தூத்துக்குடி – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வாகைகுளம் சந்திப்பில் போதிய பாதுகாப்பு வசதிகள் இல்லாததால் விபத்துகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. நேற்று மாலை நடைபெற்ற விபத்தில் இரு பெண்கள் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி – மதுரை தேசிய தங்க நாற்கர நான்குவழிச் சாலையில் முக்கியச் சந்திப்பாகத் திகழும் வாகைகுளம் சந்திப்பைத் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்களும், சுற்றுவட்டார கிராம மக்களும் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இச்சந்திப்பில் போதிய போக்குவரத்துப் பாதுகாப்பு வசதிகள் இல்லாதது பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக இரவு நேரங்களில் தேவையான உயர் கோபுர மின்விளக்குகள் (High-mast lights) இல்லை. மேலும், வேகத்தடைகள், எச்சரிக்கைப் பலகைகள் மற்றும் ஒளிரும் சாலைக் குறியீடுகள் எதுவுமே முறையாக அமைக்கப்படவில்லை.

பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாத சூழலில், நேற்று மாலை இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பெண்கள் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், அவர்கள் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே கடும் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.

தொடர்ந்து நடைபெறும் விபத்துகளால் வாகன ஓட்டிகள் அச்சத்துடனேயே இச்சாலையைக் கடந்து செல்லும் நிலை உருவாகியுள்ளது. எனவே, மேற்கொண்டு ஏற்படும் உயிரிழப்புகளைத் தடுக்கும் வகையில், தேசிய நெடுஞ்சாலைத் துறையும் காவல்துறையும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

வாகைகுளம் சந்திப்பில் உயர் மின்விளக்குகள், பேரிகார்டுகள், எச்சரிக்கைப் பலகைகள் மற்றும் தேவையான அனைத்துப் போக்குவரத்துப் பாதுகாப்பு ஏற்பாடுகளையும் விரைந்து செய்ய வேண்டும் என வாகன ஓட்டிகளும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.