
அப்போது ஆதித்தனார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு இளங்கலை பட்டம் படித்துக் கொண்டிருந்தேன். தேர்வுகள் முடிந்தது. இது கோடை விடுமுறை தொடங்க இருந்த காலம். கல்லூரியிலிருந்து எனக்கு ஒரு தபால் வந்தது. ஆவலுடன் பிரித்துப் பார்த்தேன். வேலூரில் இயங்கி வரும் தினத்தந்தி அலுவலகத்தில் எனக்கு இரண்டு மாதம் தொழிற்பயிற்சிக்கு வாய்ப்பளிக்கப் பட்டிருந்ததை அறிந்தேன்.. எனக்கு அளவிலா மகிழ்ச்சி. தினத்தந்தியில் வேலை பார்க்கப் போகிறோம். மேலும் வேலூருக்குப் பயணிக்கிறோம். அங்கு இரண்டு மாதம் தங்கப் போகிறோம் எனப் பல உணர்வுகளில் தத்தளித்தேன்.
இரண்டு நாள் கழித்து மீண்டும் ஒரு கடிதம் வந்தது. இந்த கடிதம் ஆதித்தனார் கல்லூரியின் மாணவப் கப்பல் படை அலுவலகத்திலிருந்து வந்திருந்தது. கொச்சியில் இயங்கிவரும் இந்தியக் கப்பல் படையில் 14 நாட்கள் பயிற்சிக்கு நான் தேர்வு செய்யப் பட்டதாக அந்த கடிதம் விளக்கியது. எனக்கு தலை கால் புரியவில்லை. “என்ன செய்ய? எங்குச் செல்லுவது?” எனத் தேன் குடித்த வண்டாய் தத்தளித்தேன். காரணம் தினத்தந்தியில் பயிற்சிக்கு வாய்ப்பளித்த அந்த இரண்டு மாதத்திற்குள்தான் இந்த 14 நாட்களும் இருந்தது. அதனால் இரண்டில் ஒரு இடத்திற்குத்தான் செல்ல முடியும். தீவிர சிந்தனைக்குப் பின் வேலூர் தினத்தந்திக்குச் செல்வது என்று முடிவு செய்தேன்.
அங்குள்ள விளம்பர பிரிவில் இரண்டு மாதம் தொழிற்பயிற்சி பெற்றேன். இந்த இரண்டு மாதகாலத்தில் தினத்தந்தியைச் சற்று புரிந்து கொண்டேன் எனலாம். மேலும் தொழில் பயிற்சி பெற்ற காலத்தில் மூன்று வேளை சாப்பாடு மற்றும் தங்கும் இடம் இலவசம். எனக்கு மட்டும் அல்ல. தந்தியில் வேலை பார்க்கும் அனைவருக்கும் இது பொருந்தும். இரண்டு மாதம் தொழிற்பயிற்சி கொடுத்து கையில் 250 ரூபாய் சம்பளமும் கொடுத்தார்கள்!! இதுதான் நான் வாங்கிய முதல் சம்பளம் !
தினத்தந்தியில் இரண்டு மாதங்களில் கற்றுக் கொண்டது ஏராளம். அங்குத் தொழிலாளர்களிடையே சிவந்தி ஆதித்தனாருக்கு இருந்த அதீத
மதிப்பும் மரியாதையும் என்னை மலைக்க வைத்தது. இதற்குக் காரணம் பல. அவற்றில் சிலவற்றை மட்டும் முடிந்தவரை விளக்குகிறேன்.
ஒரு முறை சிவந்தி ஆதித்தனார் அலுவலகத்திற்கு திடீர் வருகை தந்தார். அலுவலகத்தில் உள்ள ஒவ்வொரு பிரிவாகச் சுற்றி வந்தார். முதலாளி வருவதை அறிந்த ஒவ்வொருவரும் எழுந்து நின்று அவருக்கு மரியாதை செலுத்தியபடி இருந்தனர். ஒரு வாலிபன் மட்டும் அவர் வருவது தெரியாமல் தானுண்டு தன் வேலையுண்டு என இருந்தான். அனைத்து இடத்தையும் பார்த்த பின்னர் சிவந்தி ஆதித்தனார் இயக்குநர் அறைக்குச் சென்றுவிட்டார்.
