தாலும் பெயர் சொல்ல வேண்டும், இவர் போல் யாரென்று ஊர் சொல்ல வேண்டும்’ என்ற வார்த்தைகளுக்கிணங்க வாழ்ந்து காட்டியவர் பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் அவர்கள்.
பத்திரிக்கை உலகில் முடிசூடா மன்னராகவும், பல்வேறு விளையாட்டு வீரர்களை உருவாக்கியவராகவும், கல்வியில் இப்பகுதியின் மக்கள் வளர்ச்சியடைவதற்காக கல்வியை அளித்த கொடை வள்ளலாகவும், ஏழை எளியோர்களை நேசித்தவராக விளங்கியவர்.
இந்திய துணைக்கண்டத்தில் பத்திரிகை, விளையாட்டு, கல்வி, தொழில் முதலான பல்வேறு துறைகளிலும் பெரும் சாதனையாளராகத் திகழ்ந்தவர் பத்மஸ்ரீ டாக்டர்.பா.சிவந்தி ஆதித்தனார். தமிழ்நாட்டில் ஏராளமான கோவில் திருப்பணிகளையும் சிவந்தி ஆதித்தனார் செய்துள்ளார். விளையாட்டு துறையில் உலக அரங்கில் இந்தியாவின் பெருமையை உயர்த்தியவர் சிவந்தி ஆதித்தனார்.
அகில இந்திய கராத்தே பெடரேசன் நிறுவன தலைவர், இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் வாழ்நாள் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பத்திரிகை, விளையாட்டு, கல்வி, இலக்கியம் மற்றும் கல்வித்துறையில் சிறந்தசேவை புரிந்ததற்காக பா.சிவந்தி ஆதித்தனாருக்கு ஒன்றிய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்தது. அவருடைய புகழ் என்றென்றும் வாழ்க! எனத் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் வி.நாராயணன், வாரிசுதாரர் மற்றும் தினத்தந்தி நிர்வாக இயக்குநர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன், திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியர்ரா.கௌதம், திருச்செந்தூர் வட்டாட்சியர் தங்கசாமி மற்றும் அரசு துறைச்சார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


