இந்தியாவில் நடந்த முதல் தொழிலாளர் போராட்டம் நடைபெற்ற தூத்துக்குடி கோரல் மில் பகுதியில் நினைவுச்சின்னம் அமைக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வ.உ.சிதம்பரனாரின் 155-வது பிறந்த தின விழாவை முன்னிட்டு, இந்தியாவில் நடைபெற்ற முதல் தொழற்சங்கப் போராட்ட வரலாற்றைப் பதிவு செய்யும் வகையில் தூத்துக்குடியில் உள்ள கோரல் மில் பகுதியில் நினைவுச்சின்னம் அமைக்க தமிழக முதலமைச்சருக்குக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் வழக்குரைஞராகவும், விடுதலைப் போராட்ட வீரராகவும் திகழ்ந்ததுடன், தொழிலாளர் நலனுக்காகவும் தீவிரமாகப் பாடுபட்டவர். தமிழ்நாடு பாடநூல் கழகம் வெளியிட்ட “வ.உ.சி. பன்னூல் திரட்டு” நூலில் குறிப்பிட்டுள்ளபடி, 1908-ஆம் ஆண்டு மார்ச் மாதம் தூத்துக்குடி ‘கோரல் மில்’ தொழிற்சாலையில் குறைந்த கூலிக்கு 12 மணி நேரத்திற்கும் மேலாக உழைக்க நிர்ப்பந்திக்கப்பட்ட தொழிலாளர்களை ஒன்றுதிரட்டி வ.உ.சி. போராடினார்.
தொழிலாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு நிதி திரட்டி உதவி செய்த வ.உ.சி.யின் தலைமையில் நடைபெற்ற அந்தப் போராட்டம் மாபெரும் வெற்றி பெற்றது. ஆலை நிர்வாகம் தொழிலாளர்களின் சம்பளத்தை உயர்த்தியதுடன், வேலை நேரத்தைக் குறைத்து விடுமுறை நாட்களையும் அறிவித்தது. இதுவே இந்தியாவில் வெற்றி பெற்ற முதல் தொழற்சங்கப் போராட்டமாக அமைந்தது.
வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த கோரல் மில் தொழிற்சாலை தற்போது இடிக்கப்பட்டு மனைப்பிரிவுகளாக்கப்பட்டு வருகிறது. எனவே, இந்தியாவில் முதன் முதலாகத் தொழற்சங்கப் போராட்டம் அமைந்த வரலாற்று நிகழ்வைப் போற்றும் வகையில், அந்த இடத்தில் ஒரு நினைவுச்சின்னம் அமைக்கத் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சைவநெறி ஆசிரியர் காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பான தமிழக முதலமைச்சருக்கு கோரிக்கை அனுப்பப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