சில நிமிடங்களில் அந்த வாலிபனுக்கு அழைப்பு வந்தது. அந்த வாலிபன் பயந்தபடி அவர் இருக்கும் அறைக்குச் சென்றான்.
உனக்கு எந்த ஊர் ? என சிவந்தி ஆதித்தனார் கேட்டார்.
வாலிபன் தன் ஊரைச் சொல்லிவிட்டு மேலும் பயத்துடன் பேசத் தொடங்கினான். நீங்கள் வருவதை நான் கவனிக்கவில்லை. விளம்பர வரவு செலவு கணக்கைப் பார்த்துக் கொண்டிருந்தேன். கணக்கில் எங்கோ சிக்கல். அதனால் மொத்தத்தையும் சரி பார்க்க வேண்டி இருந்தது. தவறான கணக்கால் நிறுவனத்திற்குக் காசுக்கு இழப்பு வரலாம். அல்லது தவறுதலாக அதிக காசு வாங்கி விட்டால் நிர்வாகத்திற்கு கெட்ட பெயர் வந்துவிடும். கடந்த இரண்டு மணி நேரமாகக் கணக்கைச் சரி பார்த்துக் கொண்டிருந்தேன் சார். நீங்கள் வருவதைக் கவனிக்கவில்லை என்றான்.
அவர் சிரித்தவாறே அந்த வாலிபன் கூறியதைக் கேட்டுக் கொண்டிருந்தார்..
அந்த நேரத்தில், “ஐயா இந்த பையன் நம் நிறுவனத்திற்கு புதியவன். BSc படித்து முடித்திருக்கிறான். MSc படிக்க இடம் கிடைத்துள்ளது. ஆனால் போகமாட்டேன் என்கிறான்” என அந்த கிளை தினத்தந்தி நிறுவன இயக்குநர் கூறுகிறார்.
உடனே “ஏன் படிக்க வேண்டியதுதானே?” எனச் சிவந்தி ஆதித்தனார் அந்த வாலிபனைக் கேட்டார்.
உடனே அந்த வாலிபன், ” சிவகாசி தொலைவில் உள்ளது; அங்குள்ள விடுதியில் தங்கித்தான் படிக்க வேண்டும்; அந்த அளவிற்கு வசதி இல்லை சார்” என்கிறான்
உடனே தன் கோட் பையில் கைவிட்டார் சிவந்தி ஆதித்தனார். கத்தையாகப் பணத்தை எடுத்து அந்த வாலிபரிடம் கொடுத்தார்.
“நீ போய் படி. எதிர்காலத்தில் தேவைப்பட்டால் இங்கு வந்து சேர்ந்து கொள். நாளை ஆதித்தனார் கல்லூரி முதல்வர் திரு. கனகசபாபதியைப் போய் பார். அவர் உனக்கு மேற்கொண்டு உதவுவார்” என்று புன்முறுவலிட்டார்.
வாலிபன் தன்னை அறியாமல் இரு கரங்களையும் கூப்பி அந்த பெருந்தகையை வணங்கினான். அவர் கொத்தாக அள்ளிக் கொடுத்ததில் 3600 ரூபாய் இருந்தது. அன்று மாலையே அந்த வாலிபன் ஆதித்தனார் கல்லூரி நோக்கிப் பயணமானான். அங்கு முதல்வர் திரு.கனகசபாபதி அவர்களைச் சந்தித்தான். வள்ளல் பெருந்தகையிடம் இருந்து பெற்ற பணத்தை அவரிடம் கொடுத்தான். பின்னர் அவரிடம் விடை பெற்று சிவகாசி நோக்கி பயணமானான்.
முதல்வர் திரு.கனகசபாபதி அவர்கள் மாதா மாதம் அவனுக்குக் கல்லூரி விடுதி செலவுக்குப் பணம் அனுப்பிய படி இருந்தார். MSc இரண்டு வருடப் படிப்பு. அந்த கால கட்டத்தில் ஒரு மாத விடுதி செலவு சுமார் 300 ரூபாய்தான். ஒரு வருடம் ஓடிச்சென்றது. அடுத்த வருடம் பெருந்தகை சிவந்தி ஆதித்தனார் முதல்வர் கனகசபாபதி அவர்களிடம் அந்த வாலிபன் பற்றி விசாரிக்கிறார். முதல்வரிடம் மீண்டும் தேவையான பணத்தைக் கொடுக்கிறார். இரண்டாம் வருட விடுதி செலவுக்கும் ஆதித்தனார் கல்லூரியிலிருந்தே பணம் சென்றது !
