தூத்துக்குடி புதுக்கிராமம் பகுதியில் நீண்ட நாட்களாகப் பழுதாகிக் கிடந்த சாலையை, மாநகராட்சி நிர்வாகம் சீரமைக்காததால் அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தனி ஒருவனாகச் சீரமைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாநகராட்சி புதுக்கிராமம் பகுதியில் உள்ள சாலைகள் முற்றிலும் பழுதடைந்து, பெரிய அளவிலான குண்டும் குழியுமாக மாறியுள்ளன. இதனால் அப்பகுதி பொதுமக்கள், இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் தினமும் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இச்சாலை வழியாகத் திருச்செந்தூரில் இருந்து தூத்துக்குடி நோக்கி வரும் பேருந்துகள் மற்றும் ஏராளமான வாகனங்கள் தினமும் சென்று வருகின்றன. மேலும், இரவு நேரத்தில் தெருவிளக்குகளின் வெளிச்சம் குறைவாக இருப்பதால், பழுதான குழிகளில் சிக்கி இருசக்கர வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி விழுந்து தொடர் விபத்து சந்திக்கின்றனர்.
சாலைப் பிரச்சனை குறித்து அப்பகுதி மக்கள் மாநகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார்கள் அளித்தும், நேரில் மனு கொடுத்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் குற்றம் சாட்டுகின்றனர். இந்நிலையில், மாநகராட்சி நிர்வாகத்தின் தாமதமான நடவடிக்கையால் அதிருப்தியடைந்த அப்பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலரும், கூட்டுறவு வங்கி ஊழியருமான ஜெபராஜ் என்பவர் களத்தில் இறங்கினார்.
அரசாங்கத்தின் உதவியை எதிர்பார்க்காமல், இரவு நேரத்தில் மண்வெட்டியுடன் களமிறங்கிய அவர், சாலையில் இருந்த ஆபத்தான குழிகளை கட்டிடம் இடிபட்ட கழிவுப் பொருட்களைக் கொண்டு மூடிச் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டார். பொதுமக்களின் பாதுகாப்பைக் கருதி தனி ஒருவனாகச் செயல்பட்ட அவரது இச் செயலை அப்பகுதி மக்கள் பெரிதும் பாராட்டி வருகின்றனர்.
புதுக்கிராமம் பகுதியில் பழுதடைந்துள்ள அனைத்து சாலைகளையும் மாநகராட்சி ஆணையர் உடனடியாகப் பார்வையிட்டு, போர்க்கால அடிப்படையில் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


