சி.எஸ்.ஐ. தூத்துக்குடி – நாசரேத் திருமண்டல சுற்றுச்சூழல் கரிசனைத் துறை மற்றும் குலசேகரப்பட்டினம் சேகரம் இணைந்து நடத்திய பெண்கள் திறன் மேம்பாட்டு பனை ஓலைக் கைவினைப் பயிற்சி முகாம் வடக்கூர் யோவான் ஸ்நானகர் ஆலயத்தில் ஆகஸ்ட் 25, 26, 27 ஆகிய மூன்று நாட்களில் நடைபெற்று நிறைவுற்றது.
நிகழ்ச்சிக்குக் குலசேகரப்பட்டினம் சேகர குருவானவர் அருட்திரு. ஞா. பாஸ்கரன் ஆரம்ப ஜெபம் செய்து வரவேற்புரையாற்றினார். தொடர்ந்து தூத்துக்குடி – நாசரேத் திருமண்டல சுற்றுச்சூழல் கரிசனைத் துறைச் செயலர் அருட்திரு. ஜாண் சாமுவேல் சிறப்புரையாற்றி, சுற்றுச்சூழல் பாதுகாப்பில் இயற்கை சார்ந்த கைவினைப் பொருட்களின் அவசியத்தை வலியுறுத்தினார்.
மூன்று நாட்கள் நடைபெற்ற இப்பயிற்சி முகாமில் தேசிய பயிற்சியாளர் டையனா பயிற்சி அளித்தார். இதில் வயது வரம்பின்றி 28 பெண்கள் ஆர்வமுடன் பங்கேற்றுப் பயனடைந்தனர்.
பங்கேற்பாளர்களுக்கு பனை ஓலையால் மிட்டாய் பெட்டி, பால் பாட்டில் பவுச், தண்ணீர் பாட்டில் பவுச், லஞ்ச் கூடை, ஸ்நாக்ஸ் கூடை, பென்சில் பவுச், வளையல், கம்மல், பேபி கம்மல், சடைமாட்டி, சேலை ஊக்கு, ஸ்டார் கீசெயின், இருதய கீசெயின், கிளிக்கூண்டு கீசெயின், ஏணிப்படி கீசெயின், பணப்பை, பனை ஓலைக் கூடை, பூக்கூடை, பரிசுப் பெட்டி, அலங்கார நட்சத்திரங்கள் மற்றும் வீட்டு அலங்காரப் பொருட்கள் உள்ளிட்ட சுற்றுச்சூழலுக்கு உகந்த பல்வேறு கைவினைப் பொருட்கள் தயாரிக்கும் முறைகள் கற்பிக்கப்பட்டன.
பயிற்சியின் மூலம் பெற்ற அனுபவங்களையும் நன்மைகளையும் சர்மிளா ஜேசுவடியான், ஜாண் ஜேசு மற்றும் ரெக்ஸ்லின் ஜெபராஜ் ஆகியோர் பகிர்ந்து கொண்டனர். அகஸ்டா ஜெனிபர் நன்றியுரையாற்றினார். நிறைவு ஜெபத்தைத் திருமண்டல சுற்றுச்சூழல் கரிசனைத் துறைச் செயலர் அருட்திரு. ஜாண் சாமுவேல் ஏறெடுத்தார். இம்முகாமிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் ஜெபக்கனி பாஸ்கரன் மற்றும் குலசேகரப்பட்டினம் சேகர கமிட்டி உறுப்பினர்கள் சிறப்பாகச் செய்திருந்தனர்.