அந்த வாலிபன் கிடைத்த வாய்ப்பை நன்கு பயன்படுத்தினான். படித்து முடித்து ஆராய்ச்சி பட்டப்படிப்பைச் சிவகாசியிலேயே தொடர்ந்தான். பின்னர் டாக்டர் பட்டம் கிடைத்தது. பின்னர் ஒரு கல்லூரியில் உதவி பேராசிரியர் வேலையும் கிடைத்தது. இப்படி சிவந்தி ஆதித்தனார் என்ற நகரும் ஏணிப்படியில் (escalator) பயணித்து உயர்ந்தவர்கள் ஏராளம் ஏராளம்.
தினத்தந்தி அலுவலகத்தில் அச்சு கோர்க்கும் வேலையைச் செய்யும் போது காக்கி வண்ண சீருடை அணிந்திருப்பார்கள். இது அரைக்கை மேல் சட்டையும் அரைக் கால் சட்டையும்தான். வேலை செய்யும் போது சட்டை எங்கும் ஆங்காங்கே கருப்பு மை ஒட்டுவது தவிர்க்க முடியாதது. இப்படி சீருடை எங்கும் கருப்பு மையால் நிறைந்திருந்தார் அச்சு கோர்க்கும் தொழிலாளி சிவசங்கு. இவர் காயாமொழி அருகில் உள்ள சிற்றூரில் பிறந்தவர். அச்சு கோர்க்கும் வேலையில் கைதேர்ந்தவர். கடின உழைப்பாளி. அன்று ஞாயிற்றுக்கிழமை. சிவசங்கு மதிய உணவுக்காகக் கையில் ஒட்டிய மையைச் சோப்பு போட்டு அலசி விட்டு மதியவுணவுக்குத் தயாராகிக் கொண்டிருந்தார்.
தினத்தந்தியில் தொழிலாளர்களுக்கு நிர்வாகமே மூன்று வேளையும் சாப்பாடு போடுவது வழக்கம். ஞாயிற்றுக்கிழமை மணக்க மணக்க ஆடு அல்லது கோழிக் கறி பரிமாறப்படும். சிவசங்கு பொறுமையாகச் சாப்பாட்டு அறையை நோக்கி நடந்தார். ஆச்சரியம் என்னவென்றால் நடந்து செல்லும் சிவசங்குடன் கோட் சர்டுடன் கம்பீரமாகச் சிவந்தி ஆதித்தனார் இணைந்தார்.
“சாப்பிடப் போகின்றீர்களா?
வாங்கச் சேர்ந்து சாப்பிடுவோம்” எனக் கூறியவாறு சிவசங்குவை சாப்பாடு அறைக்குள் அழைத்துச் சென்றார்.
யாரும் அங்கில்லை.
இருவரும் அங்கிருந்த தட்டை எடுத்து, தண்ணீரில் அலசி விட்டு, தேவையான அளவு சோற்றை எடுத்துக் கொண்டனர். பின்னர் ஒரு கிண்ணத்திலிருந்த கறி குழம்பையும் எடுத்துக் கொண்டனர். இருவரும் அருகருகே அமர்ந்து பேசிக் கொண்டே சாப்பிட ஆரம்பித்தனர்.
இந்த நிகழ்வு பலவற்றை உணர்த்துகிறது. சிவந்தி ஆதித்தனார் தன் தொழிலாளர்களுக்கு வழங்கும் உணவின் தரத்தைக் கண்டறியத் திட்டமிட்டிருக்கலாம். திறமையான மற்றும் அர்ப்பணிப்பு உணர்வோடு வேலை செய்யும் தொழிலாளர்களின் மனநிலையை அறியவும் முற்பட்டிருக்கலாம்.
