திருச்செந்தூர் வட்டத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் அரசுத் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
தூத்துக்குடி மாவட்டம், மணப்பாடு கடற்கரை பகுதியில் சுற்றுலா வளர்ச்சித் துறை சார்பில், அரசு நிலத்தில் பொது மற்றும் தனியார் முதலீட்டில் சுற்றுலா வளர்ச்சித் திட்டப் பணிகளை அமைப்பது குறித்து மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
இந்து சமய அறநிலையத் துறை சார்பில், குலசேகரன்பட்டினம் அருள்மிகு முத்தாரம்மன் திருக்கோவிலில் உலகப் புகழ்பெற்ற தசரா திருவிழா விரைவில் நடைபெறவுள்ளதையொட்டி, பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளான குடிநீர், கழிப்பறை வசதி, வாகன நிறுத்துமிடம் (Пார்க்கிங்) உள்ளிட்ட முன்னேற்பாடு பணிகள் மற்றும் பாதுகாப்பு வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
செட்டியாபத்து கிராமத்தில் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் சார்பில் விவசாயிகள் மேற்கொண்டு வரும் பனைப் பொருட்கள் தயாரிப்புப் பணிகளின் செயல்பாடுகளை ஆட்சியர் பார்வையிட்டார்.
காயல்பட்டினம் நகராட்சிப் பகுதியில் வெளியேறும் மழைநீர்க் கால்வாய் பணிகள், கொம்புக்கரை பகுதியில் உள்ள வெள்ள நிவாரண முகாம்களில் அமைக்கப்பட்டுள்ள அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகளை ஆய்வு செய்தார்.
கடையக்குடி திடக்கழிவு மேலாண்மை வளாகத்தில் செயல்பட்டு வரும் நாய்கள் கருத்தடை அறுவை சிகிச்சை மையத்தையும் ஆட்சியர் நேரில் பார்வையிட்டார்.
ஆய்வின் போது, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் நா. சரவணன், திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியர் கௌதம், இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர் ரோஜாலிசுமதா, காயல்பட்டினம் நகராட்சி ஆணையர் மகேஸ்வரன், மாவட்ட சுற்றுலா அலுவலர்சீதாராமன், திருச்செந்தூர் வட்டாட்சியர் தங்கமாரி மற்றும் பல்வேறு அரசுத் துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.


