குடிநீர் பிரச்சனை குறித்துக் கேட்கச் சென்ற பெண்களிடம் மரியாதைக்குறைவாக நடந்துகொண்ட மாநகராட்சி உதவி பொறியாளர் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கக் கோரி, தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் பிரியங்காவிடம் பல்வேறு அரசியல் இயக்கங்கள் சார்பில் மனு அளிக்கப்பட்டது.
தூத்துக்குடி மாநகராட்சி தெற்கு மண்டலத்திற்குட்பட்ட முத்தையாபுரம் சுந்தர் நகர், சுந்தரம் நகர், ஜே.எஸ். நகர் ஆகிய பகுதிகளில் கடந்த நான்கு நாட்களாகக் குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து முறையிடச் சென்ற பெண்களிடம், தெற்கு மண்டல மாநகராட்சி உதவி பொறியாளர் செல்வம் என்பவர் கை செய்கை மூலம் இழிவாகப் பேசியதாகவும், அரசு அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி மரியாதைக் குறைவாக நடந்துகொண்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இச்சம்பவத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரி மீது உடனடி நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழர் விடியல் கட்சி, மனிதநேய ஜனநாயக கட்சி மற்றும் தமிழ் புலிகள் கட்சி நிர்வாகிகள் மாநகராட்சி ஆணையர் பிரியங்காவிடம் இன்று மாலை நேரில் சந்தித்துக் கோரிக்கை மனு அளித்தனர். மனுவைப் பெற்றுக்கொண்ட மாநகராட்சி ஆணையர், இப்புகார் குறித்து உரிய விசாரணை நடத்தி உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார். மேலும், சம்பவம் தொடர்பான காணொளி ஆதாரங்களை ஆணையரின் நேர்முக உதவியாளரிடமும் நிர்வாகிகள் காண்பித்துள்ளனர்.
இப்பிரச்சனையில் விரைந்து நடவடிக்கை எடுக்கப்படாத பட்சத்தில், பொதுமக்களையும் ஜனநாயக சக்திகளையும் ஒன்று திரட்டிப் பிரம்மாண்ட போராட்டம் நடத்தப்படும் என மனு அளித்த நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். இந்நிகழ்வில் தமிழர் விடியல் கட்சி சேமா. சந்தனராஜ் பாண்டியன், மனிதநேய ஜனநாயக கட்சியின் தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் M. அசன், தமிழ் புலிகள் கட்சியின் மண்டலச் செயலாளர் செ. தாஸ் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.