ஆனால் இதனைச் செய்ய அனைத்து தொழிலாளர்களையும் சந்தித்துப் பேசினாலே போதும். அல்லது பெரியவர் சிவசங்கைத் தன் குளிரூட்டப்பட்ட அறையில் அழைத்துப் பேசியிருக்கலாம். அதன்மூலம் “அந்த நிர்வாகத்தில் தொழிலாளர்களின் மனோநிலையை புரிந்து கொள்ளலாம்” என அந்த பெருந்தகை நினைக்கவில்லை. தொழிலாளர்களுடன் சமமாக அமர்ந்து சாப்பிடும் அவரின் எண்ணம் உயர்வானது. தொழிலாளர்களை தன் குடும்பத்தார் போல் நடத்துவது அவர் இயல்பு. தொழிலாளர்களின் இல்லத்தில் நடைபெறும் மங்களகரமான நிகழ்ச்சிகளுக்கு பெரும்பாலும் நேரடியாகச் சென்று அள்ளிக் கொடுப்பது நெகிழ்வூட்டும் செயல். இந்த நற்பண்பே தினத்தந்தியை உரமிட்டு வளர்த்தது. சென்னை, மதுரை மற்றும் திருச்சி என மூன்று நகரங்களில் மட்டுமே அச்சிடப்பட்ட தினத்தந்தி தமிழகத்தின் 15 நகரங்களில் அச்சிடும் வகையில் வளர்ந்தது. மேலும் மாலை முரசு, ராணி மற்றும் ராணி முத்து எனப் பல இதழ்களும் தோன்றியது.
ஆதித்தனார் கல்லூரியில் முதல் இரண்டு ஆண்டு மாணவப் பருவத்தில் அவரின் சிறப்பு அதிகம் புரியவில்லை. ஆனால் கல்லூரி இறுதியாண்டில் வேலூரில் உள்ள தினத்தந்தி நிறுவனத்தில் ஒரு மாதம் வேலை பார்க்கும் போதுதான் ஆயிரக்கணக்கான மக்களுக்குத் தினத்தந்தி என்ற ஆலமரம் வாழ்வளிக்கின்றது என உணரமுடிந்தது.
தினத்தந்தி அலுவலகத்தில் தொழிலாளர்கள் சிவந்தி ஆதித்தனாரை “ஐயா” என்றே அழைப்பார்கள்.
“சார்” என அழைப்பதில்லை. அதன் காரணம் இந்த இரண்டு மாதத்தில் நன்கு உணர்ந்தேன்.
அந்த நிறுவனத்தின் கட்டமைப்பு என்னைப் பிரமிக்க வைத்தது. தினத்தந்தி அவ்வளவு எளிமையான அதேவேளையில் பிரமாண்டமான அமைப்பு ! திட்டமிட்டு உருவாக்கப்பட்ட நிறுவனம் என அறிந்தேன்.
எனக்குப் பயணம் செய்வது மிகவும் பிடிக்கும். என் தந்தை அடிக்கடி தமிழகம் முழுவதும் பயணிப்பார். “நானும் வருகிறேன்” என அடம்பிடிப்பேன். அடுத்த முறை கூட்டிச் செல்கிறேன்” என ஏதாவது சொல்லிவிடுவார். உங்கள் செருப்பு கூட அடிக்கடி சென்னை சென்று வருகிறது. “நான் வரக்கூடாதா?” என்று தந்தையிடம் கேட்டேன். நான் எட்டாவது படிக்கும் போது மனம் இறங்கி என்னையும் அழைத்துச் சென்றார்.
என் பயண ஆசைகள் பூர்த்தியாகும் வண்ணம் என் வேலையும் அமைந்தது. பயணிக்க ஏராளமான வாய்ப்புகள்
கிடைத்தது. அமெரிக்கத் திருநாட்டில் சுமார் பத்து வருடங்கள் பணியாற்றினேன். அந்த நாட்டின் கிழக்கு கடற்கரையிலிருந்து மேற்கு கடற்கரை வரை காரில் பயணிக்க வாய்ப்பு கிடைத்தது. நான் தமிழகத்தில் வேலை பார்த்த கடந்த 17 வருட காலத்தில் தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியா முழுவதும் சந்து பொந்து என நிறைய இடங்களுக்குச் செல்ல வாய்ப்பு கிடைத்தது. இதில் தமிழகத்தில் உள்ள பெரும்பாலான கோவில்களும் அடக்கம். தமிழகத்தில் ஐம்பது கிலோமீட்டர் தொலைவுக்கு ஒன்று எனப் பெரிய கோயில்கள் நிறைய உள்ளன. சிறிய கோயில்கள் பல லட்சக்கணக்கில் உள்ளன. பெரியது சிறியது எனப் பாகுபாடின்றி; கோயில்களை நிர்வகிக்கும் மக்களிடையேயான சாதிய பாகுபாடின்றி; தமிழகமெங்கும் எண்ணற்ற கோயில்களில் சிவந்தி ஆதித்தனார் உதவியால் எழுந்த மண்டபங்களை கண்டுவியந்தேன். “என்னதான் செல்வந்தராக இருந்தாலும் கொடுக்க பெரிய மனது வேண்டும்” என என் மனம் அவருக்கு அவ்வப்போது புகழாரம் சூட்டியபடி இருந்தது.
