வங்கக்கடலில் மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளது. இது மேலும் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி, இன்று அதிகாலையில் விசாகப்பட்டினம் – கோபால்பூர் இடையே கரையைக் கடக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாகத் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 60 கி.மீ. வேகத்திலும் பலத்த சூறாவளிக் காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

வானிலை எச்சரிக்கையைத் தொடர்ந்து, தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் வரும் கப்பல்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் 1-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. கடல் கொந்தளிப்பாகக் காணப்படும் என்பதால், தூத்துக்குடி மாவட்ட விசைப்படகுகள் கடலுக்குச் செல்ல மீன்வளத்துறை தடை விதித்துள்ளது.

இதன் காரணமாக, தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் 272 விசைப்படகுகள் தொடர்ந்து 3-வது நாளாகக் கடலுக்குச் செல்லாமல் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் ஆயிரக்கணக்கான மீனவர்கள் மற்றும் சார்பு தொழிலாளர்கள் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர்.