1456ஆம் ஆண்டுஅரிகேசரி பராக்கிரம மாற பாண்டியன் தென்காசியில் காசி விசுவநாதர் கோயிலின் கோபுர கட்டுமானத்தை ஆரம்பித்தார். பின்னர் இந்த கோயில் கோபுரம் அவரது தம்பி 1505 ஆம் ஆண்டு அந்த ஒன்பது அடுக்குகள் கொண்ட கோபுர கட்டுமானத்தை நிறைவு செய்தார். இந்த கோயில் கோபுரம் 1824ல் இடி விழுந்து பெரும் சேதமடைந்தது. அன்றிலிருந்து 1980களின் இறுதிவரை இடிந்த மொட்டை கோபுரத்துடனே இந்த கோயில் செயல்பட்டு வந்தது.
இன்றைய அமைச்சர் திரு. பழநிவேல் ராஜன் அவர்களின் தாத்தா திரு. P.T. இராஜன் அவர்கள் அந்த கோபுரத்தை எடுத்துக் கட்ட முயன்றார். ஒரு பெரிய கல்தூணை எடுத்து இடிந்த கோபுரத்தின் மேல் ஏற்றினார்கள். அந்த கல்தூண் தவறிக் கீழே விழுந்து மூன்று துண்டுகளாக உடைந்தது. இது திரு. P.T.இராஜன் அவர்களின் மனதுக்குச் சரியாகப் படவில்லை. அதனால் அவர் கோபுர சீரமைப்பு பணியை அத்துடன் நிறுத்திவிட்டார்.
பின்னர் சிவந்தி ஆதித்தனார் இந்த கோபுர கட்டுமான பணியை பெரும் செலவில் தொடங்கினார். 1990ஆம் ஆண்டு வெற்றிகரமாக இந்த கோபுரத்தின் தொன்மை மாறாமல் கட்டி முடிக்கப்பட்டது. இவரின் கொடை உள்ளத்திற்கு இந்த கோபுரப்பணி ஒரு மணிமகுடம். இன்று இந்த கோபுரம் 178 அடி உயரத்தில் கம்பீரமாக எழுந்து நிற்கிறது. பராக்கிரம பாண்டியன் கட்டிய கோபுரத்தை மீண்டும் கட்டி முடித்ததால் சிவந்தி ஆதித்தனாரை இரண்டாம் பராக்கிரம பாண்டியன் என இன்றும் மக்கள் அழைக்கின்றனர்.
மதம் என்ற வரையறுக்கப் பட்ட கோட்டுக்குள் இந்த பெருந்தகையை அடைக்க முடியாது. பொதுமக்கள் வேண்டு கோளை ஏற்று ஆத்தூர் அருகே பல லட்ச ரூபாய் செலவில் ஒரு கிருத்துவக் கோயில் ஒன்றையும் கட்டிக் கொடுத்துள்ளார்!
இதை எல்லாம் பார்க்கும் போது இவரை நான் பார்த்த வள்ளல் என என் மனம் கூறுகிறது. கிருபானந்தவாரியார் இந்த பெருந்தகையை இருபதாம் நூற்றாண்டின் இராசராச சோழன் என அழைத்தார்.
ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி 1965ஆம் ஆண்டு திறக்கப்பட்டது. 2000 ஆம் ஆண்டு வரை தமிழகத்தில் கல்லூரியில் படிக்க இடம் கிடைப்பது குதிரைக் கொம்புதான். காரணம் கல்லூரிகளின் எண்ணிக்கை மிகக்குறைவு மற்றும் ஒவ்வொரு வகுப்புகளிலும் மாணவர்கள் சேர்க்கையும் குறைவு. நான் பிறந்த ஊரான ஆத்தூருக்கு அருகே இருந்த கல்லூரிகள் மூன்று. அதில் முக்கியமானது ஆதித்தனார் கல்லூரி. இதுதான் எங்கள் ஊருக்கு மிக அருகில் இருக்கும் கல்லூரி. இந்த கல்லூரி இல்லை என்றால் என்னைப் போன்றோருக்குக் கல்லூரி படிப்பு கிடைத்திருக்க வாய்ப்பில்லை..
வள்ளல் சிவந்தி ஆதித்தனாரை நான் இந்த கல்லூரியில் நான்கு அல்லது ஐந்து முறை பார்த்திருப்பேன். கல்லூரி விழாக்களில் அவர் தன்னை முன்னிருத்த மாட்டார். நான் பிறந்த ஊரான ஆத்தூரில் பொதுமக்கள் சில லட்சம் பணம் திரட்டி ஒரு மூன்று மாடி வணிக வளாகத்தைக் கட்டி முடித்தனர். இந்த பணியில் என் தந்தை P.S சிவசுப்பிரமணியம் அவர்கள் பெரும் பங்காற்றினார். என் தந்தை அந்த கட்டிடத்தைத் திறந்து வைக்க வள்ளல் சிவந்தி ஆதித்தனாரை வேண்டினார். அவரும் வந்தார். வணிக வளாகத்தைப் பார்த்து அதிசயித்துப் போனார்.
“நான் பணவுதவி எதுவும் செய்ய வில்லையே? ஆனால் இவ்வளவு பெரிய கட்டிடத்திற்கு என் பெயரை வைத்துள்ளீர்களே! என்று கூறி இந்த பகுதியில் திருமண மண்டபம் உள்ளதா?” எனக் கேட்டார்.
“இல்லை” என்றார் என் தந்தை.
“இந்த வணிக வளாகத்திற்குப் பின்னால் உள்ள வெற்றிடத்தில் ஒரு திருமண மண்டபத்திற்குத் திட்டமிடுங்கள். செலவை நான் பார்த்துக் கொள்கிறேன்” என்றார் அந்த வள்ளல்.
இவ்வாறு இந்த வணிக வளாகம் திறப்பு விழா பிரமாண்டமாக நடந்தது. பல வருடங்கள் கற்பிக்கும் பேராசிரியர்களில் சிலருக்கு ஒரு செய்தியைக் கச்சிதமாக எடுத்துச் சொல்லச் சிரமப்படுவதனைப் பார்த்திருக்கிறேன். “இந்த கொடை வள்ளல் எப்படிப் பேசுவார்?” என ஆவலுடன் காத்திருந்தேன். வள்ளலின் பேச்சு ஏற்ற இறக்கத்துடன் மகிழ்வான துள்ளி ஓடும் நீரோடை போல் இருந்தது. பல வருடம் அனுபவமான மற்றும் தெளிவான மேடைப் பேச்சாக இருந்தது. அவர் சுமார் அரை மணிநேரம் பேசினார். மக்கள் உற்சாகம் அடைந்து ஆரவாரம் செய்தனர்.
இந்த நிகழ்ச்சி சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி திறக்கப்பட்ட சில வருடங்களில் நடந்தது. சுமார் 30 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டாலும் ஐயா பேசியதில் சில கருத்துக்கள் இன்றும் என் மனதில் நிலை கொண்டுள்ளது.
“நான் ஒரு பொறியியல் கல்லூரி திறக்க திட்டமிட்டேன். வணிக ரீதியாக இந்த கல்லூரியைச் சென்னையில் திறக்க என்னிடம் வலியுறுத்தினார்கள். நான் அவர்களுக்கு அளித்த பதில் ” பொறியியல் கல்லூரி திறப்பது நான் பிறந்த இந்த பகுதியின் முன்னேற்றத்திற்காக மட்டுமே. நிச்சயமாக இதில் எனக்கு வணிக நோக்கம் இல்லை. எனவேதான் இந்த பொறியியல் கல்லூரியைச் சென்னையில் ஆரம்பிக்கவில்லை. திருச்செந்தூரில் ஆரம்பித்தேன்” எனப் பேசினார். மேலும் “நான் மேடைப் பேச்சாளன் கிடையாது. ஆனால் சொன்னதைச் செய்து காட்டுபவன்” என தன் உன்னத எண்ண ஓட்டத்தை அருவியாகக் கொட்டித் தீர்த்தார்.
பின்னர் சில வருடங்களில் பல லட்ச ரூபாய் செலவில் ஒரு பெரிய திருமண மண்டபம் அந்த வணிக வளாகத்திற்கு அருகே கட்டிக் கொடுத்தார். அதனையும் கொடுப்பதற்காகவே பிறந்த வள்ளல் சிவந்தி ஆதித்தனார் திறந்து வைத்தார்.
மேலும் இவர் இப்பகுதி பெண்கள் வளர்ச்சிக்காக தன் தாயார் பெயரில் கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரியைத் திருச்செந்தூரில் ஆரம்பித்தார். இது ஒரு சுயநிதிக் கல்லூரி. அதாவது அரசு உதவி எதுவும் பெறாமல் முழு செலவையும் தானே ஏற்று நடத்தும் கல்லூரி எனப் பொருள். இவ்வகைக் கல்லூரிகளில் திருச்செந்தூரில் இயங்கிவரும் கோவிந்தம்மாள் மகளிர் கல்லூரியில்தான் மிகக் குறைந்த கட்டண வசதியில் மகளிர்க்குக் கல்வி வழங்கப்படுகிறது !
சில நாட்களுக்கு முன் பல்கலைக் கழகத்தில் ஒரு பட்டமளிப்பு விழா நடைபெற்றது. அதில் இந்த கல்லூரியில் பயின்ற மூன்று மாணவியர்கள் மொத்தம் நான்கு தங்கப் பதக்கங்களை வென்றனர் ! இது விளக்குவது என்னவென்றால் இந்த கல்லூரியில் குறைந்த செலவில் தரமான கல்வி வழங்கப்படுகிறது. மேலும் பதக்கம் பெற்ற மூன்று மாணவிகளில் லெ. திவ்யா முதல் தலைமுறை பட்டதாரி ! இதிலிருந்து இந்த கல்லூரி இல்லை என்றால் இந்த பகுதியில் பெண்கள் மேல் படிப்பு சவாலானதாகவே இருந்திருக்கும் என்பது புரியும்.
“சமூக முன்னேற்றத்திற்காகப் பல கோணத்தில் சிந்தித்துச் செயலாற்றிய இந்த பெருந்தகையால் குக்கிராமங்களும் இங்குள்ள பின்தங்கிய சமுதாய மக்களும் முன்னேற்றமடைந்துள்ளனர்” என்றால் மிகையாகாது.
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக வளாகத்தில் இரண்டு துறைகள் நடத்துவதற்கு வசதியாக ஒரு கட்டடம் கட்டித்தந்துள்ளார். அந்த கட்டத்தில் 200 பேர்கள் கூடி பேச ஒரு பெரிய அறையும் உள்ளது. அதன் அருகே வசதியாக உணவுப் பரிமார ஒரு வளாகமும் உள்ளது. பல்கலைக் கழகத்தில் இயங்கிவரும் இந்தக் கட்டிடமும் அவரின் பெரிய மனதுக்கு ஒரு எடுத்துக்காட்டு.
கடின உழைப்பு, நேரம் தவறாமை, நல்லோரை ஆதரிப்பது, மற்றும் முடிந்தவரைப் பிறருக்கு உதவவேண்டும் என்பதையே ஆதித்தனார் கல்லூரி எங்களுக்கு கற்றுத்தந்தது.
என் காலத்தில் தமிழகத்தில் பாமர மக்களைச் சென்றடையும் வகையில் இவ்வளவு கொடைகளைச் செய்தது வள்ளல் சிவந்தி ஆதித்தனாரைத் தவிர யாரும் இல்லை என்றே கருதுகிறேன். அதனால் இவரை நான் பார்த்த கர்ணன் என்று அழைப்பதில் பெருமை கொள்கின்றேன். இவரின் சேவையைக் கண்ட பல பல்கலைக் கழகங்கள் “டாக்டர்” பட்டம் கொடுத்து மகிழ்ந்தன. மத்திய அரசு பத்மஸ்ரீ பட்டம் கொடுத்து கௌரவப் படுத்தியது.
செப்டம்பர் 24 அன்னாரின் பிறந்த தினம். இந்நன்னாளில் நான் பார்த்த கர்ணனின் நினைவலைகள் இந்த கட்டுரையை எழுதத் தூண்டியது..
பேராசிரியர் சி சுதாகர்


